இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரும் விபரங்களை அவரிடம் கையளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.
மகாவலி கேந்திர நிலையத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதியிடம் மூன்று விடயங்கள் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார் வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர.
இவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதியமைச்சராக இருந்தவர். கடற்படையில் பணியாற்றிய இவர் சிவில் பாதுகாப்பு படையின் தளபதியாக இருந்தவர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கடுமையான இனவாதத்தைக் கக்கி பிரசாரம் செய்த இவர் தோல்வி அடைந்திருந்தார். இவர் எழுப்பிய முதலாவது கேள்வி பிரகீத் எக்னெலிகொட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகள் பற்றியது.
இரண்டாவது கேள்வி இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகள் மற்றும் போரின் போதான அவற்றின் நடவடிக்கைகள் பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரியுள்ள விபரங்கள் பற்றியது.
மூன்றாவது கேள்வி அரசியலமைப்பு மாற்றத்தில் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றியது.
இதில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சையிட ராட் அல் ஹூசைன் கோரியிருந்த இராணுவ நடவடிக்கை தொடர்பான விபரங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி அவ்வாறான எந்தத் தகவல்களும் வழங்கப்படாது என்று உறுதியளித்திருந்தார்.
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் மூன்றாவது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கிரித்தல முகாமில் உள்ள ஆவணங்களை நீதிமன்ற விசாரணைகளுக்கு ஒப்படைக்க மறுக்கும் இராணுவத்துக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ’கோரியுள்ள விபரங்களை ஒப்படைக்க மாட்டேன் என்று மறுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாக கூறமுடியாது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தகவல்களை வெளியிட மறுப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அவ்வாறு ஆவணங்கள், தகவல்களை வெளியிட்டால் போர் தொடர்பாக இன்னும் வெளிவராத பல இரகசியங்கள் வெளிப்பட்டு விடும் என்பது தான் அந்தக் காரணம்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரயிருந்த விபரங்களில் முக்கியமானது போரின் போது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் செயற்பாடுகள் குறித்த விடயம் தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் திருப்பங்களை ஏற்படுத்ஹதி படைத்தரப்பை வெற்றியை நோக்கிக் கொண்டு சென்றதில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி முக்கிய பங்கை வகித்திருந்தது.
LRRP அல்லது LRP என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த ஆழ ஊடுருவும் அணி மூன்றாம் கட்ட ஈழப் போரின் பிற்காலத்ஹதில் – 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது. முதலில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாகாணத்தில் தொடங்கிய இதன் நடவடிக்கைகள் பின்னர் வவுனியாவுக்கு வடக்கே விரிவாக்கப்பட்டது. வான் புலிகள் படைப்பிரிவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கேர்ணல் சங்கர் புதுக்குடியிருப்புக்கு அருகே 2001 செப்டம்பர் 26ம் திகதி இந்தப் படைப்பிரிவின் தாக்குதலில் தான் கொல்லப்பட்டார்.
அதற்குப் பின்னர் தான் இந்தப் படைப்பிரிவு பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கின.
நான்காவது கட்ட ஈழப் போர்ஹ வெடிப்பதற்கு முன்னரே இரண்டு தரப்பும் நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தன. அப்போது வன்னியில் புலிகளின் பிரதேசத்திற்குள் முழங்காவிலையும் தாண்டடிச் சென்று தாக்குதல் நடத்தும் அளவுக்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் வலுவுடன் இருந்தன.
புலிகளின் பல முக்கிய தளபதிகள் இந்த அணியில் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அவர்களில் கடற்புலிகளின் தளபதி லெப்.கேர்ணல் கங்கை அமரன், வட போர்முனைத் தளபதிகளில் ஒருவராக இருந்த லெப்.கேர்ணல் மகேந்தி, இராணுவ புலனாய்வுத்துறை தளபதி கேர்ணல் சார்ள்ஸ் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
இந்த அணியின் தாக்குதல்களில் இருந்து தப்பியவர்களில் பிரிகேடியர்கள் தமிழ்ச் செல்வன், சொர்ணம், பால்ராஜ், ஜெயம் போன்றவர்களும் அடங்கியிருந்தனர்.
நான்காவது கட்ட ஈழுப்போரில் ஆழ ஊடுருவும் படையணி புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி தகவல்களையும் சேகரித்தது. அதேவேளை தாக்குதல்களையும் நடத்தியது. இதனால் முன்னரங்கப் பாதுகாப்பில் புலிகளால் முழுக் கவனத்தையும் செலுத்த முடியாமல் உள்ளகப் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தவும் அதற்காக கூடுதல் வளங்களை ஒதுக்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது புலிகளுக்குத் தலைமை மற்றும் தளபதிகளின் பாதுகாப்பின் மீது அதீத அக்கறை செலுத்த வேண்டி இருந்தது. அதைவிட தமது பிரதேசத்திற்குள் போருக்கான தயார்படுத்தல்களை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலையும் புலிகளுக்கு ஏற்பட்டது.
பின்தளம் மற்றும் கட்டளைத் தலைமை பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி புலிகளின் கவனத்தை முன்னரங்கின் மீது ஒன்று குவிய விடாமல் செய்ததில் ஆழ ஊடுருவும் அணியின் பங்கு அபரிமிதமானது.
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் தளபதிகள் பிரமுகர்கள் மட்டும் சிக்கினர் என்று கூற முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் போன்றவர்களும், பாடசாலை மாணவர்களும் கூட இத்தகைய கிளைமோர் தாக்குதல்களில் சிக்கியிருந்தனர்.
அதற்கு ஆழ ஊடுருவும் அணி மீது புலிகள் குங்ஙம் சாட்டியிருந்தனர். எனினும் இராணுவத்தரப்பு அப்போது அதனை நிராகரித்திருந்தது.
போர் நடந்து கொண்டிருந்து போது மட்டுமன்றி போர் முடிந்த பின்னரும் கூட ஆழ ஊடுருவும் அணி என ஒன்று இலங்கை இராணுவத்தில் கிடையவே கிடையாது என்று இராணுவத் தரப்பு கூறி வந்தது.
அதற்கு முக்கியமான காரணம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடந்த தாக்குதல்கள் அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது தான். எனினும் 2012 முதன்முறையாக ஆழ ஊடுருவும் அணியின் கட்டளை அதிகாரியாக இருந்து கேர்ணல் லலித் ஜயசிங்கவுக்கு வீர விக்ரம விபூசண என்ற உயர் விருது வழங்கப்பட்ட போது இந்த இராணுவ அணியை அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டது.
லெப். கேர்ணல் லலித் ஜயசிங்கவும் கூட புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒட்டிசுட்டான் பகுதியில் ஊடுருவித் தாக்கிவிட்டுத் திரும்பிய போது தான் புலிகளின் தாக்குதலில் சிக்கிப் பலியாகியிருந்தார்.
எவ்வாறாயினும் இந்ஹத ஆழ ஊடுருவும் அணி பற்றிய பெருமளவு இரகசியங்களை இராணுவத் தரப்பு இன்னமும் மறைத்தே வைத்திருக்கிறது.
கடந்த வாரம் இந்த ஆழ ஊடுருவும் அணியை உருவாக்கியது பற்றிய சில தகவல்களை இராணுவத் தலைமையகம் வெளியிட்டிருக்கிறது.
மேயர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க பற்றி இராணுவத் தலைமையகம் வெளியிட்ட செய்தியில் தான் இந்தத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
கடந்த மாதத் தொடக்கத்தில் இடம்பெற்ற இராணுவக் கட்டளை அமைப்பு மாற்றத்தின் போது யாழ். படைகளின் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேயர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கடந்த மாதம் 28ம் திகதியே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.
மேயர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்காவுக்கும் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணிக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உள்ளது.
மேயர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆரம்பத்தில் பொறியியல் படைப்பிரிவில் தான் இணைந்திருந்தார். எனினும் 1989ம் ஆண்டு இவர் தானாகவே முன்வந்து விசேட படைப்பிரிவில் இணைந்து கொண்டார்.
விசேட படைப்பிரிவின் முதலாவது பற்றாலியனில் ஒரு ஸ்குவாட்றன் தளபதியாக இருந்த இவர் பின்னர் ஆழ ஊடுருவும் அணியை உருவாக்கும் திட்டத்துடன் மூன்றாவது விசேட படைப்பிரிவு பற்றாலியன் உருவாக்கப்பட்ட போது அதன் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.
இந்த விபரங்களை இப்போது வெளியிட்டுள்ளது இராணுவத் தலைமையகம்.
அதாவது இராணுவத்தின் மூன்றாவது விசேட படைப்பிரிவு பற்றாலியன் ஆழ ஊடுருவும் படையணி கருத் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது என்பதை இராணுவத் தரப்பு இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் இந்த ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை ஐநா மனித உரிமை ஆணையாளரிடம் வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.
அரசாங்கமும் இராணுவத் தரப்பும் கூறுவது போன்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெளிப்படைத் தன்மையுடன் தான் நடத்தப்பட்டது. என்றால் சர்வதேசப் போர் நியமங்களுக்கு ஏற்ப மனித உரிமைகளை மதித்தே நடத்தப்பட்டது என்றால் எந்த இரகசியத்தையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை.
இலங்கை இராணுவம் போரில் வெற்றியைப் பெற்று விட்டது. இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை. இப்படியான நிலையில் இரகசியங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் இராணுவத்தின் ஒரு கரந்தடிப்படைப் பரிவாக செயற்பட்ட படையணியின் இரகசியங்களை அரசாங்கம் மறைக்க முற்படுகிறது என்றால் அதன் அரத்தம் என்ன?
சுபத்ரா
-http://www.tamilwin.com