முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு நோர்வே நிதியுதவி

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் மறுவாழ்விற்காக நோர்வே அரசாங்கம் நிதி உதவி வழங்கியுள்ளது. அனைத்துலக குடிபெயர்தல் அமைப்பின் ஊடாக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரால்ட்ஸ்டாட், அனைத்துலக குடிபெயர்தல் அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் டான்சிகர் ஆகியோருக்கு இடையில் குறித்த திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக முன்னாள் போராளிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2009-ம் ஆண்டு முதல் அனைத்துலக குடிபெயர்வு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீள இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனிதப் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனைத்துலக குடிபெயர்வு அமைப்பு அறிவித்துள்ளது. மூவாயிரம் முன்னாள் போராளிகளுக்கு ஏற்கனவே நேரடியாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு நோர்வே அரசாங்கம் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.