யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடன் விசாரணை தேவை!- சரத் பொன்சேகா எம்.பி.

sarath_fonsekaஎமது நாட்டின் மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நேற்றைய தினம் பதவியேற்ற சரத் பொன்சேகா பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

முதலில் எனக்கு மீண்டும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத்தந்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சியை சீர்குலைப்பதற்கு குழுவொன்று முயற்சித்து வருகின்றது. அதற்காக பல சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அச்சதி முயற்சிகளை தோற்கடித்து நல்லாட்சியைப் பாதுகாப்பதற்கு முழுப் பங்களிப்புடன் அர்ப்பணிப்பாகச் செயற்படுவேன்.

எனக்கு விரைவில் அமைச்சுப் பதவி வழங்கவுள்ளதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதியும், பிரதமரும் அதுதொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவ்வாறானதொரு பதவி கிடைக்கும் பட்சத்தில் அதனூடாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து சேவையைத் தொடர்வேன்.

யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களினது பங்களிப்பும், ஆலோசனைகளும் அவசிமானது. தற்போது இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களும், சந்தேகங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணைகள் அவசியம்.

எனவே, இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினருக்குக் கட்டளை பிறப்பித்தவன் என்ற வகையில் அந்த இராணுவத்தினரை இத்தகைய குற்றச்சாட்டுக்களில் இருந்து மட்டுமல்லாது அவர்களுடைய கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய பாரிய கடமை எனக்கு உள்ளது.

யுத்தக்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனும், ஆலோசனைகளுடனும் நடைபெற்றால் அது நம்பகத்தன்மை வாய்ந்தாக அமையும். இதுவே எனது நிலைப்பாடாகும். அதற்காக நான் முழு அளவில் பங்களிப்பை வழங்கவுள்ளேன்.

கடந்த 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ம் திகதி என்னை சிறையிலே அடைத்தார்கள். அதே மாதம் அதே திகதியில் எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிபார்சு செய்த தகவல் வெளிவந்துள்ளது. மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வேறொன்றை மையமாக வைத்து தேங்காய் உடைப்பதால் எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை.

மிகப்பெரும் கட்சியொன்று காணப்பட்ட போதும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எவ்வாறு புதிய கட்சியொன்றை ஆரம்பித்து மக்கள் ஆதரவைப் பெறமுடியும். அவ்வாறு கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டால் அது வெறும் நாடகமாகவே அமையும். அவ்வாறான நாடகங்களுக்கு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுடன் எனக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. இது ஜனநாயக நாடு என்பதால் அவரவருக்கென்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.அவற்றை வெளிப்படுத்துவதற்கு பூரண உரிமை உண்டு.

நான் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றமை குறித்து அவருடைய நிலைப்பாடு தொடர்பாக எந்தவிதமான கருத்துக்க ளையும் கூறமுடியாது. அவர் கட்சியிலிருந்து வெளியேறுவதாலோ அல்லது தொடர்ந்தும் இருப்பதாலோ எனக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை.

ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நல்லாட்சியை முன்னெடுத்து நாட்டின் எதிர் காலத்தை பாதுகாப்பதற்காக கடினமான பாதையில் பயணித்த அனைவரும் ஒன்றி ணைந்துள்ளார்கள். ஆகவே அதனை மையமாக வைத்துச் செயற்படுவோம். யாருக்கு எதிராகவும் செயற்படவேண்டிய அவசியமில்லை என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: