ஐ.நா.தீர்மானம் அரசுக்கு சொந்தமானது. அது வெளித்தரப்பினரால் கொண்டுவரப்பட்டதொன்றல்ல. அத்தீர்மானத்தில் ஒன்றை அமுல்படுத்த முடியும். பிறிதொன்றை அமுல்படுத்த முடியாதென பிரித்து அரசாங்கம் செயற்பட முடியாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தனது விஜயத்தின் இறுதிநாளான நேற்று எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து நீண்ட நேரம் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா,
புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்.செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. நீண்ட நேரமாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்திருந்தோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக முறையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.
முரண்பாடுகளை அடுத்து காணப்படும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நாம் கலந்துரையாடினோம். நாட்டிலுள்ள தேசிய பிரச்சினை உட்பட காணிகள், கைதிகள், காணாமல்போனோர், தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளின் போது அதிக கவனம் செலுத்தியிருந்தோம்.
உண்மையான நல்லிணக்கம் விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்படுவதனால் நிரந்தரமான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமென்பதையும் எடுத்துரைத்தோம்.
அரசியல் கைதிகள் தொடர்பாக அவர் வெளியிட்டிருப்பது அவருடைய கருத்தாகும். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அக்கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
பொதுமன்னிப்பின் அடிப்படையில் தான் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டிய தேவையில்லை. அவர்களை விடுவிப்பதற்கு வேறுபல ஒழுங்குகள் காணப்படுகின்றன.
இச்சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துரைக்கையில்,
ஜுன் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கான விஜயத்தின் போது அவதானித்த விடயங்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டினை அல் ஹுசைன் எடுத்துரைக்க முடியும்.
நாங்கள் நாட்டில் தற்போது காணப்படும் உண்மையான நிலைமையினையே எடுத்துரைத்துள்ளோம். காணாமல் போனோரின் உறவுகள் தமது பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளனர். நாமும் அவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளோம்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எவ்வாறான முன்னேற்றங்கள் காணப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பான ஆராயவே அவர் இங்கு வந்துள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகமென்றை அமைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் அது நிறைவேற்றப்படவில்லை. இதனை மக்களிடத்தில் சென்று கேள்ளியெழுப்பி கண்டறிய வேண்டிய அவசியம்
ஆணையாளருக்கு இல்லை. அவர் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளார். அவர் போதிய தகவல்களையும் யதார்த்த நிலைமையினையும் பெற்றிருப்பார்.
ஆகவே தகவல்கள் போதியளவில் கிடைக்கவில்லையென கூறமுடியது.
காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களையும் அவரிடத்தில் எடுத்துக் கூறினோம். அது தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்தியுள்ளதோடு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வழிசமைப்பார் என்றார்.
-http://www.tamilwin.com