அமிர்தலிங்கம் காட்டிய வழியை கூட்டமைப்பு நிராகரிக்குமா!

ilankai-tamil-arasu-kadchi01தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

ஒன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக விளங்கிய அமிர்தலிங்கத்துக்கு எதிரானது.அடுத்தது வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கர நேசனுக்கு எதிரானது

முதலாவது பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அரசுத் தரப்பில் அங்கம்வகித்த அமைச்சர் தொண்டமான், பிரதி நீதி அமைச்சர் ஷெல்டன் ரணராஜா ஆகியோர் இதனை எதிர்த்து வாக்களித்தனர்.

இதில் தொண்டமான் தனது ஆளுமையை நீருபித்தார். ஷெல்டன் தான் மனச்சாட்சிப்படி வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.

அதாவது மனச்சாட்சியுள்ள சிங்கள மக்களின் பிரதி நிதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

இப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் நீங்கள்பதவி விலகுங்கள் அதுதான் ஜனநாயக முறைமை என்று சம்பந்தன் ஐயா உட்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் எவரும் அமிர்தலிங்கத்தைக் கோரவில்லை.

அவரும் ராஜினாமா செய்யவில்லை, பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததற்காக ஷெல்டன் ரணராஜா மீது ஜே . ஆர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

சிங்களவரில் கூட ஷெல்டன் போல மனச்சாட்சி உள்ள ஒருவர் இருந்திருக்கிறார் ஆனால் வட மாகாண சபையில் …………. ? பொப்பி மலரைச் சூடி படையினரைக் கௌரவித்தார் சுமந்திரன்.

அவரைத் திருப்திப் படுத்த கார்த்திகை மலரைச் சூடிய ஐங்கரநேசனுக்கு கழுத்தறுத்துள்ளனர் அனந்தி, பசுபதிப்பிள்ளை, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள்.

எனவே இவர்கள் மாவீரர்களின் தியாகம் போன்றவற்றை எதிர் காலத்தில் உச்சரிக்காமலிருப்பது நல்லது . அது அவர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.

பிரேரணையைக் கொண்டு வந்த லிங்கநாதனுக்கு கார்த்திகை பூ சம்பந்தப்பட்ட விடயங்கள் எதுவும் தெரியாது. முள்ளிவாய்க்கால் வரை படையினருடன் ஒத்துழைத்தவர் அவர்.

இனத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டோருக்கு எதிராக `மலர் மாளிகையில்`யில் மேற் கொள்ளப்பட்ட அட்டூழியங்களின் பங்காளர் அவர்.

ஆனால் அனந்தி , பசுபதிப்பிள்ளை போன்றோர் முள்ளிவாய்க்கால் நெருப்பைத் தாண்டி வந்தவர்களல்லவா? ” நீயுமா புருட்டஸ் “? என்று யூலிய சீசர் கேட்டதுதான் தமிழருக்கு நினைவுக்கு வருகிறது.

அமிர்தலிங்கத்தின் வழியில் வந்தவர்கள் தான் மாவை சேனாதிராஜாவும், சம்பந்தனும் .தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் அமிர்தலிங்கம் எப்படி நடந்து கொண்டாரோ அப்படியே நடந்து கொள்ள பொ. ஐங்கரநேசன் தீர்மானிப்பாராயின் அவ்வாறே விட்டு விட வேண்டும்.

ஏனெனில் அமிர்தலிங்கத்தை விட மேம்பட்ட ஜனநாயக வாதிகள் என்று இவர்களைக் கூறமுடியாது.

இந்த பிரேரணையைக் கொண்டுவந்த பின்னணி வெட்ட வெளிச்சமானது தமிழ் மக்கள் பேரவை தொடர்பான விடயத்தில் முதலமைச்சருக்கு எதிராகக் கையொப்பமிட மறுத்தமையே முதலாவது விடயமாகும் .

இரண்டாவது கூட்டுறவுக் துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபா நிதியை பிரமுக வங்கி என்ற தனியார் நிறுவனத்திடம் அவைத் தலைவர் சி. வி . கே . சிவஞானம் மூழ்கடித்தமை தொடர்பான விடயங்களை கணக்காய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்தமை.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழுத்தியுள்ளது சம்பந்தன் மாவை – சுமந்திரன் – சிவஞானம் கூட்டணி, தமிழ் மக்கள் பேரவையுடன் சம்பந்தப்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரர் சர்வேஸ்வனையும் இப் பேரவை தொடர்பான கூட்டத்திற்கு தனது பிரதிநிதியை அனுப்பி உள்ள புளொட்டின் உறுப்பினர். லிங்கநாதனையும் விவசாய அமைச்சர் பதவிக்கு மோத விட்டுள்ளனர்.

இதன் மூலம் தமிழ் மக்கள் பேரவை பலவீனமாகும் என்பது அவர்கள் கணிப்பு .

இந்த நிலையில் பொ. ஐங்கரநேசன் தானாகப் பதவி விலக வேண்டியது இல்லை. பெரும்பான்மையான எதிரணி உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாறாக சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராகப் பதவி வகிக்கையில் இவர் ராஜினாமா செய்யவேண்டியதில்லை.

ஒரு வேளை இவர் இல்லாமல் அமைச்சரவை இயங்க வேண்டிவந்தால் புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டியதில்லை. ஏனெனில் மாகாண சபை அமைச்சர் எண்ணிக்கை ஐந்துக்கு மேற்பட கூடாது என்பதுதான் சட்டமே தவிர குறையலாம். அந்த அமைச்சுக் பொறுப்புக்களை முதல்வரே கவனிக்கலாம்.

கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட அனந்தி எப்படி பதவியில் தொடர்கிறரோ அது போல் உறுப்பினர் பதவியில் இருந்த படியே முதல்வரின் செயற்பாட்டுக்கு உதவலாம் ஐங்கரநேசன்

இன்னொரு விடயம் கடந்த முறை ரணில் பிரதமராக விளங்கியபோது புலிகள் பிளவு பட்டனர். இப்போது ரணிலுடன் முரண் பட்ட வடக்கு முதல்வரை தனிமைப் படுத்த ஆரம்பித்துள்ளனர்.

யாருக்கு யார் உதவுகின்றார்கள் என்பதை மக்கள் இனம் காணட்டும் .

தயாளன்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: