இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கப்படாது என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையானது பக்கசார்பற்றதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
விசாரணை நடத்தப்படும் பொறிமுறை பக்கசார்பற்ற மற்றும் சுயாதீனமானது என்றால், அதற்கு சகல உதவிகளையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கும்.
எவ்வாறாயினும் முன்னர் கூறியது போல் இந்த விசாரணைப் பொறிமுறை கலப்பு பொறிமுறையாக இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன்.
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் ஓரளவு முயற்சிகளை எடுத்துள்ளது. இது பாராட்டத்தக்கது.
எனினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மேலும் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது எனவும் மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com