சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் 58வது படை பிரிவில் உள்ளதா? தெரியாது என்கிறார் இராணுவ பேச்சாளர்

War-Crimes-in-Sri-Lankaஇறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இறுதிக் கட்ட யுத்ததில் இராணுவத்தின் 58வது படைப் பிரிவில் சரணடைந்து காணாமல் போனவர்கள் என தெரிவிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் குறிப்பிடுகையில்;

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் அடங்கிய ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58ம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

58ம் இராணுவ படையணி அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல்கள் அந்தப் படையணியின் முகாம் அலுவலகத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்ட்டிருந்தது.

அரசாங்கம் அளித்த பாதுகாப்பு மற்றும் பொதுமன்னிப்பு உத்தரவாதத்தை அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் முல்லைத்தீவு 58ம் படையணி முகாமை சேர்ந்த இராணுவ அதிகாரிகளிடம் சரணடைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

அவர்களில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட சிலர் தொடர்பில் அவர்களின் குடும்பத்தினர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற விசாரணைகளில், இராணுவத்தின் தரப்பில் முல்லைத்தீவு 58ம் படைத்தளத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன சாட்சியமளித்தார்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எவரும் 58ம் படையணியிடம் சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தங்களிடம் இல்லை என்று மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவப் பேச்சாளர் இது தொடர்பில் குறிப்பிடுகையில்

உண்மையில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் ஒன்று 58வது படை பிரிவின் தலைமை காரியாலயத்தில் உள்ளதா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. எவ்வாறாயினும் நீதிமன்றம் ஊடாக இது தொடர்பில் விசாரணை ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் அந்த விசரணைக்ளுக்கு இராணுவம் பூரணமான தனது ஒத்துழைப்பை வழங்கும்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் இராணுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் 58வது படை பிரிவில் சரணடைந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை ஒன்ரு இடம்பெற்று வருவதால் அது குறித்த மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவது பொருத்தமாக அமையாது என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: