சரணடைந்தவர்கள், கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்!

War-Crimes-in-Sri-Lankaமுல்லைத்தீவு 58வது இராணுவப் படைத்தளத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய ஆவணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த ஆவணத்தை மன்றில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு 58வது இராணுவ படையணி முகாம் அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய பெயர்ப்பட்டியல்கள் அந்த முகாம் அலுவலகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இறுதி யுத்தத்தின் போது சரணடையும் போராளிகளுக்கு பாதுகாப்பு வழங்கி பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தது. இதனையடுத்து புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் முல்லைத்தீவு, 58 வது படையணி முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளிடம் சரணடைந்திருந்தனர்.

ஆயினும் அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரையில் இராணுவத்தினராலும், அரசாங்கத்தினராலும் வெளியிடப்படவில்லை. அவர்களில் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட சிலர் தொடர்பில் அவர்களது குடும்பத்தினர் வவுனியா மேல்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணையை அடுத்து குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டது என்பதனால் அது பற்றி விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல்நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சில வருடங்களாகவே நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணையின் போது முல்லைத்தீவு 58ம் படைத்தளத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்த்தன இராணுவத்தரப்பில் சாட்சியமளித்திருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எவரும் 58 ஆவது படைப்பிரிவில் சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தங்களிடம் இல்லை என்று மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்த்தன வழக்கில் சாட்சியமளித்திருந்தார்.

இதன் போது இவரை மனுதாரர்களின் சார்பில் குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணி கே. எஸ். ரட்னவேல் இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பிய போது இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தங்களிடம் சரணடைந்தவர்கள் எல்லோருடைய பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல்கள் தமது முகாமில் இருப்பதாகவும் அவற்றை பரிசீலனை செய்த போது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சரணடைந்தவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் ஆவணமானது நீதிமன்றில் விசாரணையிலுள்ள வழக்குக்களுடன் நெருங்கிய தொடர்புடையனவாக இருப்பதனால் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று மனுதாரர்களின் சட்டத்தரணி ரட்னவேல் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ். எம். சம்சுதீன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இறுதி யுத்தத்தின் போது பெருமளவானோர் படையினரிடம் சரணடைந்திருந்தனர். அவ்வாறு சரணடைந்தவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தோ, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்தோ எதுவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தமது உறவுகளை படைத்தரப்பினரிடம் நேரடியாக கையளித்த பெருமளவான பெற்றோர் மற்றும் மனைவிமார் தமது உறவுகளை இன்றும் தேடியவண்ணமிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து யாரும் பொறுப்புக்கூறுவதாக தெரியவில்லை.

படையினரிடம் சரணடைந்தவர்களது விபரங்களை வெளியிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்து வந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. தம்மிடம் காணாமல் போன யாருமே சரணடையவில்லை என்றும் அது குறித்து தமக்கு எதுவுமே தெரியாது என்றும் இராணுவத் தரப்பினரால் கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் போது 58 ஆவது படைப்பிரிவினரிடம் சரணடைந்தவர்களது விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருப்பதான தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையிலேயே இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த சகல போராளிகளினதும் விபரங்களும் அந்தந்த இராணுவக் கட்டளை தலைமை அலுவலகங்களில் பெறப்பட்டே இருக்கவேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்படுமானால் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து அறியும் நிலை ஏற்படும். தற்போதைய நிலையில் 58வது படைப்பிரிவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் உள்ள விபரங்கள் அடங்கிய ஆவணத்தைப் பார்வையிட்டால் அங்கு சரணடைந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த விபரத்தை அறியமுடியும்.

இதேபோல் ஏனைய இராணுவ தளங்களில சரணடைந்தவர்கள் தொடர்பிலும் விபரங்கள் சேகரிக்கப்படவேண்டும். தற்போதைய நிலையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்புடன் நியாயமான உள்ளக விசாரணை நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கான விசேட செயலணியின் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இடம்பெறவுள்ள உள்ளக விசாரணையில் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்படவேண்டும்.

இதற்கு இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் படைக்கட்டளை தலைமையகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்திருக்கின்றார்.

உண்மையில் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியல் ஒன்று 58 ஆம் படைப்பிரிவின் தலைமையகத்தில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து எனக்குத் தெரியாது. எவ்வாறாயினும் நீதிமன்றம் ஊடாக இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் அந்த விசாரணைகளுக்கு இராணுவம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல் காணாமல் போனோர் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் விசாரணைக்கு இராணுவத்தின் ஆதாரங்களையும் சேர்த்துக்கொள்வது சாதகமாக அமையும். இறுதி யுத்தத்தில் சரணடைந்தோர் தொடர்பில் இராணுவ வசமுள்ள தகவல்களைப் பெறுவது விசாரணை செயற்பாடுகளுக்கு வலுசேர்ப்பதாகவும், அமையும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனரட்னவும் கருத்து கூறியுள்ளார்.

2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்க பிரதிநிதிகள் குழுவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவிற்குமிடையில் 16 சுற்றுப் பேச்சுக்கள் வரையில் இடம்பெற்றன.

இந்த பேச்சுவார்த்தையின் போது சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களது விபரங்கள் வெளியிடப்படவேண்டுமென்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அந்த விபரங்கள் உரிய வகையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

தற்போதைய நிலையில் அந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு நடந்த கதி குறித்து உள்ளக விசாரணையின் போது ஒவ்வொன்றாக ஆராயப்படவேண்டும். இதன் மூலமே சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களுக்கு என்ன நடந்தது என்பதை உரிய வகையில் அறிய முடியும். அத்துடன் குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனைகளை வழங்கக் கூடிய நிலை உருவாகும்.

எனவே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கோரப்பட்டது போன்று இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்களது விபரங்கள் வன்னியிலுள்ள சகல முகாம்களிலும் கோரப்பட வேண்டும். இதன் மூலமே உண்மைகளை கண்டறியலாம்.

-http://www.tamilwin.com

TAGS: