போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்தில், புதியதொரு திருப்பமாக, இராணுவத்தின் 58ஆவது டிவிசனிடம், சரணடைந்தவர்கள் தொடர்பான பட்டியல் ஆவணம் ஒன்று இருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில், இடம்பெற்ற விசாரணையின் போது, 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.சி.குணவர்தன, குறுக்கு விசாரணையின் போது இந்தப் பட்டியல் தமது டிவிசன் தலைமையகத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும், சின்னத்துரை சசிதரன், கந்தம்மான் எனப்படும் பொன்னம்பலம் கந்தசாமி, உருத்திரமூர்த்தி கிருஷ்ணகுமார் மற்றும் மஜித் எனப்படும் நடேசு முரளிதரன் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, 4 வயது மகன் சாருஜன், 2 வயது மகள் அபிதா ஆகியோர் தொடர்பான,
ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளிலேயே இந்தப் பட்டியல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையை இராணுவத்தரப்பு முன்னர் இழுத்தடித்து வந்தது.
பின்னர், இந்தச் சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு இதுபற்றி விசாரித்து அறிக்கை தரும்படி மேல்நீதிமன்றினால் பணிக்கப்பட்டது.
அதற்கமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில், 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கே.சி.குணவர்தன நேரில் முன்னிலையாகி,
போரின் இறுதியில் தமது படைப்பிரிவிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான பட்டியல் ஆவணம் தம்மிடம் இருப்பதாகவும், ஆட்கொணர்வு மனுக்களில் கூறப்பட்டுள்ள ஏழுபேரும் அந்தப் பட்டியலில் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதன் பின்னரே, அந்த ஆவணத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாரரின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஆனால், அதற்கு அரசதரப்பு சட்டத்தரணி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், நீதிபதி அதனை நிராகரித்து, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி நடத்தப்படும் விசாரணையில் அந்தப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதுவரைக்கும், போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் பற்றிய ஒரு பட்டியல் இருப்பது பற்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தரப்பினால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
போரின் இறுதியில் சுமார் 12 ஆயிரம் புலிகள் சரணடைந்தனர். அவர்களில், கடுமையான குற்றங்களைச் செய்த சுமார் 300 பேர் தவிர, ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்றே இராணுவத் தரப்பும், அரசாங்கத் தரப்பும் கூறிவந்தன.
இப்போது தான், தம்மிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் ஆவணம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது, 58ஆவது டிவிசன்.
இறுதிக்கட்டப் போரில் மிகவும் முக்கிய பங்காற்றிய இந்த டிவிசன் இப்போது, பூசாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படுகிறது.
மன்னாரில் உயிலங்குளத்தில் இருந்து, முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் வரை இந்தப் படைப்பிரிவு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் கணிசமான பங்கை வகித்திருந்தது.
ஆரம்பத்தில் அதிரடிப்படை 2 என்ற பெயரில், அரை டிவிசனாக இயங்கிய இந்தப் படைப்பிரிவு, போரின் இறுதிக்கட்டத்தில், முழுமையான டிவிசனாக அங்கீகரிக்கப்பட்டது.
மன்னார் தொடக்கம், முல்லைத்தீவு வரை போரை நடத்திச் சென்ற இந்த டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் தான், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் வெள்ளைக்கொடியுடன் இவரது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் சரணடையவில்லை என்றும் போரில் கொல்லப்பட்டதாகவும் இராணுவத் தரப்பு கூறுகிறது.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில், கஜபா படைப்பிரிவு அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
முன்னைய அரசாங்கம், இவருக்கு அதிக கௌரவத்தை வழங்கியதுடன், ஐ.நா.வுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் நியமித்திருந்தது.
அந்தப் பதவிக்காலம் முடிந்த பின்னர், அவரை தென்னாபிரிக்காவுக்கான தூதுவராக நியமிக்க முன்னைய அரசாங்கத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணங்கவில்லை.
ஐ.நா. பணியை முடித்து திரும்பிய, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, புதுடில்லியில் ஒரு ஆண்டு கற்கைநெறியை முடித்து விட்டுத் நாடு திரும்பிய போது, புதிய அரசாங்கம் அவருக்கு ஆரம்பத்தில் முக்கிய பதவிகள் எதையும் வழங்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இராணுவக் கட்டளைத் தலைமைகளின் மாற்றத்தின் போது தான் அவர், 53ஆவது டிவிசனின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா. பதவியை ஏற்பதற்கு முன்னதாக எந்தப் பதவியில் இருந்தாரோ ( 58ஆவது டிவிசன் தளபதி) அந்தப் பதவிக்கு இணையான பதவி தான் இப்போதும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதைவிட, அவரை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளும் இராணுவத்தில் தவிர்க்கப்பட்டு வருகிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பாக, பரணகம ஆணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், இவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆணைக்குழுவினால் முன்னர் தகவல் வெளியிடப்பட்டது.
அப்போது புதுடில்லியில் இருந்தார் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா. எனினும், அந்த அழைப்பாணையை ஏற்று, அவர் ஆணைக்குழுவிடம் முன்னிலையாகி சாட்சியம் அளித்தமை தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இப்போது கூட, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கின்ற விசாரணைகளில் 58ஆவது டிவிசனின் தற்போதைய கட்டளைத் தளபதி தான் ஆஜராகி சாட்சியத்தை வழங்கியிருக்கிறார்.
அவருக்கும், 58ஆவது டிவிசனுக்கும் முன்னொரு போதும்,தொடர்பு இருந்ததில்லை. அவர் தம்மிடமுள்ள ஆவணத்தை ஆதாரமாக கொண்டே, சாட்சியத்தை அளித்திருக்கிறார்.
அதேவேளை, இப்போது. 58ஆவது டிவிசன் தம்மிடம் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ள, சரணடைந்தவர்களின் பட்டியல் ஆவணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ஏற்கனவே, இந்த ஆவணத்தை ஒப்படைக்க அரசதரப்பு சட்டத்தரணி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அதாவது, இராணுவ இரகசியங்கள் என்ற பெயரில் இவற்றை மறைப்பதற்கு படைத்தரப்பு முயற்சிக்கலாம்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிலும், கிரித்தலவில் உள்ள 3ஆவது புலனாய்வுப் படைப்பிரிவு முகாமின் பதிவேடுகளை வி்சாரணைக்காக சமர்ப்பிக்க ஹோமகம நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கு இராணுவத் தரப்பு சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு, அரசதரப்பு சட்டத்தரணியாலேயே கூறப்பட்டு வந்தது.
அதேவேளை, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இந்த பட்டியலை ஒப்படைக்க, அரசதரப்பு சட்டத்தரணியே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
58ஆவது டிவிசன், தம்மிடம் உள்ள பட்டியலை ஒப்படைக்குமா இல்லையா என்ற கேள்விகள் இருக்கும் நிலையில், அது ஒப்படைக்கப்பட்டால், அந்தப் பட்டியல், உண்மையானதா- குறிக்கப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட மூல ஆவணமா என்ற கேள்விகளும் எழுப்பப்படும்.
ஏனென்றால், ஆட்கொணர்வு மனுக்களில் கூறப்பட்டுள்ளவர்கள், அந்தப் பட்டியலில் இல்லை என்று ஏற்கனவே மேஜர் ஜெனரல் கே.சி.குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
எனவே, சரணடைந்த பின்னர், காணாமற்போனவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு புதிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கலாம். அல்லது சரணடைந்தவர்களில் காணாமற்போனவர்களின் பெயர்கள் ஏற்கனவே இதில் உள்ளடக்கப்படாமலும் விடப்பட்டிருக்கலாம்.
எவ்வாறாயினும், இறுதிப் போர்க்கால ஆவணங்களில் ஒன்று நீதிமன்ற விசாரணைக்கு முதல்முறையாக வரப்போகிறது.
இதனை அரசாங்கத்தரப்பு எந்த வகையிலும் தடுக்க முனைந்தால், அது, குற்றங்களை மறைக்க முனைவதான குற்றச்சாட்டுகளை எழுப்ப வைக்கும்.
அதேவேளை, நடக்கப்போகும் உள்ளக விசாரணையில், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுவார் என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டு விசாரணையில், படையினரின் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள அரசாங்கம், போர் நெறிமுறைகளை மீறிய சில சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி வருகிறது.
இப்படியான நிலையில், போரின் இறுதியில் நடந்த சம்பவங்களுக்காக, குறிப்பிட்ட சில இராணுவ அதிகாரிகளோ, படையினரோ மட்டும், பலிக்கடாக்களாக்கப்பட்டு, உள்ளகப் போர்க்குற்ற விசாரணையை முடித்து வைக்க அரசாங்கம் முயற்சித்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
சுபத்ரா
-http://www.tamilwin.com