பாதுகாப்பு தரப்பிடமிருந்து அச்சுறுத்தல் நீடிக்கின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் மனோ கணேசனிடம் முறைப்பாடு!

jaffna_missingrelative_protestஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக அரசாங்கத்திடமும், மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோரிடமிருந்தே தொலைபேசி மூலமாகவும், இனந்தெரியாத நபர்களிடமிருந்து நேரடியாகவும் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஐம்பது பேர் வரையான பெண்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய வடக்கு- கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கண்ணீருடன் தங்களின் கதைகளை சொல்லி அழுதார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

‘காணாமற்போனவர்களின் உறவினர்களை தேடி ஆர்ப்பாட்டம் செய்யாதே, ஊர்வலம் நடத்தாதே என்ற நேரடி அச்சுறுத்தல்கள், அகாலவேளை தொலைபேசி அழைப்புகள், இரவு நேர கதவு தட்டல்கள், தங்கள் வீடுகளில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை இவர்கள் என்னிடம் சொல்லி அழுதார்கள்’ என்று அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

‘கடந்தக்கால ஒட்டுக்குழு உறுப்பினர்களிடமிருந்தும், பொலிஸ், இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் நபர்களிடமிருந்து இத்தகைய அச்சறுத்தல்கள் தொடர்வதாக எனக்கு புகார்கள் கிடைத்துள்ளன’ என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளிடமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் இதுதொடர்பில் பேச்சு நடத்தியுள்ளதாக பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ள மனோ கணேசன், இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: