போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீட்டை அனுமதிக்கமாட்டோம்! அமைச்சர் சம்பிக்க

champika-ranawakkaபோர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள சந்தேக குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து எமது இராணுவத்தை நியாயப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இரு தரப்பிலும் இழப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களும், சிங்கள் மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் சர்வதேசம் குற்றம் சுமத்தும் அளவுக்கு எந்தவித மனித உரிமை மீறல்களும் இறுதி யுத்தத்தின் போது இடம்பெறவில்லை.

மனிதாபிமான நடவடிக்கைகளே எமது இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான நிலையில் எமது இராணுவத்தை போர்க் குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

எமது இராணுவம் துணிந்து பயங்கரவாதத்தை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் இன்று நாடு மிகவும் அச்சுறுத்தலான நிலையிலேயே இருந்திருக்கும். வடக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

அதேபோல் நாட்டு மக்கள் மத்தியில் இன்றும் சந்தேக நோக்கம் மட்டுமே காணப்பட்டிருக்கும். அவ்வாறான நிலையில் இன்று சர்வதேசம் வியந்து பார்க்கும் வகையில் எமது நாடு மாற்றம் கண்டுள்ளது என்றால் அதற்கு எமது இராணுவமே பிரதான காரணமாகும்.

எனினும் சர்வதேச மட்டதில் எழுந்துள்ள சந்தேகம், போர்க்குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து எமது இராணுவத்தை நியாயப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. அதற்கான உள்ளக பொறிமுறையை எமது அரசாங்கம் முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போதும் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாளுமாறே வலியுறுத்தினார்.

சர்வதேச தலையீடுகள் இல்லாத எமது சுயாதீன விசாரணை பொறிமுறை மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எமது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றசாட்டுகள் தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்.

ஒருசிலர் தெரிவிக்கும் கருத்துகளை நிலையான கருத்தாக கொள்ள முடியாது. சிலவேளைகளில் அவர்களின் கருத்து தவறாக விமர்சிக்கப்படலாம். எவ்வாறு இருப்பினும் சர்வதேச விசாரணைக்கான கதவுகள் மூடப்பட்டு விட்டன. எமது உள்நாட்டு விசாரணை பொறிமுறை மூலமாகவே அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்படும்.

அதற்காக சர்வதேச உதவிகளை நாம் பெறமாட்டோம் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. தேவையான சந்தர்ப்பத்தில் சர்வதேசத்தின் உதவிகளை பெற்று மேலும் எமது உள்ளகப் பொறிமுறையை பலப்படுத்த முடியும். அது ஆரோக்கியமான விடயமாக அமையும். எனினும் தனிப்பட்ட எவரது தலையீட்டையும் எம்மால் அனுமதிக்க முடியாது என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: