காணிகளை சூறையாட இடமளிக்க முடியாது! அரசை வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள்

3tnaவடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திகள் என்ற பெயரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

எமது மக்கள் இப்போதும் தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமாகாத நிலைமையும் காணப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் முதற்கட்டமாக எமது மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்த சந்திப்பின் போது முக்கியமான சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறுகையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

யுத்தத்தின் பின்னர் எமது வடக்கு கிழக்கு மக்கள் பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தி மட்டத்திலும் பின்னடைவுகளை சந்தித்து வந்துள்ளனர். அவ்வாறான நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது பகுதிகளை துரித கதியில் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

எனினும் அபிவிருத்திகள் என்ற பெயரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அனுமதிக்க முடியாது. எமது மக்கள் இப்போதும் கூட தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமாகாத நிலைமையும் உள்ளது.

அவ்வாறிருக்கையில் முதற்கட்டமாக எமது மக்களின் மீள்குடியேற்ற நடவைக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த காரணிகளை நாம் அமைச்சர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அதேபோல் வடக்கில் விமான நிலையங்கள் அமைப்பதும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வரவேற்கப்பட வேண்டியவையாகும். ஆனால் அதன்மூலம் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான முழுமையான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தக் காரணிகளை நாம் அரசாங்கத் தரப்பினரிடம் தெரிவித்துள்ளோம். இதில் எமது மக்களின் நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எமக்குத் தெரிவித்தார் என்றார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கூறுகையில்,

போருக்குப் பின்னரான வடக்கு கிழக்கு பகுதிகளை கட்டியெழுப்பும் கட்டாயத் தேவை இருந்த போதிலும் கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் சுயநலமான போக்கில் செயற்பட்டது. எனினும் இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பகுதிகளின் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சில நல்ல விடயங்களை செய்து வருகின்றது.

இப்போதும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இன்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவைக்கைகள் குறித்தே அமைச்சர் சுவாமிநாதனுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

எங்களின் முதலீடுகள், வடக்கு கிழக்கு மக்களின் தொழில் வாய்ப்புகள் மற்றும் எமது பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்தல் என்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் மந்த கதியில் உள்ளது. எமது மக்களின் நிலங்களில் மக்களை மீள்குடியேற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத் தரப்பிடம் வலியுறுத்தினோம் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: