காணிகளை இழந்த மக்களின் அவல வாழ்க்கை தொடர்வதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது!

vali_northவடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது பொதுமக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அவை இதுவரை முழுமையாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் அப்பாவிப் பொதுமக்களின் காணிகளை மீள்வழங்குமாறு வலியுறுத்தப்பட்டு வந்த போதும் அது தொடர்பில் கடந்த காலங்களில் உரிய முறையில் கரிசனை செலுத்தப்படவில்லை.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வலி. வடக்குப் பிரதேசத்தில் 27 வருடங்களுக்கு மேலாக காணிகளை இழந்த மக்கள் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். அந்த மக்கள் எப்போது தாம் தமது சொந்த காணிகளுக்கு திரும்புவோம் என்ற கனவுடன் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் இதுவரை அவர்களுக்கு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் தற்போது வடபகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் துரிதகதியிலான அபிவிருத்திகள் அவசியம் என்றும் ஆனால் அதற்காக பொதுமக்களின் காணிகள் சூறையாடப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எமது பகுதிகளை துரிதகதியில் கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகிறது. எனினும் அபிவிருத்திகள் என்ற பேரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அதனை அனுமதிக்க முடியாது. எமது மக்கள் இப்போதும் கூட தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கில் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமடையவில்லை. அவ்வாறு இருக்கையில், முதற்கட்டமாக எமது மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இந்த காரணிகளை நாம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அதேபோல் வடக்கில் விமான நிலையங்கள் அமைப்பதும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதும் வரவேற்கப்படவேண்டியவையாகும்.

ஆனால், அதன்மூலம் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான முழுமையான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் காரணிகளை நாம் அரசாங்கத் தரப்பினரிடம் தெரிவித்துள்ளோம் எனவும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத் தரப்பினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்துள்ளது. உண்மையில் கடந்த மூன்று தசாப்தகாலமாக அபிவிருத்தி செயற்பாடுகளில் பாரிய பின்னடைவுகளை கண்டுள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளில் துரிதகதியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

அதன் மூலமே அப்பகுதிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தி மக்களின் ஜீவனோபாயத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால் இவ்வாறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அவை பொதுமக்களை பாதிக்காதவகையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக பொதுமக்களின் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீளவும் வழங்குவதற்கு அரசாங்கம் விரைவாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இந்த விடயத்தில் தொடர்ந்தும் தாமதித்துக்கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறான பின்னணியில் மேலும் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பேரில் பொதுமக்களின் காணிகள் சூறையாடப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.

தமது காணிகள் மீள்வழங்கப்படாமையினால் விரக்தியின் விளிம்பில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகியுள்ளனர். வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கும் அனைத்து காணிகளையும் விடுவிக்க வலியுறுத்தி 32 நலன்புரி முகாம்களைச் சேர்ந்த மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக நலன்புரி நிலையங்களின் தலைமை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத் தரப்பிலிருந்து எமது பிரச்சினைகள் தொடர்பில் வெளியாகும் செய்திகள் எமது நம்பிக்கையை சீர் குலைத்துள்ளன. எனவே, நாங்கள் இந்த அகிம்சைவழிப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். யாருக்கும் அசௌகரியங்களை கொடுக்காத வகையில் இருந்த இடங்களிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசம் என்ன சொன்னாலும் யார் வந்துபோனாலும் நாங்கள் எமது ஜனாதிபதியையே நம்புகிறோம். அவருக்குத்தான் எம்மை சொந்தகாணிகளில் குடியமர்த்துவதற்கு உரிமை உள்ளது. ஜனாதிபதி கூறியது போன்று எமக்கு ஆறுமாதகாலத்தில் தீர்வு வழங்கப்படவேண்டும்.

இந்த விடயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து நாங்கள் விழிப்புடன் இருக்கின்றோம் என்பதை புலப்படுத்தவே இந்தப்போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம் எனவும் காணிகளை பறிகொடுத்துவிட்டு விரக்தியுடன் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, நிலைமை எல்லைமீறி செல்வதை அரசாங்கம் கருத்தில் கொண்டு உடனடியாக அந்த மக்களின் காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது மிகவும் அவசியமானதொன்றாக காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி அபிவிருத்தி விஸ்தரிக்கப்படும் போது பொதுமக்களின் காணிகள் சூறையாடப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. இந்த விடயத்தில் மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்படுவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

குறிப்பாக தற்போது பாதிக்கப்பட்ட நிலையில் நலன்புரி நிலையங்களில் வாழ்கின்ற பொதுமக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை எந்தவொரு கட்டத்திலும் வீணடிக்கப்பட்டுவிடக்கூடாது.

குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணிகளை இழந்தநிலையில் மக்கள் வாழுகின்ற முகாம்களுக்கு சென்று அந்த மக்களின் துயரங்களை நேரில் பார்வையிட்டிருந்தார்.

அத்துடன் இந்த மக்களுக்கு அபிவிருத்தியோ உதவிகளோ தேவையில்லையென்றும் அவர்களின் சொந்த காணிகள் மீள்வழங்கப்படவேண்டுமென்பதே முக்கிய தேவையாக உள்ளது என்பதனை தான் உணர்வதாகவும், ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீள்வழங்கப்பட வேண்டியது எந்தளவு தூரம் முக்கியமானது என்பது நாட்டின் தலைமைத்துவத்தினாலேயே உணரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடம் பதவிக்கு வந்தவுடன் வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

அதுமட்டுமன்றி வலி. வடக்கில் முதல்கட்டமாக ஒருதொகுதி காணிகளை விடுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால் அதன் பின்னர் காணிகளை மீள்வழங்கும் நடவடிக்கைகள் மந்தகதியை அடைந்து விட்டன என்றே கூறவேண்டும்.

இந்நிலையில் இம்மாத ஆரம்பப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இந்த நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்திருந்தார். அதன்போது முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தமது காணிகளை மீட்டுத்தருமாறு செயிட் அல் ஹுசைனிடம் மன்றாட்டமாக கோரியிருந்தனர்.

அப்போது அந்த மக்களிடம் கருத்து வெளியிட்டிருந்த செயிட் அல் ஹுசைன் நான் அடுத்த முறை இங்கு வரும்போது நீங்கள் அனைவரும் உங்கள் சொந்தக்காணிகளில் இருப்பீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மக்களின் காணிப் பிரச்சினையானது நீண்டகாலமாக காணப்படுவதுடன் அந்த காணிகள் விரைவாக மீளளிக்கப்பட வேண்டுமென உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

எனவே, அரசாங்கம் இது தொடர்பில் விரைவாக கவனம் செலுத்தி வடக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை உரியவர்களிடம் மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கும் அப்பகுதிகளில் அந்த மக்கள் மீள்குடியேறுவதற்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவேண்டும்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்த மக்கள் தமது சொந்த காணிகளை இழந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த அவல வாழ்க்கை தொடர்வதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது. எனவே, அரசாங்கம் விரைவில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

-http://www.tamilwin.com

TAGS: