இந்திய மீனவர் விவகாரம் சமீப தினங்களாக மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலைமையில் மீனவர் விவகாரமானது தமிழக, இலங்கை தமிழர்களுக்கிடையில் நிரந்தர விரோதத்தை ஏற்படுத்தி விடுவதற்கு இடமளிக்கலாகாது.
இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதை சட்டபூர்வமானதாக்க வேண்டுமென்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுவடைந்து வருவதாலும், அவ்வாறு இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிக்கத் தொடங்குவார்களானால் இங்குள்ளோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடுமென இலங்கை மீனவர்கள் அஞ்சுவதாலுமே இரு நாடுகளுக்குமிடையே இவ்விவகாரம் இப்போது உச்சக்கட்ட நிலைமைக்குச் சென்றிருக்கிறது.
சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென வலியுறுத்தியே வடபகுதி மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
அதேவேளை இலங்கை மீனவர்களின் கோரிக்கைக்கு முற்றிலும் மாறான வேண்டுகோளை முன்வைத்து தமிழ்நாட்டு மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தைச் சுற்றி வளைத்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இலங்கைச் சிறைகளிலுள்ள மீனவர்கள் விடுவிக்கப்படுவதுடன் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் விடுவிக்கப்பட்டு சேதமடைந்த தங்களது படகுகளுக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழக மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்கான தேர்தல் நெருங்கி வருவதனால் தமிழக மீனவர்களின் போராட்டங்கள் இனிமேல் தீவிரமடையத்தான் போகின்றன. தமிழ்நாட்டின் எந்தவொரு அரசியல்வாதியுமே தமிழக மீனவர்கள் இழைக்கின்ற காரியம் தவறானதென ஒருபோதும் கூறப் போவதில்லை.
இலங்கைக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் பிரவேசித்து மீன்பிடிப்பது சட்டபூர்வமானதென்றுதான் அங்குள்ள அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு கூறப் போகிறார்கள். ஏனெனில் தமிழக அரசியல் நாடகத்தில் மீனவர் விவகாரமும் தவிர்க்க முடியாத பாத்திரமொன்றாகிப் போயுள்ளது. நீதி நியாயங்களைப் பார்க்கிலும் வாக்கு வங்கியே இன்றைய தேர்தல் காலத்தில் அவர்களுக்கு மிக முக்கியம்.
உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டுக்குமென கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அயல் நாடுகளான இலங்கையும் இந்தியாவும் அது போன்றே தமக்குரிய கடல் எல்லைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டைச் சேர்ந்தோர் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதென்பது சட்டப்படி குற்றமாகும்.
இந்தியா பிராந்திய வல்லரசு என்பதனாலோ, இலங்கையென்பது குட்டித் தீவு என்பதானாலோ இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய முடியுமென்று சர்வதேச சட்ட திட்டங்கள் எதுவுமே கிடையாது.
ஆனாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடிப்பது தவறென்று தமிழகத்திலுள்ள எந்தவொரு அரசியல்வாதியுமே இதுவரை கூறவில்லை.
தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதற்கு முழு உரிமையும் உண்டு என்றுதான் தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கூறி வருகின்றனர். இதுதான் வேடிக்கையும் விசித்திரமுமாக இருக்கிறது. தமிழக அரசியலுடன் மீனவர் விவகாரம் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளதென்பது இங்கு நன்கு புரிகிறது.
முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கையின் வட பகுதி மக்களில் கணிசமான தொகையினரின் பிரதான வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழிலே தற்போது விளங்குகிறது. வடபகுதியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் கடற்றொழிலையே நம்பி வாழ்கின்றன.
யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால், இனிமேல் கடற்றொழிலை எதுவித தடையுமின்றி மேற்கொள்ளலாமென நம்பியிருந்த வட பகுதி மீனவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. யுத்த காலத்தின் போது படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடல் வலய தடைச் சட்டத்திலும் பார்க்க இந்திய மீனவர்களில் ஊடுருவலானது தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மீன் வளம் அழிந்து போகாமலிருப்பதற்காக இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அத்தனை மீன்பிடி உபகரணங்களையும் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இங்கு வந்து மீன் பிடிப்பதுடன் மட்டுமன்றி, எமது கடல் வளத்தையே நாசப்படுத்திச் செல்கின்றனர்.
இச்செயல்களுடன் மாத்திரம் நின்று விடாமல் இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்துத் தாக்குதல் நடத்தியும், இம்மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களைச் சேதப்படுத்தியும் செல்கின்றனர். இலங்கைக் கடல் எல்லைக்குள் வைத்து அவர்கள் கைது செய்யப்படுகின்ற வேளைகளிலெல்லாம் இலங்கைக் கடற்படையினர் வெறியாட்டத்தில் ஈடுபடுவதாக தமிழக அரசியல்வாதிகள் கூக்குரல் எழுப்புகின்றனர்.
‘மீனுக்கும் மீனவனுக்கும் எல்லை கிடையாது’ என்று அபத்தமாகப் பேசுகின்றனர். தமிழக அரசியல்வாதிகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக கடைப்பிடிக்கின்ற இக்கொள்கையைப் பின்புலமாகக் கொண்டே இந்திய மீனவர்கள் இவ்வாறு எமது நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகின்றனர்.
அதே சமயம் தமிழக மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களாக உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் இருப்பதனால் அம்மீனவர்கள் துணிச்சலுடன் எல்லை தாண்டி வருகின்றனர்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையானது மிகவும் உணர்வுபூர்வமானது. இருநாட்டுத் தமிழர்களுக்கிடையிலும் நெடுங்காலமாக வரலாற்று ரீதியான உறவு நிலவி வருகிறது. தமிழக மக்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மீதும், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக மக்கள் மீதும் மத, கலாசார, பாரம்பரிய ரீதியில் நெருக்கமும் பாசமும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.
இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்திருந்த வேளையில் இங்குள்ள தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்துவதிலும் ,அகதிகளை அரவணைப்பதிலும் தமிழக மக்கள் காண்பித்த அக்கறையை ஒருபோதும் மறந்து விட முடியாது.
இந்நிலைமையில் மீனவர் விவகாரமானது தமிழக, இலங்கை தமிழர்களுக்கிடையில் நிரந்தர விரோதத்தை ஏற்படுத்தி விடுவதற்கு இடமளிக்கலாகாது. தமிழக அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் அரசியல் ஆதாயங்களை மறந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதையே நாம் இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.
-http://www.tamilwin.com