கொழும்பு மகசின் சிறைச்சாலையில் எட்டு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உட்பட சகல தமிழ் கைதிகளும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை அல்லது யுத்தத்தை முன்னெடுக்கக் கூடிய மனோநிலையில் இல்லை என விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கோமகன் கண்ணீருடன் தெரிவித்தார்.
பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகள் என்ற அமைதியான குடும்ப வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற பாசத்துக்காகவே அவர்கள் ஏங்கிக் கிடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எம்முடன் சிறையிலிருந்த ஜெனீவனுக்கு பொதுமன்னிப்புக் கிடைத்த போது எமக்கான வழி திறக்கப்படுகிறது என்ற நம்பிக்கையுடனேயே அவரை வழியனுப்பி வைத்திருந்தோம்.
இருந்த போதும் இரும்புக் கதவுகளிலிருந்து வெளியேறுவதற்கான சாதகமான சமிக்ஞைகள் எதுவும் இல்லாத நிலையில் உயிரையும் மதிக்காது 14 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கோமகன் அரசியல் கைதிகள் சார்பில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
யாழ் மாநகரசபையின் உறுப்பினரான கோமகன் 2010ம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 6 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
தான் உட்பட சிறையில் உள்ள சகல அரசியல் கைதிகளும் விருப்பத்துக்கு மாறாகப் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் குடும்பங்களைப் பிரிந்து பாசத்துக்காக சிறைகளில் ஏங்கிக் கிடக்கின்றனர். அவ்வாறான பாசத்துக்காக தானும் ஏங்கிக் கிடந்ததாகக் கூறிய அவர் துக்கம் தாங்க முடியாது மனமுடைந்து கண்ணீர் சிந்தினார்.
என்னைப் போன்ற நிலைப்பாட்டிலேயே ஏனைய சகல அரசியல் கைதிகளும் இருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து அரசியல் ரீதியான தீர்மானமொன்றை விரைந்து எடுக்க வேண்டும் என கோமகன் உருக்கமாக கோரிக்கை விடுத்தார்.
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசியல் தலைமைகள் பாராமுகமாக இருக்கின்றன. அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் அரசியலுக்கூடாக விரைவுபடுத்தப்பட வேண்டும். இதற்கு தமிழ் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புக்களும் உரிய அழுத்தக்களை முன்வைக்க வேண்டும்.
இதேவேளை, மகசின் சிறைச்சாலையில் எட்டாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 14 பேரில் 4 பேர் வழக்கு விசாரணைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு பின்னர் ஒரு சில மாதங்களில் கைது செய்யப்பட்டவர்கள்.
இதனைவிட சிவநாதன், ஞானசீலன், மதனி ஆகிய மூவரும் புலிகள் மீள உருவாகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு எதுவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள். எஸ்.தயாபரன் என்பவர் லண்டனிலிருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டவர்.
தில்லைராஜ் என்பவர் யுத்தத்தின் பின்னர் மலேஷியா சென்றவர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நாடு திரும்பிய அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 பேரும் நீதிமன்றங்களில் எதுவித வழக்கும் தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டவர்கள் என நேற்றுமுன்தினம் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான க.சாந்ததேவன் கூறினார்.
இந்த 14 பேரும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் தவணை எடுக்கப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தவணை பெறுவது மாத்திரமே நடைபெறுகிறது.
உங்களின் சுகாதாரம் மற்றும் உணவு பற்றி மாத்திரமே எம்மால் விசாரிக்க முடியும். விடுதலை பற்றி முடிவுசெய்ய முடியாது என மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கூறுகிறார்.
சட்டமா அதிபர் திணைக்களமும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுமே விடுதலையை தீர்மானிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டு 14 நாட்கள் தவணை வழங்கப்படுவதாக சாந்ததேவன் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் தம்மை பிணையில் விடுதலை செய்து வழக்குகளை விசாரணை செய்யுங்கள் அல்லது புனர்வாழ்வு வழங்கி விடுவியுங்கள் என்பதே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 14 பேர் உள்ளிட்ட 170 அரசியல் கைதிகளின் ஒட்டுமொத்தமான கோரிக்கையாகும்.
எவரும் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரவில்லையென்றும் சாந்ததேவன் கூறினார்.
சாந்ததேவன் கடந்த 2010ஆம் ஆண்டு வவுனியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். பலவந்தமாகப் பெறப்பட்ட குற்றஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வவுனியா மேல் நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு அவரை விடுவித்திருந்தது.
எனினும் அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் சுமார் ஒன்றரை வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்று 99 வீதமானவர்கள் பலவந்தமாகப் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
-http://www.tamilwin.com