தமிழ் மக்களுக்கு தனது ஆட்சிக் காலத்தில் அதிகளவான உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே முன்வைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்றும் வரும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தம்மால் முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரித்தமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கவலைகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் இருந்து அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து செல்லும் புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் இது குறித்து பிரபாகரன் கவலை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தமிழ் மக்களுக்கு தம்மால் வழங்கவிருந்த விடயங்களை தற்போதைய அரசாங்கத்தினாலும் வழக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிகாலத்தில், அதிகரித்து காணப்பட்ட பேரினவாத செயற்பாடுகளின் காரணமாகவே தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், காணாமல் போனவர்களை கண்டறிவது, காணிகளை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டியது, உள்ளிட்ட விடயங்களே வடக்கு வாழ் தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com