இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் போர்க்குற் றம் தொடர்பான உண்மையான விசாரணைகளினூடாக நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதனையே ஐக்கிய நாடுகள் சபை விரும்புவதாக ஐ.நா. செயலாளரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.
முறையான விசாரணையினூடாக நல்லிணக்கம் மற்றும் இருதரப்பு பொறுப்புக்கூறலினூடாக உண்மையான மறுசீரமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பமாக தற்போதைய சூழல் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போரின் இறுதித் தருணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் விசாரணைப் பொறிமுறையை முன்னெடுக்கவுள்ள நிலையானது இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் கடந்தகால உள்நாட்டு போர் சுவடுகளிலிருந்து விடுபட தற்போது சிறந்த தருணத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட ஆலோசகர் எடமா டெயின் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறுகின்ற 31வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com