சமஷ்டி ஆட்சி முறை இந்தியா போன்ற பெருநிலப்பரப்பைக் கொண்ட நாடுகளுக்கே பொருந்தும் என்றும், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குப் பொருத்தமற்றது என்றும் சட்டத்தரணி கோமின் தயாசிறி வலியுறுத்தியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் தொடர்பான சட்ட நிபுணருமான கோமின் தயாசிறி இன்றைய ஞாயிறு சிங்கள வார இதழ் ஒன்றுக்கு இது தொடர்பான நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் போது அந்நாட்டுக்கு சமஷ்டி முறை அரசியலமைப்பு ஒன்றை அறிமுகம் செய்துவிட்டே சுதந்திரம் வழங்கியிருந்தனர்.
ஏனெனில் இந்தியா பல்வேறு மொழிகள் பேசப்படும் பாரிய நிலப்பரப்பைக் கொண்ட ஒருநாடாகும். அந்நாட்டுக்கு சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது.
ஆனால் இலங்கை ஒருசிறிய நாடு. இங்கு சமஷ்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் இனங்களுக்கிடையிலான விரிசல் மேலும் தீவிரமடைந்து நாடு பிளவுபட்டுவிடும்.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதி சூழ்நிலை வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கே பெரிதும் பயன்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய கட்சிக்கு வாக்களித்து தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் பொதுமக்கள் எதுவித எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை.
ஆனால் ஒருசில அரசியல் தலைவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமஷ்டி ஆட்சிiயை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு ஒருபோதும் சாத்தியமற்றது என்றும் கோமின் தயாசிறி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
ஆனால் வெறும் 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பொருந்தும் ..கூடவே இந்த நாட்டில் தேசிய கீதம் 4 மொழிகளில் பாடபடுகின்றன ..தென் ஆப்ரிக்காவில் 16 மொழிகள் அரச மொழி ஆக உள்ளன …