நடேசன் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தார்: நேரில் கண்ட பெண் இரகசிய சாட்சியம்

nadesan_001விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பேர் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர்களை பேருந்தில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்தவாரம் கோப்பாயில் காணாமற்போனோர் குறித்து சாட்சியங்களைப் பதிவு செய்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிடமே இதுபற்றிய சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கருதி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பெண் ஒருவர், இறுதிப் போர் பற்றிய சாட்சியத்தை அளித்திருந்தார்.

அவர் தனது சாட்சியத்தில்,

போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே 16ஆம் நாள் நந்திக்கடல் வழியாக சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து நாம் புதுக்குடியிருப்பக்கு கொண்டு செல்லப்பட்டோம்.

நாம் நந்திக்கடலில் நின்ற போது நடேசன் மற்றும் ஏனையவர்கள் வெள்ளைக்கொடியுடன் முன்னே வந்தனர். அவர்கள் சிறிலங்கா படையினரால் ஒரு பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளை முன்னே வருமாறு இராணுவத்தினர் கூறினர். சரணடைந்த விடுதலைப் புலிகள் தனியாக கொண்டு செல்லப்பட்டதால் எனது கணவர் சரணடைவதற்கு அஞ்சினார்.

ஆனால், சரணடைபவர்களை ஐந்து நிமிடங்கள் சோதனையிட்ட பின்னர் விடுவிப்போம் என்று இராணுவத்தினர் கூறினர். அப்போது எனது கணவரும், ஏனைய 35 பேரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

அவர்கள் கைவிடப்பட்டிருந்த வீடு ஒன்றுக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.

என்னை வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு கொண்டு சென்றதால் கணவர் பற்றிய மேலதிகமாக எந்த தகவலையும் பெற முடியவில்லை.

முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கணவரைத் தேடித்திரிந்த போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் உயிருடன் இருப்பார் என்று நம்புகிறேன் என்றும் அந்தப் பெண் சாட்சியம் அளித்திருந்தார்.

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் வெள்ளைக்கொடியுடன் விடுதலைப் புலிகள் யாரும் சரணடையவில்லை என்றும், பா.நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்டோர் சண்டையிலேயே கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

-http://www.tamilwin.com

TAGS: