இலங்கையில் ஆதிவாசிகளின் பரம்பரை துரித கதியில் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.
பீ.பீ.சி. சந்தேசய செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், முன்பு போன்று வேடர்கள் தற்போது வேட்டையாடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என கூறியுள்ளார்.
அத்துடன், காட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக 37 ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து வந்த எங்கள் கலாசாரம் துரித அழிவை எதிர்நோக்கியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் காரணமாக தமது இளம் தலைமுறையினர் தொழில் மற்றும் வருமான பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அவர்கள் நகர்ப்புற பகுதிகளுக்குத் தொழில் தேடிச் செல்ல வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறு செல்லும் இளம் தலைமுறையினர் வேடர்களின் கலாசாரத்துக்குப் பதிலாக நாகரீக கலாசார மோகத்திற்குப் அடிமையாவதாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நகரத்தில் ஏனைய பிள்ளைகளுடன் கல்வி கற்கும் தங்களது பிள்ளைகள் கைத்தொலைபேசி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மீது விருப்புக் கொண்டு அவற்றைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக, இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்களின் தலைமுறை துரித அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக வன்னியலத்தோ மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com