இலங்கைப் படையினருக்கு மலேஷியாவில் கிளம்பும் எதிர்ப்பு

army_006வடக்கில் இருந்து படைகளைக் குறைக்க வேண்டும், இராணுவத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று உலகளாவிய ரீதியாக வலியுறுத்தப்படுகின்ற சூழலில், இலங்கை இராணுவத்தில்இருந்து ஓய்வுபெற்றவர்களை பாதுகாப்புச் சேவைக்குச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக மலேஷியாவில் சூடான விவாதம் தோன்றியிருக்கிறது.

மலேஷியாவில் பாதுகாப்புச் சேவை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு இருக்கின்ற தடையை நீக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக அந்த நாட்டின் பிரதி உள்துறை அமைச்சர் டருக் நூர் ஜஸ்லான் முகமட் கூறியிருந்தார்.

அங்கு வழக்கமாக நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்காக்களே பாதுகாப்புச் சேவைகளில் பணியாற்றிவந்தனர்.

அவர்களுக்கு மட்டும் அங்கு பாதுகாப்புச் சேவைகளில் பணியாற்ற அனுமதி உள்ளது.

ஆனால், இப்போது நேபாளத்தில் இருந்து கூர்க்காக்கள் வருவது குறைந்து போயுள்ளதால் மலேஷிய பாதுகாப்புச் சேவைகளின் நிலை மோசமடைந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு தான் வெளிநாட்டவர்களை பாதுகாப்புச் சேவை நிறுவனங்களில்சேர்த்துக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதி உள்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

அதிலும் குறிப்பாக, நன்கு பயிற்றப்பட்ட- அனுபவம்மிக்கவர்களான ஓய்வுபெற்ற இராணுவத்தினரை இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இந்த சேவையில் சேர்த்துக் கொள்ளலாம்என்றும் அவர் யோசனை தெரிவித்திருந்தார்.

மலேஷியாவின் பிரதி உள்துறை அமைச்சரின் இந்த யோசனையை மலேஷியாவின் தேசியகுற்றத்தடுப்பு வலையமைப்பின் தலைவர் அலெக்ஸ் சந்திரன் கிருசனும் வரவேற்றிருந்தார்.

பயிற்சியும் அனுபவமும் மிக்கவர்கள் என்பதால் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் பாதுகாப்புச் சேவைக்குப் பொருத்தமாக இருப்பர் என்றும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் துணையாக இருப்பர் என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்த திட்டத்துக்கு எதிராக மலேசியத் தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றன.

பினாங் மாகாண பிரதி முதல்வரான பேராசிரியர் இராமசாமி இது, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயல் என்று, மலேஷிய ஊடகம் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அதுபோலவே, மலேஷிய இந்திய காங்கிரஸும் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

போரின்போது மனித உரிமை மீறல்களை இழைத்த இலங்கைப் படையினரை மலேஷியாவில்பாதுகாப்பு சேவைகளில் சேர்த்துக் கொள்வது அத்தகைய கொடுமைகள், மனித உரிமை மீறல்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றது என்று அங்குள்ள தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு மலேஷியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஆதரவான நிலைஇருந்த போதிலும், அதனை வளரவிடாமல் மலேஷிய அரசாங்கம் எப்போதுமே தடுத்து வந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் பலரை இலங்கைப் புலனாய்வுத்துறையினர்மலேஷியாவுக்குச் சென்று கைது செய்து கொண்டு வந்திருந்தனர். அந்தளவுக்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கம் இருந்தது.

உலகில் வேறெந்த நாடும், விடுதலைப் புலிகளைப் பிடித்துக் கொடுக்கும் அளவுக்கு இலங்கை அரசுடன் நெருக்கத்தைப் பேணியிருக்கவில்லை.

இவையெல்லாம் அங்குள்ள தமிழர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான், இலங்கைப் படையினரை பாதுகாப்புச் சேவையில் சேர்த்துக் கொள்ளும் முயற்சிக்குஎதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

இந்த எதிர்ப்பு இலங்கைப் படையினர் மீதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் பாதிப்பைமீண்டும் ஒரு முறை உணர்த்துவதாக இருக்கிறது.

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாதுகாப்புச் சேவை நிறுவனங்களில் அதிக வரவேற்பு இருப்பது உண்மை.

இலங்கையில் முக்கிய பாதுகாப்புச் சேவை நிறுவனங்களில் பெரும்பாலானவற்றில் அவர்களே பணியாற்றுகின்றனர். பல வெளிநாடுகளிலும் கூட இவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

குறிப்பாக, இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும்படையினருக்கும் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பயிற்சி, அனுபவம் என்பன அதற்கு முக்கிய காரணம். உலகம் முழுவதும், தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ள சூழலில் இவ்வாறு பயிற்சி பெற்றவர்களை வைத்திருக்க பல்வேறு நாடுகளின்நிறுவனங்கள் விரும்புகின்றன. அவ்வாறு தான் மலேஷியாவும் விரும்பியது.

ஆனால், மனித உரிமை மீறல் விவகாரங்கள் என்ற சிக்கலை அங்கு சந்திக்க வேண்டியிருக்கிறது.

மலேஷியாவில் இருந்து இப்படியொரு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது என்று தெரிந்தவுடன்,அரசாங்கம் அதிகம் மகிழ்ச்சியடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் அரசாங்கத்தின் தற்போதைய நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்குஅது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

வடக்கில் படைக்குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இராணுவத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்ற நிலையில், மலேசிய உள்துறை அமைச்சின் வாய்ப்பு சாதகமாகவே இருந்திருக்கும்.

ஏனென்றால் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் பாதுகாப்பு மறுசீரமைப்புத் திட்டத்தில்இராணுவத்தின் ஆளணி வளத்தைக் குறைப்பதும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.

இலங்கையின் தற்போதைய இராணுவ ஆளணிப் பலம் என்பது, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர்,வல்லமைமிக்க ஒரு இராணுவ அமைப்புக்கு எதிராக போரிடுவதற்காக தயார்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

விடுதலைப் புலிகள் என்ற அந்த இராணுவ அமைப்பின் போரிடும் திறன் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தகைய பெரிய ஆளணி வளம் இராணுவத்துக்கு தேவையற்ற ஒன்றாகும்.

இதனால்தான், படிப்படியாக இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தீரவில்லைஎன்று முன்னைய அரசாங்கம் அதனை நிராகரித்து வந்தது.

இப்போதைய அரசாங்கத்தினால் அவ்வாறு தட்டிக்கழிக்க முடியவில்லை.

வடக்கில் இருந்து படைகளை குறைக்குமாறு முன்னைய அரசாங்கத்திடம் கோரிய போது, அங்கிருந்து அகற்றும் படையினரை எங்கே கொண்டு போய் நிறுத்துவது என்று பதில் கேள்வி தொடுத்திருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.

ஆனால் இப்போதைய அரசாங்கம் படைக்குறைப்பு என்பது நல்லிணக்கத்துக்கு அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறது.

அண்மையில் வொஷிங்டனில் அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தில் நடந்த கருத்தரங்கின்போது, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இராணுவமயநீக்கம் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், இராணுவ மயநீக்கம் மற்றும் படைக்குறைப்பு என்பனவற்றுக்கு இரண்டுதெரிவுகள் உள்ளன.

ஒன்று இராணுவத்தினரை ஆளணிக் குறைப்புச் செய்வது. அடுத்தது இராணுவத்தினருக்குவெளிநாடுகளில் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது.
அதற்காகத் தான், ஐ.நா. அமைதிப்படையில் கூடுதல் இடமளிக்க வேண்டும் என்று அரசாங்கம்தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

ஐ.நாவிடமும், அமெரிக்காவிடமும் இது தொடர்பாக அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வந்தாலும், ஐ.நா. அமைதிப்படைக்கு மேலதிகமாக 5000 படையினரை அனுப்பும் அரசாங்கத்தின்திட்டம் இன்னமும் கைகூடவில்லை.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போதும், இது தொடர்பாக மங்கள சமரவீர பேச்சுக்களைநடத்தியிருந்தார். குறிப்பாக ஐ.நா. வுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன் இதுபற்றிபேசப்பட்டிருந்தது.

ஆனாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நீடிப்பதால் இலங்கை இராணுவத்தினருக்குவாய்ப்பளிக்க அமெரிக்காவும் ஐ.நாவும் தயக்கம் காட்டுகின்றன.

அதற்காகவே பொறுப்புக்கூறலை விரைவாக நிறைவேற்றுமாறும் வலியுறுத்துகின்றன.

இன்னொரு பக்கத்தில் படையில் இருந்து ஓய்வுபெறுவோருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஆனாலும் அதுகூட அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது என்பதை மலேசியாவில்இலங்கைப் படையினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறிப்புணர்த்தியிருக்கிறது.

சுபத்ரா

-http://www.tamilwin.com

TAGS: