இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்!

Pokk_09_0_09_05யுத்தத்தின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்ன நடந்ததென்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், தொடர்பாக சுயாதீனமான நம்பகரமான பரந்துபட்ட விசாரணை பொறிமுறையை சர்வதேச தலையீட்டுடன் முன்னெடுக்கவேண்டும் என பல்வேறு மட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கான தேவை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய தேசிய அரசாங்கத்தின் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஆற்றிய உரை சுயாதீனமான விசாரணை பொறிமுறைக்கான அவசியத்தை மிகவும் வலுவாக உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்பதாகவே யுத்தம் முடிவடைந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார் எனவும் ஆனால் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியன்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனேயே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு மே 18ம் திகதி வெளிநாடொன்றிலிருந்து வருகை தந்த மஹிந்த ராஜபக்ச மண்ணை முத்தமிட்ட போதும் பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்த திகதிகூட ராஜபக்சவினருக்கு தெரியாது.

இரண்டு வருடங்கள் ஒன்பது மாதங்களாக சட்ட திட்டங்களுக்கு அமைவாக முன்னெடுத்துச் செல்லப்பட்ட யுத்தத்தை இறுதித் தருணத்தில் சிக்கலுக்குள் உள்ளாகும் நிலைமையை இவர்கள் ஏற்படுத்தி விட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான முறையில் முன்னெடுக்கப்பட்டு யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுவதற்கான நிலைமைகளை இறுதி நேரத்தில் ஏற்படுத்தி விட்டார்கள். இதனால் தான் வெள்ளைக் கொடி சர்ச்சையும் எழுந்துள்ளது.

யுத்தத்தின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்ன நடந்ததென்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச கண்காணிப்பாளர்களின் கண்காணிப்புடன் விசாரணையை முன்னெடுத்து இராணுவத்தின் மீது படிந்துள்ள கறை போக்கப்பட வேண்டும். இவ்விடயத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜுதீன், நடராஜா ரவிராஜ், எக்னெலிகொட ஆகியோர்களின் மரணங்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகங்களும் அவை தொடர்பான தகவல்களும் வெளியாகின்றன. அன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியாது எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கமாட்டாது.

இச்சம்பவங்கள் அனைத்தும் ஒரு நபருடனேயே தொடர்புபட்டுள்ளன. லசந்தவின் விடயத்தில் என் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது புனையப்பட்ட விடயமாகும். ஆகவே இவ்விடயங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கண்காணிப்புடன் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது மீண்டுமொருமுறை மிகவும் திட்டவட்டமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு மே 19ம் திகதி பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், அரசாங்கப்படைகள் யுத்தத்தை வெற்றிகொண்டதாகவும் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்தார்.

ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து சிறிது நேரத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பிரபாகரனின் சடலம் மற்றும் அது தொடர்பான தகவல்களை அரச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இந்நிலையில் அந்த சந்தர்ப்பத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச மட்டத்திலும் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அதனை மறுத்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம், புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தகளத்திலேயே கொல்லப்பட்டார் என அறிவித்தது.

இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்த நிலையிலேயே யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மட்டத்திலிருந்து வலியுறுத்தப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த விடயத்தில் சரத் பொன்சேகா தெரிவித்ததாக கூறப்படும் கூற்றொன்று பாரிய சர்ச்சைக்குள்ளானதுடன் அவர் சிறைவாசம் அனுபவிக்கவும் நேரிட்டது.

இவ்வாறான பின்னணியிலேயே நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது சரத் பொன்சேகா அமைச்சராக பதவி வகிப்பதுடன் நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய அறிவிப்பை பாராளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார். அதாவது யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியன்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்ததாக சரத் பொன்சேகா அறிவித்திருக்கிறார்.

அந்த வகையில் பார்க்கும்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உரையிலிருந்து பல்வேறு சந்தேகங்கள் எழுவதுடன் அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

குறிப்பாக பிரபாகரனின் மரணத்தில் காணப்படும் மர்மம் என்ன? அவர் எப்போது கொல்லப்பட்டார்? எவ்வாறு கொல்லப்பட்டார்? உயிருடன் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? அப்படியானால் இந்த மனித உரிமை மீறலை யார் மேற்கொண்டது? வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் கொல்லப்பட்டனரா? இந்த போர்க்குற்ற செயற்பாட்டில் யார் ஈடுபட்டனர் என்ற கேள்விகளுக்கு நாட்டு மக்களுக்கு விடைகள் தேவைப்படுகின்றன.

எனவே உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளவாறு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் விரிவான விசாரணை பொறிமுறையொன்று முன்னெடுக்கப்படவேண்டும். அதன் ஊடாக இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும்.

போருக்கான விதிமுறைகளை மீறி போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்கொண்டுவரவேண்டியது அவசியமாகும். நல்லிணக்க செயற்பாடுகளும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளும் ஏதோ ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் இறுதி செய்யப்படலாம்.

ஆனால் அவ்வாறு இறுதி செய்யப்படுவதற்கு முன்பதாக இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த விடயத்தில் நெகிழ்வுப் போக்கிற்கு இடமளிக்க முடியாது.

எனவே அரசாங்கம் தற்போது சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ளதைப் போன்று விரைவாக நம்பகரமான சுயாதீன விசாரணை பொறிமுறையை முன்னெடுத்து உண்மையைக் கண்டறிவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

அதுமட்டுமன்றி சர்வதேச பங்களிப்புடனும் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கண்காணிப்புடனும் விசாரணை பொறி முறையை முன்னெடுத்து என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டுமென யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.

எனவே சர்வதேசத்தின் பங்களிப்புடன் விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கு தற்போது அரசாங்கத்திற்கு கதவு திறக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தில் தொடர்ந்தும் தாமதித்துக் கொண்டிருக்கக்கூடாது. யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் முடிவடையப்போகின்றபோதிலும் இதுவரை இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படவில்லை.

எனவே தொடர்ந்தும் தாமதித்துக் கொண்டிருக்காமல் விரைவாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது? மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டனவா? சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றனவா? என்பது தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை மிகவும் வலுவான முறையில் வலியுறுத்திக் கூறுவதற்கு விரும்புகிறோம்.

-http://www.tamilwin.com

TAGS: