பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாரும் முன்வருகிறார்கள் இல்லை.
விடுதலைப் புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப் பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது.
இப்போது அவர்களை வைத்து இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத் தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை பயன்படுத்துதல், சாதியின் பெயரால் புறக்கணித்தல் என சமூகம் அவர்களை கையாண்டு வருகிறது.
தங்களது இளமைக் காலத்தில் உறவுகளை மறந்து, சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுகபோகங்களையும் துறந்து போராடப் புறப்பட்ட பெண்களில் ஒரு பகுதியினர் இறுதியில் உறவுகளை இழந்து கால்கள், கைகள் இன்றி, கண்கள் தெரியாமல், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நிரந்தரமாக நடக்க முடியாமல், உடம்பில் இரும்புத் துண்டுகளை சுமந்து கொண்டு 2009ம் ஆண்டு இராணுவத்திடம் வந்து நின்றார்கள்.
இதிலிருந்து ஆரம்பித்தது அவர்கள் மீதான தமிழ் சமூகத்தினரின் வசை. இதுவரை காலமும் தான் வாழ்ந்து வந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சிங்களமயப்பட்ட, இராணுவமயப்பட்ட சூழலில் வேதனைக்கு உட்பட்டு பல ஆண்டு காலம் தடுப்பில் இருந்து எமது சமூகம் எம்மை அரவணைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியில் வந்தவர்களை, சண்டையிலேயே செத்திருக்கலாம்” என்ற முடிவுக்கு தமிழ் சமூகத்தினர் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றனர்.
பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாரும் முன்வருகிறார்கள் இல்லை. பால்நிலை சமத்துவத்தை விடுதலைப் புலிகள் இருந்த போது மதித்து வந்த தமிழர்கள் இப்போது, இயக்கத்தில இருந்ததால நமக்கு கட்டுப்பட மாட்டினம் என்று கூறுகிறார்கள்.
இல்லையென்றால் தடுப்பில இருந்தவ, அங்க ஏதாவது நடந்திருக்கலாம் தானே? என்றும், தடுப்பில இருந்ததால பிறகு ஏதாவது பிரச்சினை வரலாம் என்றும் தமிழ் ஆடவர்கள் முன்னெச்சரிக்கையாகவே செயற்படுகிறார்கள்.
தடுப்பிலிருந்து விடுதலையாகி திருமணம் முடித்துள்ள ஒரு பிரிவினர் ஏன் திருமணம் செய்தோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தடுப்பில் இருந்து வந்து தனித்து இருந்ததால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர் தொந்தரவுக்கு உட்பட்டு வந்த இப்பிரிவினர், திருமணம் செய்து குழந்தையுடன் இருந்தால் பிரச்சினை வராது என்று எண்ணி துணைவன் குறித்து தகவலறியாமல் உடனடியாக திருமணங்களைச் செய்து கொண்டனர். இறுதியில் துணைகள் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர்களாக, மனைவியிடமிருந்து பணம் சம்பாதித்து வாழ்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.
2009ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் திருமணம் செய்து வைக்கப்பட்ட சில தம்பதிகள் கூட சாதியின் பெயரால் இன்று பிரிந்துள்ள செய்திகளும் வரத்தான் செய்கின்றன.
படுகாயங்களுக்கு உள்ளான பல பெண் போராளிகள் சாப்பிடுவதற்கே வழியின்றி ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் உண்டு வாழ்ந்து வருகின்றனர். ஊனமான நிலையில், உறவுகளையும் இழந்து, திருமணமும் செய்யாத பெண்களின் நிலை…?
இவர்களை வைத்து புலம்பெயர் மக்களிடம் பணம் சம்பாதிக்கும் கூட்டம் எப்போதும் இவர்களை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் விசாரணை நடத்த 2,3 மாதத்துக்கு ஒரு தடவை வந்து போன புலனாய்வுப் பிரிவினர் நல்லாட்சி அரசாங்கத்திலும் வரத் தவறுவதில்லை. புனர்வாழ்வு முடிந்து விடுதலையான பின்னரும், அதுவும் நல்லாட்சியிலும் புலனாய்வுப் பிரிவினரின் வருகை நொந்து போயிருக்கும் பெண் போராளிகளை இன்னும் நோகடிக்கச் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாது, தங்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு வடக்கு மாகாண சபை கூட இதுவரை உருப்படியாக எதையும் செய்ததாகத் தெரியவில்லை.
காயமடைந்த போராளிகளுக்கு உதவ வட மாகாண சபையால் ஒரு செயல்திட்டம் முன்வைக்கப்பட்டதுண்டா என்று போராளியொருவர் கேள்வி எழுப்புகிறார்.
போராளி, மாவீரர் குடும்பங்களைப் பதிவு செய்தார்கள், உதவி செய்யப் போகிறார்கள் என்றார்கள். பதிவு செய்தேன். போய்ப் பார்த்தால், அங்கர் பெட்டியொன்றும், நுளம்பு நெட் ஒன்றும் தருகிறார்கள் என்கிறார் மகளை இழந்த தாயொருவர்.
இந்த நிலையில், தமிழ் சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்டு வரும் பெண் போராளிகளின் கருத்தை பதிவு செய்ய ‘மாற்றம்’ முடிவு செய்தது. ஆனால் அவர்கள் தங்களது பெயர், படங்கள் வெளி வருவதை விரும்பவில்லை. இதனால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் இன்னும் நிலவுகிறது.
அவர்களுடனான உரையாடல் கீழ் தரப்பட்டுள்ளது.
7 வருடங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த இவர் காயம் காரணமாக விலகி கடைசி காலப் பகுதியில் காயப்பட்டவர்களுக்கு உதவ வைத்தியசாலைப் பணிகளைச் செய்து வந்துள்ளார்.காலில் ஏற்பட்ட காயத்தால் முழங்கால் பகுதியை மடிக்க முடியாததுடன் அந்தக் கால் கட்டையாகவும் உள்ளது.
இடம்பெயரும் போது எங்கட குடும்பமே சின்னாபின்னமாக பிரிந்தது. பிறகு நானும் அம்மாவும் மட்டும் தனித்துப் போயிட்டம். ஷெல் விழ விழ கிட்டத்தட்ட நூறு கொட்டில்கள் மாறிக் கொண்டே திரிஞ்சனாங்கள். இனிமே சாகத்தானே போறம் என்டு சனங்களோடு ஹொஸ்பிட்டல்ல இருந்த காயக்காரர்களுக்கு உதவ வெளிக்கிட்டம் என்கிறார் அவர்.
3 வயது பெண் பிள்ளையின் தாயான இவர் 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்திருக்கிறார். தடுப்பிலிருந்து வந்தவுடன் திரும்பவும் இராணுத்தினர் தொந்தரவு கொடுப்பார்கள் என்ற பயத்தில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார் அவர்.
தடுப்பு முகாம் போய் வந்து திருமணம் செய்தது என்னத்துக்கு என்டா, திரும்பவும் எனக்கு ஏதும் பிரச்சினை வந்துரும் என்ட பயத்தாலதான். தனியாளா இருந்தா நிறைய பிரச்சினதானே. சந்தேகப்பட்டு விசாரிக்க வருவினம் என்டதால திருமணம் செய்தனான் என்கிறார்.
இவரின் நெருக்கடியான நிலையை பயன்படுத்திக் கொண்ட ஒருவர், முன்னாள் போராளி ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறி இவரை அணுகியிருக்கிறார்.
அவர் ஏற்கனவே மெரி பண்ணிட்டார். எனக்கு அந்த விஷயத்த சொல்லாமதான் கல்யாணம் செய்தவர். இயக்கத்தில் இருந்தா ஒழுக்கமா இருப்பாங்க என்ட எண்ணத்தோடதான் என்ன அவர் கல்யாணம் செய்தவர். ஆனால், பிறகு என்ன சந்தேகப்பட்டு தொல்லை குடுக்கத் தொடங்கினவர். பொறுக்க முடியாமல்தான் அவர விட்டு பிரிஞ்சனான் என்று கூற அவரிடம் எதுவித வருத்தமும் தென்பட்டதாக தெரியவில்லை.
மாறாக ஆண் துணையில்லாமல் வாழ முடியும் என்ற தெம்பு அவரது பேச்சில் காணக் கூடியதாக இருந்தது.
அரசாங்கம் மாறின பிறகு யாராவது உங்கள விசாரிக்க வந்தவங்களா என்று கேட்டேன்? இப்பவும் மூன்று மாதத்துக்கு முன்னாடி வந்து சிஐடியால விசாரிச்சவங்க. எங்கட மனநில நல்லாதான் இருக்கு. இவையளே ஒரு பிரச்சினைய உண்டாக்குவினமோ என்ட பயம் இருக்கு.
இப்ப நீங்க வந்து போன பிறகு இங்க உள்ள சனம் ஏதாவது பேசும். நல்லா உடுத்தி போனா, இவக்கு இது எங்கால? என்டு வித்தியாசமாக பார்ப்பாங்க. பொடியள் யாராவது வந்திட்டு போனாலும் இவவுக்கும் அந்த பொடியனுக்கும் தொடர்பிருக்கோ என்று பேசுவாங்க. அப்படித்தான் எங்க சமூகம் இருக்கு.
இரு கண்களும் தெரியாத முன்னாள் பெண் போராளி ஒருவரை சந்திக்கச் சென்றேன். கேட் (மூன்று தடிகள் குறுக்காக போடப்பட்டுள்ளன) அருகே சென்று ‘அக்கா’ என்று அழைக்க மூன்று நான்கு நாய்கள் பாய்ந்து கொண்டு வந்தன. வீட்டிலிருந்து பலத்த சத்தமொன்று, அப்படியே நின்றன அத்தனை நாய்களும்.
வெள்ளைப் பிரம்புடன் இன்னொரு பெண் ஒருவரின் (அக்கா) உதவியுடன் வந்தவர் போரின் போது இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் கண்பார்வையை இழந்திருக்கிறார். வயது நாற்பதைத் தாண்டியிருக்கும். இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, எப்படிப் போகுது அக்கா என்றேன்?
பொழுது பட்டாலே வீட்டுக்குள்ள படுத்திறுக்கிறதே பயமா கிடக்கு. றோட்ல தனியா திறியிறதென்கிறது சாத்தியம் இல்ல. பெண்கள் வாழுறதென்டா பயம்தான். இரவு எட்டு எட்டரைக்கெல்லாம் கேட்டெல்லாம் பூட்டிக் கொண்டு வீட்டுக்குள இருக்கிற நிலமதான். வீட்டுல. ஒரு ஆண் இருந்தா பிரச்சின இல்ல,.தனிய பெண்கள் இருந்தா பயம்தான் என்று கூறுகிறார் அவர்.
திருமணமாகி கணவர் கைவிட்ட நிலையில் கண்தெரியாத தங்கைக்கு உதவியாக வாழ்ந்து வரும் அக்கா கதவில்லாத குசினியில் சமைக்கிறார்.
போராளியா இருந்த உங்கள இப்போ சனம் எப்படிப் பார்க்குது” என்று கேட்க, றோட்டால கண்தெரியாத ஒருத்தர் போனால் நக்கலும் நையாண்டியும்தான். ஆமிக்காரரும் இங்கால போறது வாரதுதானே, அவங்க எங்கள கண்டுட்டு பாவம் என்டு போவாங்க என்றும் கூறுகிறார்.
சாப்பாட்டுக்கு என்ன செய்றீங்க என்று கேட்க, “நாங்கள் முட்டை விற்கிறனாங்கள். முட்டை வித்திட்டு சீனி, தேயில வேண்டுறனாங்கள். அடை வச்சதுதானே, அதனால முட்டை இல்ல. சீனி, தேயில வேண்டவும் காசு இல்ல, இன்னும் தேத்தண்ணியும் குடிக்கல்ல, நாங்க நேற்று மதியம் சாப்பிடேல்ல, இரவு சாப்பிட்டனாங்கள். இன்னும் ஒன்டும் இல்ல. இனித்தான் எதுவும் செய்யணும்.
எல்லாரிட்டயும் உதவி கேட்டு களைச்சுப் போனனான். இப்ப ஏதாவது எங்கட சுய முயற்சியில செய்யலாமுனுதான் கோழிகள வளர்த்து இருக்கனான். இருந்தா சாப்பிடுவம், இல்லையென்டா இருப்பம் என்று கூறுகிறார்.
போராளியான இவரது திருமணத்தை விடுதலைப் புலிகள் அமைப்பினரே செய்து வைத்துள்ளனர். மே மாதம் 16ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாகக் கூறிய போதும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் தன்னைக் கைது செய்யவில்லை என்று கூறுகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் வந்து விசாரிச்சினம். வேற ஆக்கள்ட்டயும் விசாரிச்சிரிக்கினம். அவ இயக்கத்தில இருந்தவவோ? என்ன நடந்தது என்டு? அரசாங்கம் மாறியும் எந்தவித வித்தியாசத்தையும் உணராதவராக பேசுகிறார்
அவர். என்ட கால் அடிப்பாதம் தேய்ஞ்சி போயிருக்கு. புதுசா ஒன்டு செஞ்சி எடுக்க அலைஞ்சி திரியணும்– காலைத் தூக்கிக் காட்ட அடிப்பாதம் தேய்ந்து ஓட்டையொன்றும் உருவாகி விட்டது.
அண்மையில் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்த விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயைச் சந்தித்துப் பேசினேன்.
16 வயதிலேயே அமைப்பில் சேர்ந்து, தடுப்பிலிருந்து வந்து 3 வருடங்கள் மட்டுமே தன்னுடன், அதுவும் தூர விலகி இருந்ததாகக் கூறுகிறார் தமிழினியின் தாய்.
தடுப்பிலிருந்து விடுவிக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை என்று கூறும் அவர், அவ்வாறு விடுவித்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள் தன்னுடன் இருந்திருப்பார் என்றும் கூறுகிறார்.
அருகில் தமிழினியின் தம்பி உட்கார்ந்து, அக்கா உயிரிழந்ததை வைத்து நிறையப் பேர் உழைத்ததாகக் கூறுகிறார்.
அக்கான்ட செத்த வீட்டுக்குப் பிறகு நிறைய பேர் உழைச்சிருக்கினமே தவிர யாரும் எங்களுக்கு உதவி செய்ய வரல்ல.
அக்கா சாகேக்க இந்த வீடு மட்டும்தான் (ஓலைக்குடிசை). அக்காவ கொண்டு வந்து வச்சிருக்கேக்க சரியான மழை. சுத்தி வர எல்லாம் நின்டு கொண்டு போர்த்திக் கொண்டுதான் இந்த இடத்தில இருந்தனாங்கள்.
வீடு கட்டுறம் என்டு காசு சேர்த்தாங்க அவுஸ்திரேலியாவுல. ஒரு லட்சம் காசு தந்தாங்க. அவ்வளவுதான். அவாட இலட்சியத்துக்காக செலவழிக்கப் போறோம் என்டு சொல்லித்தான் காசு சேர்த்தவங்களாம்.
ஒரு நாள் மீட்டிங்ள மட்டும் 6 லட்சம் சேர்த்தவங்களாம். மிச்ச காசுக்கு என்ன நடந்தது என்டு தெரியா என்று முடிக்க முன் அவரின் தாய் குறுக்கிட்டு, முழுமையா எங்களுக்கு வந்தடையலயே? நீங்கதானே எடுத்துக் கொண்டீங்க. சுவிஸ், அங்க இங்கனு காசு சேர்த்திருக்காங்க. ஆனா, ஒன்டும் வந்து சேரல என்று முடிக்கிறார்.
போராளிக் குடும்பம், மாவீரர் குடும்பங்கள் இருந்தா இத நிரப்பி தாங்க என்டு ஜி.எஸ். போம் ஒன்டு தந்தவர். கொஞ்சப் பேர் பயத்தால நிரப்பியே கொடுக்கல்ல. அம்மா பயப்படல்ல. இரண்டயும் நிரப்பி கொடுத்தன்.
ஏதோ குடுக்கப் போறாங்க என்டு வரச் சொன்னாங்க. என்ன குடுத்தவங்க? ஒரு அங்கர் பெட்டியும், ஒரு நுளம்பு நெட்டும் தந்தவங்க. இதெல்லாம் ஒரு பிஸ்னஸ்.
இங்க இருக்கிறவங்கள படம் பிடிச்சி அங்க கொண்டுபோய் காட்டி காசு சேர்த்திட்டு மூன்டுல ஒரு பங்குல இங்க வந்து அங்கர் வாங்கிக் குடுக்கிறது என்று தமிழினியின் தம்பி கூறுகிறார்.
– tamilwin.com
வெளி நாட்டில் வாழும் ஸ்ரீலங்கா தமிழன் என்ன பண்றான் ? அவர்கள் இவர்களை திருமணம் செய்யலாம் அல்லவா? இவர்களிடமும் வரதட்சனை ரொம்ப எதிர் பாக்குறாங்களா ?