இலங்கை மொத்தமாக இரண்டு இலட்சம் இராணுவத்தினரைக் கொண்டுள்ளது.
அதில், ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடக்கிலேயே நிலை கொண்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீதமுள்ள 50 ஆயிரம் இராணுவத்தினரில், 20 ஆயிரம் இராணுவத்தினர் மட்டக்களப்பிலும், 30 ஆயிரம் இராணுவத்தினர் ஏனைய மாகாணங்களிலும் நிலை கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கில் அதிகளவான இராணுவம் இருப்பதால், தமிழ் மக்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழ முடியாதுள்ளது. அரசாங்கம் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வலிகாமம் வடக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பூர்வீக நிலங்களிலிருந்தும் இராணுவம் வெளியேற வேண்டும். இராணுவம் வெளியேறினால், மக்களின் காணிகள் அவர்களுக்கு கிடைக்கும். வடக்கிற்கு 5 ஆயிரம் இராணுவத்தினர் போதுமானது.” என்றுள்ளார்.
-http://www.puthinamnews.com