பொது எதிரணியின் சதியாகவும் இருக்கலாம்!- விக்ரமபாகு கருணாரட்ன

wick_karunaratneசாவகச்சேரியில் கிடைக்கப்பெற்ற தற்கொலை அங்கி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் சதித்திட்டமாகவும் இருக்கலாம் என்று நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள சமசமாஜ கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல், தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், வெள்ளை வான் கலாசாரம் மற்றும் உண்மைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு அச்சுறுத்தல் போன்ற காரணங்களை முன்வைத்து நாங்கள் ஜெனிவாவில் உள்ள மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்வதற்கு அன்று முற்பட்டோம்.

இதன் போது ஜெனிவாவில் முறைப்பாடு செய்வதற்கு செல்பவர்கள் தேசத்துரோகிகள் என்றும் அவர்களை கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டும் எனவும் கூறினார்கள்.

இவ்வாறான நிலையில் இன்று எதிர்க்கட்சியில் இருக்கும் தங்களுக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு போதுமான நேரம் வழங்கப்படுவதில்லை, எதிர்க்கட்சியில் அதிக பலம் இருக்கும் எங்களுக்கு எதிர்க்கட்சி பதவி மறுக்கப்பட்டுள்ளது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றனர் போன்ற காரணங்களை முன்வைத்து ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்வதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் ஜெனிவா சென்றுள்ளனர். இவர்களின் நிலைப்பாட்டை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

மேலும் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி எவ்வாறு அங்கு வந்தது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இது விரக்திக்குள்ளான தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் தூக்க ஆரம்பித்துள்ளார்களா?என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய விடயமாகும்.

தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றனர் என்ற வேதனைக்கு இதனை செய்திருக்கலாம். இந்த நிலைமையில் இருந்து அவர்களை மீட்பதென்றால் அதிகாரப்பகிர்வு, அவர்களின் காணிகளை மீள ஒப்படைத்தல், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்.

அப்படியில்லையென்றால் இந்த செயல் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் சதித்திட்டமாகவும் இருக்கலாம்.

அவர்களுக்கு இராணுவத்துக்குள் மற்றும் யாழில் தொடர்புகள் இருக்கின்றன. இராணுவத்துக்குள் இருக்கும் அரசியல் லாபம் கொண்டவர்கள் மூலம் இதை மேற்கொண்டு சர்வதேசத்துக்கு காண்பிக்க இதனை செய்தார்களா என்பது குறித்தும் ஆராயவேண்டும்.

சதிகாரர்கள் திட்டமிட்டு இதனை இந்த இடத்தில் வைத்து சர்வதேசத்துக்கும் நாட்டு மக்களுக்கும் காட்டி பீதியை ஏற்படுத்தி, அரசாங்கத்தின் நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு இவை அனைத்தும் பொய்யானவை என்று கூற செய்திருக்கலாம்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

தற்போது இந்த தற்கொலை அங்கி கிடைத்திருப்பது அவர்களுக்கு இனிப்பு கிடைத்தது போன்றதாகும். அத்துடன் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தை கொண்டு செல்வதற்கும் வாய்ப்பாக மாறியுள்ளது.

எனவே இது தொடர்பாக அரசாங்கம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையென்றால் இவ் வாறான செயல்கள் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை உண்மைப்படுத்தி விடும் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: