இராணுவப் புலனாய்வுப் பிரிவு செய்த கொலைகள், புலிகள் மீது சுமத்தியமை அம்பலம்

srilanka_army_rapeகடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட போதிலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அரசியல் மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலைகளில் பிரபல இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரத்ன ஆகியோரின் கொலைகளும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் பலனாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் வழங்குமாறு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இராணுவப் புலனாய்வு பிரிவினரிடம் இருந்த ஆவணங்களை பரிசோதித்த போதே இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் பல சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தமான தகவல்களும் அதில் அடங்குகின்றன.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர், விடுதலைப் புலிகளின் முக்கிஸ்தர்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை பயன்படுத்தி இந்த கொலைகளை செய்துள்ளனர்.

மேஜர் ஜெனரல் லக்கி அல்கம 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜா-எல பிரதேசத்தில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த தற்கொலை தாக்குதலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே வழிநடத்தியிருந்தாக தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக அன்று விசாரணை நடத்திய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒபாத கங்கானம்கே ஹேமச்சந்திர, இது சம்பந்தமாக பாதுகாப்புச் சபைக்கு முன்வைத்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை வழிநடத்திய புலிகளின் முக்கிஸ்தர், இராணுவ புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரல் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

விசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமச்சந்திர, இராணுவ புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரலை கைது செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரி போதிலும் அனுமதி வழங்கப்படவில்லை. இராணுவ புலனாய்வுப் பிரிவின் மேஜர் ஜெனரலை கைது செய்தால், இராணுவத்தின் மன தைரியம் பாதிக்கப்படும் எனக் கூறி விசாரணைகளை கிடப்பில் போட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த போது, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் திகதி கண்டி திஹண நகரில் வைத்து விசேட அதிரடிப்படையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரத்ன மற்றும் அவரது சாரதி ஆகியோர் கிளைமோர் குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக மூன்று பேரிடம் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கை காலத்தில் உபுல் செனவிரத்ன, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடமையாற்றியதுடன் கருணா தரப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார்.

கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த விலகிய பின்னரும் உபுல் செனவிரத்ன அவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

எனினும் பிரதேசத்தில் செயற்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் ஏற்பட்ட பகை காரணமாக, விடுதலைப் புலிகளை கொண்டு, உபுல் செனவிரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://www.tamilwin.com

TAGS: