தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும்.
முஸ்லிம் மக்களுக்கு வடக்கு, கிழக்கில் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படுவதுடன் சிங்கள மாநிலத்தில் மலையக மக்களுக்கு தன்னாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்படவேண்டும் என்று அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு முன்மொழிவில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண சபையின் அரசியல்தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு முன்மொழிவுகளை நேற்று முன்தினம் சபையில் சமர்ப்பித்து முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உரையாற்றியுள்ளார். இந்த உரையின் போதே அவர் இவ்வாறான முன்மொழிவினை முன்வைத்திருந்தார்.
அரசியல்தீர்வை உள்ளடக்கிய அரசியலமைப்பினை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இதற்கென பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளதுடன் முதலாவது அமர்வும் இடம்பெற்று முடிந்துள்ளது.
அரசியல்யாப்பு சபையில் பிரதி தவிசாளராக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் 21 பேர் கொண்ட செயற்பாட்டுக்குழுவொன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் அரசியல்தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு திட்டமொன்றினை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையினர் தயாரித்துள்ளனர்.
இந்த திட்ட வரைபு எதிர்வரும் 16 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் மீதான முன்மொழிவுகள் நேற்று முன்தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரைபின் மீதான விவாதம் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.
இதனையடுத்தே வடமாகாண சபையின் திட்டவரைபு கூட்டமைப்பின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவில் இந்தியாவில் மாநிலங்கள், மொழிரீதியாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போன்று இலங்கையானது அடிப்படையில் இரண்டு பரந்த மாநிலங்களாக அதாவது பெரும்பான்மையாக தமிழ் பேசும் பிரதேசத்தைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், பெரும்பான்மையாக சிங்களம் பேசும் மக்களைக் கொண்ட ஏனைய 7 மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
இவ்விரு பரந்த மொழி ரீதியான மாநிலங்களிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வடக்கு, மற்றும் கிழக்கில் ஒரு அலகாகவும், தமிழ் பேசும் மலையகத் தமிழர்கள் நாட்டில் ஏனைய பகுதியில் ஓர் அலகாகவும் இனங்காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
இவர்களுக்கு தன்னாட்சிப் பிராந்தியங்கள் வழங்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைவிட தமிழ் பேசுவோரைக் கொண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமானது மாநிலப் பாராளுமன்றத்தை கொண்டிருக்கும்.
வடக்கு, கிழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்னாட்சிப் பிராந்தியம், மலையக தமிழ் தன்னாட்சிப் பிராந்தியம் பாதிக்கத்தக்கவாறு மத்திய கூட்டாட்சி சமஷ்டிப்பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் உரிய மாநிலத்தாலோ அல்லது தன்னாட்சிப் பிராந்தியங்களாலோ அங்கீகரிக்கப்படாத வரை நடைமுறைக்கு வரக்கூடாது. மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு போதிய சுயாட்சி ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
இதனைவிட பொலிஸ் அதிகாரங்களும் மாநிலத்திற்கு வழங்கப்படவேண்டும் என்றும் வடமாகாணசபையின் தீர்வுத் திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதேபோல் அரச கருமமொழி தொடர்பிலும் தேசிய கீதம் குறித்தும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் பல்வேறு வகையான திட்டங்கள் இந்த முன்மொழிவில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
வடமாகாண சபையானது தீர்வுத்திட்ட முன்வரைபை தற்போது தயாரித்துள்ளது. இதேபோன்றே முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை இணைத்தலைமையாகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையும் நிபுணர் குழுவொன்றினை அமைத்து அரசியலமைப்பு மாற்றம் தொடர்பிலும் தீர்வுத்திட்டம் குறித்தும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளது.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சமஷ்டியுடன் கூடிய சுயாட்சி அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை தனது தீர்வுத்திட்ட முன்வரைபில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தமிழ் மக்கள் பேரவையும் வடமாகாணசபையும் தமது தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை தற்போது முன்வைத்துள்ளன. இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பங்கள் வரலாற்றில் தவறவிடப்பட்டுள்ளன.
இதனால் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கவேண்டிய நிலை உருவாகியிருந்தது. 3 தசாப்தகால யுத்தத்திற்குப் பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் அரசியல் தீர்வு காணப்படாமையானது கவலையளிக்கும் விடயமாகவே உள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளவேளையில் அரசியல்தீர்வைக் காணவேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விடயத்தில் அக்கறை காண்பித்து வருகின்றனர். இதனால்தான் பாராளுமன்றத்தை அரசியல்யாப்பு சபையாக மாற்றி அரசியலமைப்பினை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமானால் தமிழ் பேசும் மக்களின் சார்பில் எத்தகைய தீர்வு வேண்டும் என்ற ஒரு திட்டவரைபு இருக்கவேண்டியதும் அவசியமேயாகும். தமிழ் பேசும் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்ற விடயம் தென்பகுதி அரசியல் தலைமைகளுக்கு தெரிய வேண்டியது அவசியமேயாகும்.
கடந்த அரசாங்க காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் பேசும் மக்களின் சார்பிலான தீர்வுத்திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. பேச்சுக்கள் இடம்பெறுவதும் பின்னர் முரண்பட்டு பேச்சுவார்த்தை முறிவடைவதுமே வரலாறாக காணப்படுகின்றது.
இவ்வாறான தவறினை இனியும் தமிழ் தலைமைகள் விடக்கூடாது. நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எத்தகைய தீர்வை எதிர்பார்க்கின்றனர் என்ற விடயத்தை நாம் தென்பகுதி தலைமைகளுக்கு எடுத்துக்காட்டவேண்டும். இதற்கு வடமாகாண சபை தயாரித்துள்ள தீர்வுத்திட்ட முன்வரைபும் தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள திட்டமும் ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்திருக்கின்றது.
இந்த முன்னுதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பானது தமிழ் பேசும் மக்கள் சார்பிலான தீர்வுத்திட்ட வரைபொன்றினை தயாரிக்கவேண்டும். அந்தத் தீர்வுத்திட்டத்துடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து அரசாங்கத்துடன் பேசவேண்டும்.
இந்த பேச்சுவார்த்தைகளில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்தாவது ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு முயற்சிப்பது சிறந்ததாக அமையும்.ஏனெனில் அரசியலமைப்பு மாற்றத்தின் போது மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை ஓரளவிற்கு வழங்கி அதனையே தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வாக காண்பிப்பதற்கு அரசாங்கத் தரப்பு முயலக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன.
அரசாங்கத்தரப்பினரின் பேச்சுக்களிலிருந்து இவ்வாறான சந்தேகம் எழுகின்றது. 6 தசாப்தகாலமாக அகிம்சா வழியிலும் ஆயுதப்போராட்டத்தின் மூலமும் போராட்டங்களை நடத்தி பெரும் இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களுக்கு அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு அமையவேண்டியது இன்றியமையாததாகும்.
இதற்காக தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டியது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.இந்த நிலையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு இதுதான் என்ற விடயத்தை வடக்கு, கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை முன்வைக்கவேண்டும்.
இதற்கு வடமாகாணசபையின் தீர்வுக்கான முன்மொழிவையும் தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளையும் ஆராய்ந்து யதார்த்தபூர்வமான திட்டமொன்றினை தயாரிப்பதற்கு முன்வரவேண்டும்.
இதன்போது முஸ்லிம் மக்களின் தலைமைகளுடனும் கலந்துரையாடி சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் ஒன்றிணைந்த தீர்வை முன்வைக்கவேண்டும்.
இதன் மூலம் அரசாங்கமானது இத்தகைய தீர்வுத்திட்டம் தொடர்பில் பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்த விரும்புகின்றோம்.
-http://www.tamilwin.com