பிரித்தானியப் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றது.
பிரித்தானியத் தொழில்கட்சி உறுப்பினர் ஜோன் றயன் அவர்களின் தலைமையில் மாலை 7:00 மணி முதல் வரை 9:00 மணிவரை நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும், தொழில் கட்சியின் தலைவருமான ஜெறமி கோபன் ( The Leader of the Labour Party Rt Hon Jeremy Corbyn MP),
கெளரவ விருந்தினராக நிழல் வெளிவிவகார அமைச்சர் கிலாரி பென் (The Shadow Foreign Secretary Rt Hon Hilary Benn MP), ஆகியோர் கலந்து கொண்டு இலங்கை நிலவரம் தொடர்பில் மிக ஆழமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை எனும் தலைப்பில் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரான்ஸிஸ் ஹறிஷன் (Former BBC Presenter Francis Harrison) , ஷோனியா ஸ்கீட்ஸ் (Director of Freedom from Torture Sonya) , கலும் மக்ரே(Director of Killing Fields Cullum Mcrae ) ,
DR. சுதா நடராஜா (SOAS University of London Lecturer Dr Sutha Nadarajah), தொழில் கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் திரு. சென் கந்தையா (Tamils for Labour party Leader), இனப்படுகொலை, போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான சாட்சிகளை கையாளும் விவகாரக் குழுவின் செயற்பாட்டாளர் செல்வி. அம்பிகை சீவரட்ணம் ஆகியோர் இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை தொடர்பாக ஆதாரங்களோடும், புள்ளிவிபரங்களோடும் உரையாற்றியிருந்தனர்.
அத்தோடு பல தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இலங்கையில் இராணுவத்தினரின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோர், உட்பட ஏராளமான மக்கள் இவ் ஒன்றுகூடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com