தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் எடுத்த சில முடிவுகள் கேள்விக்குரியது என தமிழ்த் தேசியகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை (19) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,சமஷ்டி அரசியலமைப்பு முறைமை மற்றும் வட, கிழக்கை இணைதல் அவசியம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், வட-கிழக்கு இணைக்கப்படபோவதில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்துள்ளனர்.
ஆகவே இது தொடர்பாக, அரசாங்கத்துடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆதரவுடன் இந்த வருடம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் தமிழர்களின் இன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com