வடக்கிலிருந்து சமஷ்டி என்ற குரல் ஏன் வந்தது ? என்பது தொடர்பில் ஆராய்ந்துசிந்தித்து பார்க்க வேண்டும் அந்தவகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைப்பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அடுத்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை ஏற்படுத்த முரண்பாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நேற்று காலியில் இடம்பெற்ற ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி தலைமையிலானஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின பொதுக் கூட்டத்தில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
காலியில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மாலை 4.20 க்கு வருகை தந்தார். வந்த சில மணித்தியாலயங்களில் மழை ஆரம்பித்தது. இந்நிலையில் ஜனாதிபதி திறந்தவெளி மேடையில் உரையாற்றாமல் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் உரையாற்றினார்.
இங்கு தொடர்ந்தும் ஜனாதிபதி உரையாற்றுகையில்,
1956 களிலும் 1960 களிலும் வடக்கிலிருந்து சமஷ்டி வேண்டுமென்ற குரல் ஒலித்தது. அதேபோன்று 26 வருடகாலம் நாட்டில் பயங்கர யுத்தமும் நிலவியது. எனவே சமஷ்டி தேவை என்ற குரல் ஏன் வடக்கிலிருந்து ஒலித்தது. அதேபோன்று ஏன் 26 வருடகால யுத்தம் நாட்டில் ஏற்பட்டது? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
அது தொடர்பில் ஆராய வேண்டும்.அத்தோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றையாட்சிக்குள் நாம் தீர்வு காண வேண்டும். அதற்காக நாம் இன, மத, குல, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் ஆரம்பகட்டமாக இலங்கையிலிருந்து கடலுணவுப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. அதேபோன்று ஆடை தொழிற்துறைக்கு வழங்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் தடை செய்யப்பட்டது. இவையனைத்தும் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையினை விதிப்பதற்கு முன்னேற்பாடுகளாக மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இன்று எமது முயற்சியினால் ஐரோப்பிய ஒன்றியம் தனது தடையினை நீக்கியுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு (நேற்று) அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளது.
அதேவேளை தடைவிதிக்கப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் இன்னும் இரண்டொரு வாரங்களில் மீண்டும் எமக்கு கிடைக்கவுள்ளது.அத்தோடு உலக நாடுகள் பேதமில்லாமல் இன்று எமது அபிவிருத்திக்கு உதவி புரிய முன்வந்துள்ளன. இது எமது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜீ– 7 பொருளாதார மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்கான அழைப்பு இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்தது. இது எமக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். இது எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மேலும் உதவிகள் கிடைக்கும் சந்தர்ப்பமாக அமையும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் எந்த சவால்கள் வந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை. அதற்கான அடித்தளம் இன்று காலி மே தினத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றார்.
நன்றி : Virakesari
ஒரு இனம் தனகென்று ஒரு நாடு அமைப்பதில் என்ன குற்றம் இருக்கிறது.உலகத்தில் சிறு சிறு சமூகங்கள் எல்லாம் தனி கொண்டு சந்தோஷமாக வாழவில்லையா. சிங்கப்பூர் ,புருனை ,கிழக்கு திமோர் பிஜி இன்னும் பல நாடுகள் சமீபத்தில் நாகரீகம் கண்டவை.ஆனால் தமிழனோ கல்தோன்றா மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி என்பது உலகம் அறியுமே .அப்படி இருக்கையில்நம் சமுதாயம் இன்னொரு சமுகத்தின் கீழ் வாழ்வது அடிமையாகும்.அதுவும் அந்த ஆளும் சமுகம் கொடுமைகள் செய்தால் அவனோடு சேர்ந்து வாழ நினைப்பது அடி முட்டாள்தனம்.