வடகிழக்கு இணைப்பில் அம்பாறைத் தமிழர்களது இருப்பிடம் பாதுகாக்கப்பட வேண்டும்: கவீந்திரன்

kalai_ampara_well_001வடகிழக்கு இணைப்பில் அம்பாறை மாவட்ட தமிழர்களது இருப்பிடம் பாதுகாக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஸ்ரீ முத்து மாரியம்மன் இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழர்களது கலை, கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் இறுவெட்டு வெளியிடும் நிகழ்வும், விளையாட்டு நிகழ்வும் இந்து இளைஞர் மன்றத்தலைவர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சி தலைவர் ஏகாம்பரம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் கிராமப் பெரியார்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொணடனர்.

amparaiஇவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடகிழக்கு இணைப்பில் அம்பாறை மாவட்ட தமிழர்களது இருப்பிடம் பாதுகாக்கப்படவேண்டும் இம்மாவட்ட தமிழர்கள் எப்போதும் தமிழர்களோடுதான் வாழ விரும்புகின்றார்கள்.

மாறாக முஸ்லிங்களோடு, சிங்களவர்களோடு வாழ விரும்பவில்லை. நாங்கள் மட்டக்களப்பில் உள்ள தமிழர்களோடு, வடகிழக்கில் உள்ள தமிழர்களோடுதான் வாழ விரும்புகின்றோம்.

அப்போதுதான் எமது மாவட்டத்தின் பலம் அதிகரிக்கும் எமது தமிழ் மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள்.

வடகிழக்கில் இருக்கும் ஏனைய மாவட்டங்களுக்கு அளிக்கின்ற உதவிகளை விட அம்பாறை மாவட்டங்களுக்கு அதிகளவான நிதியை அளிப்பீர்களானால் தமிழர்களது பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படும்.

அம்பாறை மாவட்டத்திலே ஒரு இலட்சத்து முப்பதாயிரம் தமிழர்கள் இன்றும் வாழ்கின்றனர்.

அதாவது திருகோணமலையில் உள்ள தமிழர்களது தொகைக்கு அம்பாறையிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அம்பாறையில் அவ்வளவு தமிழ் மக்கள் வாழ்கின்றார்களா என்ற கேள்வியினை கேட்கின்றார்கள்.

புலத்தில் வாழ்கின்ற மக்கள் அம்பாறையில் வேற்று இனத்தவர்கள் தான் அதிகமாக வாழ்கின்றார்கள் என்ற சிந்தனையுடன் இருக்கின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் இந்த நாட்டிலே நடைபெற்ற போராட்ட காலங்களிலும் தமிழர்களே அதிக பங்கெடுத்ததுடன், அன்றும் தமிழர்கள் இங்கு அதிகமாகவே வழ்ந்தார்கள்.

இன்று தமிழர்களது கலாசாரம் மேற்கத்தே கலாசாரத்தின் ஊடுறுவலால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மதமாற்றங்கள் நடைபெற்று வருகின்றது.

இவற்றுக்கெல்லாம் எமது மதத்தில், மதத்தலங்களில் மக்களுக்கு தேவையான விழுமியக்கருத்துக்கள் குறைந்ததே இதற்கு மூல காரணங்களாகும் எமது சமூகத்தில் மிகவும் தலை சிறந்த அறிவாளிகள், வரலாற்றினை தெரிந்தவர்கள் இருக்கின்றார்கள்.

அவ்வாரானவர்கள் எமது எதிர்கால சந்ததியினரின் நலன் வேண்டி நல்ல பல கருத்துக்களை அவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும். அவ்வாறு செய்யுமிடத்து எமது சமூகம் நல்ல பாதையில் பயணிக்கக்கூடியதாக இருக்கும்.

ஆலயங்கள் எமது கலை, கலாச்சார மத விழுமியங்களை போதிப்பதில் அதிக சிரத்தை எடுக்கவேண்டும். அதாவது இளம் சமூகத்தினரிடையே நல்ல பல ஒழுக்க கருத்துக்களை விதைக்க வேண்டும்.

வெறுமனே ஆலயங்களுக்கு போய் பிரசாதங்களை பெறுபவர்களாக இருக்காமல், எமது பண்பாடுகளை கட்டிக்காக்கின்றவர்களாக நாம் ஒவ்வொருவாரும் மாறவேண்டும்.

அண்மையில் பொத்துவிலில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபம் வெறும் கட்டடத்திற்காக அமைக்கப்பட்டதொன்றல்ல மாறாக எமது கலை,கலாசார மத விழுமியங்களை பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அந்த மையத்தினை அமைத்தோம்.

அங்கு அந்த இடத்தில் நாங்கள் கலாசார மண்டபத்தினைஅமைக்கவில்லை என்றால் எமது சகோதர இனம் அந்த இடத்தினை ஆக்கிரமித்து அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்திருப்பார்கள்.

நீலாவணை கிராமத்தில் உள்ள தமிழர்களது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதாவது தமிழர்களது நிலங்களை ஆக்கிரமித்து அதில் தாங்கள் வீடுகளை அமைத்து தங்களது இடமாக மாற்றுவதற்குரிய ஆயத்தங்களை மாற்று சகோதாரர்கள் கையாண்டு வருகின்றார்கள்.

மனிதன் இறந்து கடைசி இடமாக போகும் இடம் மயானம் அந்த இடத்தினைக்கூட விட்டு வைக்காமல் அதனுடன், சேர்ந்த எமது நிலங்களையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றார்கள்.

இதனை நாங்கள் ஒவ்வொருவரும் சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும். நான் இங்கு இனவாதம் பேசவில்லை நான் எனது உரிமையைப் பற்றித்தான் பேசுகின்றேன்.

நமது நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டுவரும் தமிழர்கள் அருகிப் போகக்கூடாது. இன்னும் பத்து இருவது வருடங்களுக்கு பின்பு இந்த மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்களா என்ற கேள்வி எப்பொழுதும் வரக்கூடாது.

அதற்காகவேண்டி இந்த இடத்திலே உங்களுக்கு மாத்திரமல்ல, புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்.

தயவு செய்து நீங்கள் தமிழர்கள் வாழ்கின்ற பூர்வீகங்களை பாதுகாருங்கள், நிலங்களையும், கலை, கலாச்சாரங்களையும் பாதுகாருங்கள்.

அதனை பாதுகாப்பதற்கான புதிய திட்டங்களை வகுத்து இங்குள்ள மக்களோடும் கலந்தாலோசித்து அதனை செயற்படுத்துங்கள் அதனை விடுத்து அங்கே இருந்து அம்பாறை மாவட்டத்தினை எண்ணிப் பார்க்காமல் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிடக்கூடாது.

நீங்கள் உண்மையான தியாகிகளாக, உண்மையான நபர்களாக, தமிழர்களிடத்தே ஒரு தேசப்பற்றுள்ளவர்களாக இருப்பீர்களானால் அம்பாறை மாவட்டத்திற்கு நீங்கள் அளிக்கின்ற உதவி அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: