இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை வடக்கு மாகாண சபை கடந்த ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து சமஷ்டி என்ற சொல் நாட்டின் பல்வேறு மட்டங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
வட மாகாண சபையின் இத்தீர்மானம் தொடர்பில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தம் நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளன. ஆனால் அந்நிலைப்பாடுகள் எதுவும் இத்தீர்மானத்திற்கு சாதகமானதாக இல்லை.
ஆனால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மஹிந்த ஆதரவாளர்களும், தென்பகுதி இனவாதிகளும் கொதித்தெழுந்ததோடு நாட்டைப் பிரிக்கும் யோசனையை வட மாகாண சபை நிறைவேற்றியுள்ளது என்றும், அதற்கு தாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அறிக்கைகளும் வெளியிட்டனர்.
இருப்பினும் சமஷ்டி யோசனையை முன்வைக்கும் தமிழ்த் தலைவர்களும், தமிழ்ப் பிரதிநிதிகளும் அது தொடர்பாகப் பெரும்பான்மை மக்கள் மத்தியில், குறிப்பாகத் தென்பகுதி மக்கள் மத்தியில் தெளிவை ஏற்படுத்தவோ புரிந்துணர்வை உருவாக்கவோ நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை.
அதனை அவர்கள் ஒரு பொருட்டாகக் கூடக் கருதுவதாக இல்லை.இது இனவாதிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி சமஷ்டி என்பது மிகப் பயங்கர பூதம் என்ற மாயையை தென்பகுதி மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.
சமஷ்டி தொடர்பாக இனவாதிகளின் அபிப்பிராயங்கள் மாத்திரம் தான் தென் பகுதி மக்களைச் சென்றடைந்தது. அதனால் தான் சமஷ்டி என்பது மிகப் பயங்கரமானது, அது நாட்டுக்கே பேராபத்தானது என்ற அச்ச மனப்பான்மை தென்பகுதி மக்கள் மத்தியில் உருவானது. அதுவே இன்று வரையும் நீடிக்கின்றது.
ஆனால் சமஷ்டி என்றால் என்ன? இச்சொல் ஏன் இந்நாட்டில் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றது? அதற்கான காரணம் என்ன? அதன் பின்புலம் என்ன? என்பன குறித்து எவரும் இன்றும் ஏறெடுத்துப் பார்க்கவும் தயாராக இல்லை.
சமஷ்டி என்றதும் தூரே விலகிச் செல்லும் நிலைமையே நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலைமைக்கான காரணகர்த்தாக்கள் சில அரசியல்வாதிகளும் இனவாதிகளுமேயாவர்.
இவ்வாறான சூழலில் தான் இவ்வருட மே தினப் பொதுக் கூட்டத்தை சுதந்திரக் கட்சி தென் பகுதியின் முக்கிய நகர்களில் ஒன்றாக விளங்கும் காலி நகரிலுள்ள சமனல மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஞாயிறன்று நடாத்தியது.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவம் மிக்க அபிப்பிராயமொன்றை முன்வைத்தார்.
அந்த உரையின் போது ஜனாதிபதி ‘1950 களிலும் 1960 களிலும் சமஷ்டி வேண்டுமென்ற குரல் வடக்கில் ஒலித்தது. அதனைத் தொடரந்து 26 வருடங்கள் நாம் கொடூரமான யுத்தத்திற்கு முகம் கொடுத்தோம். சமஷ்டி தேவை என்ற குரல் ஏன் ஒலித்தது? நாம் ஏன் 26 வருடங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்தோம் என்பன குறித்து சிந்திக்க வேண்டும். ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
இது பெரிதும் வரவேற்கத்தக்கதும், முன்னேற்றகரமானதுமான அழைப்பாகும். இதில் இரு கருத்திற்கு இடமிருக்க முடியாது. சமஷ்டி என்பதை மிகப் பயங்கரமானதாகப் பார்க்கும் மன நிலை உருவாக்கப்பட்டிருக்கும் இந்நாட்டில், ஜனாதிபதியின் இவ்வழைப்பு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நாட்டில் வாழும் எல்லா இன மத மக்களதும் விருப்பத்துடனும் ஆதரவுடனும் ஜனாதிபதியாகத் தெரிவானவராவார். அவர் இந்நாட்டு அரசியலில் பல தசாப்தங்கள் நேரடி அனுபவம் பெற்றவரும் கூட. அதன் பயனாக இந்நாட்டில் வாழும் எல்லா மக்களதும் உணர்வுகளையும், தேவைகளையும் அவர் நன்கறிந்தவராவார். அதனால் தான் அவர் இந்த யதார்த்தபூர்வ அழைப்பை விடுத்து இருக்கின்றார்.
ஆகவே இந்த சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வு காணப்பட வேண்டும். அத்தீர்வு இந்நாட்டில் வாழும் எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.
ஒன்றுபட்ட இலங்கைகக்குள்ளேயே இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். அதுவே நாட்டின் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதனால் இணக்கப்பாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் தீர்வு முயற்சிகளுக்கு இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒத்துழைப்பு நல்குவது அனைவரதும் பொறுப்பாகும்.
அப்போதுதான் இந்நாட்டில் வாழும் சகல இன மத மக்களும் எல்லாவித வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சகோதரர்களாகவும் சகவாழ்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழல் உருவாகும்.
அது நாட்டைச் சுபிட்சத்தையும் விமோசனத்தையும் நோக்கி இட்டுச் செல்லும்.
அதனூடாக நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியும் நிலையான அபிவிருத்தியும் ஏற்படும்.
அதன் மூலம் மக்களின் வாழ்வே வளம் பெறும்.
-http://www.tamilwin.com