முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கடந்த ஆண்டு ஜனவரி 8ம் மற்றும் ஆகஸ்ட் 17ம் திகதிகளுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், அவரை கொலை செய்வதற்கான தேவைகள் எதுவும் புலம்பெயர் அமைப்புகளுக்கு கிடையாது என சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்பேது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராவார். எனவே அவரை கொலை செய்ய வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் புலம்பெயர் அமைப்பினருக்கு கிடையாது.
சர்வதேசத்திற்கு அச்சுறுத்தலான ஐ.எஸ் மற்றும் அல் கொய்தா போன்ற அமைப்புகள் கூட முன்னாள் ஜனாதிபதி அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்கரகளை கொலை செய்வதற்கு கால, நேரத்தினை வீணடிப்பது கிடையாது.
இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பை நினைத்து கவலையடைவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எனினும், தனது பாதுகாப்பை நினைத்து கவலையடைவாரெனின் விடுதலை புலிகளுடனான யுத்தத்தை முழுமையாக முடிக்கவில்லை என்றே அர்த்தமாகும்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் கூச்சல் போடுபவர்கள் சிறைச்சாலைக்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பல்வேறான வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்ற முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.