விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கைது மற்றும் கடந்தகாலத்தில் இடம்பெற்ற இரகசிய இராணுவ செயற்பாடுகள், குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகள் காரணமாக, சிறிலங்கா இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சத்ஹண்ட சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் பழைய தற்கொலை அங்கி் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மேற்கொள்ளும் விசாரணையில் சிறிலங்கா இராணுவம் தலையீடு செய்து வருகிறது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்குப் புறம்பாகச் செயற்படுவதும், வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் எந்த கூட்டிணைப்பும் இன்றி சிறிலங்கா காவல்துறை செயற்படுவதும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று, உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்கொலை தாக்குதல் அங்கி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக, காவல்துறை கண்காணிப்பாளர் நாலக சில்வா தலைமையிலான தீவிரவாத விசாரணைப் பிரிவு, வடக்கு, கிழக்கில் 12 முன்னாள் விடுதலைப் புலிகளைக் கைது செய்துள்ளது.
அவர்களில், ராம், நகுலன், பிரபா, கலையரசன் ஆகியோரும் அடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் ஒத்துழைத்து வந்தவர்களாவர்.
போரின் முடிவில், 150 விடுதலைப் புலிகளின் புலனாய்வுச் செயற்பாட்டாளர்கள் சரணடைந்தனர். அவர்களில் 15 பேர் தெரிவு செய்யப்பட்டு, 2013ஆம் ஆண்டு வரை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஊதியத்துக்குப பணியாற்றுபவர்களாக கொண்டு வரப்பட்டனர்.
இவர்களுக்கு மேலதிகமாக, இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான சொத்துக்கள், வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
எனினும், இவர்களிடம் இருந்து எத்தகைய சேவைகளை சிறிலங்கா இராணுவம் பெற்றுக் கொண்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அரசியல் படுகொலைகள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை, சிறிலங்கா காவல்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 200 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், சிறிலங்கா இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் இடையில், மோதல்களை ஏற்படுத்தும் என்பதால், இந்த விசாரணைகள் முன்னகர்த்தப்படாத நிலையில் அல்லது, கைவிடப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
தம்முடன் இணைந்து செயற்படும், விடுதலைப் புலிகளின் உளவாளிகளை வைத்து, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு, கொடிய விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக, தீவிரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கருதுகின்றனர்.
அத்துடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான, அதிகாரிகளாலேயே, இராணுவப் புலனாய்வுப் பிரிவு இன்னமும் செயற்படுத்தப்படுவதாகவும், இதனைத் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது என்றும், அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இது இன்னொரு மிலேனியம் சிற்றி காட்டிக்கொடுப்பாக அமையக் கூடும் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தநிலையில் வடக்கில் காவல்துறையின் நடவடிக்கைகள், எதிர்மறையான அனைத்துலக விளைவுகளை ஏற்படுத்தும் என்று, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்துவது, தீவிரவாதம் தொடர்பாக ராஜபக்சவும், அவரது ஆதரவாளர்களும், வதந்திகளைப் பரப்புவது,குறித்து இராஜதந்திரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனினும், சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும், விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் அல்லது வேறெந்த வழியிலான ஆயுதப் போராட்டமும், மீண்டும் முளைகொள்வதற்கு இடமளிக்கமாட்டோம் என்பதில், உறுதியை வெளிப்படுத்தியுள்ளன” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!