புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்ட புலிகளின் முன்னாள் கிழக்கு தலைவர்களை கைது செய்துள்ளது பயங்கரவாத விசாரணைப் பிரிவு.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கடந்த வாரங்களில் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் 20க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம், வவுனியா, பூசா மற்றும் கொழும்பில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள். இவர்கள் சில காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு பயிற்சிகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களில் சிலர் புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படாதவர்கள். இவர்கள் படையினரிடம் சரணடையவில்லை எனக் கூறப்படுகிறது.
12 ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பயிற்சிகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் புனர்வாழ்வு பயிற்சிகளை பெறாது இலங்கைக்குள் 4 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் பெருந்தொகையான முன்னாள் புலி உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் இவர்களில் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்றவர்களும் புனர்வாழ்வு பயிற்சிகளை பெறாதவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
பயங்கவாத தடுப்பு பிரிவினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் புலிகளின் முன்னாள் சிரேஷ்ட தலைவர்கள் நான்கு பேர் அடங்குகின்றனர்.
2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர், இவர்கள் கிழக்கில் புலிகள் அமைப்பில் முக்கிய பதவிகளை வகித்து வந்தனர்.
கேர்ணல் ராம் என்ற எதிர்மன்னசிங்கம் ஹரிச்சந்திரன், லெப்டினட் கேர்ணல் நகுலன் என்ற கணேசப்பிள்ளை சிவமூர்த்தி, லெப்டினட் கேர்ணல் கலையரசன் என்ற கணேசப்பிள்ளை அறிவழகன், லெப்டினட் கேர்ணல் பிரபா என்ற கிருஷ்ணப்பிள்ளை கலைநேசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மூன்று கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.
ராம் என்ற ஹரிச்சந்திரன் அம்பாறையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கேர்ணல் ராம் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான தளபதியாக செயற்பட்டு வந்தவர்.
ராம் 1984 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதுடன் வடக்கு பெரு நிலப்பரப்பின் வன்னியில் நடந்த போரில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை இழந்துள்ளார்.
போருக்கு பின்னர், மீண்டும் திருமணம் செய்து கொண்ட ராம், தம்பிலுவில் பகுதியில் நெற் பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்தார்.
ஹரிச்சந்திரன், வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அம்பாறை மாவட்டம் திருகோவில் பிரதேசத்தில் நீல நிற ஜீப்பில் வந்த இனந்தெரியாதவர்கள் அவரை கடத்திச் சென்றனர்.
ராம் கடத்திச் செல்லப்பட்டதாக மனைவி முறைப்பாடு செய்ததை அடுத்து, தாமே அவரை கைது செய்ததாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
புலிகளின் மற்றுமொரு முன்னாள் சிரேஷ்ட தலைவரான லெப்டினட் கேர்ணல் கலையரசன் என்ற கணேசப்பிள்ளை அறிவழகன் கடந்த மாதம் 25 ஆம் திகதி திருகோணமலையில் கைது செய்யப்பட்டார்.
கலையரசன் போர் முடியும் வரை புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்து வந்தார்.
திருகோணமலை கிண்ணியா ஆலங்கேணியை சொந்த இடமாக கொண்ட கலையரசன் திருமணத்திற்கு பின்னர், திருகோணமலை நகர பகுதியில் வசித்து வந்தார். போருக்கு பின்னர் இவர் பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வந்தார்.
முன்னதாக திருகோணமலை செனல் வீதியில் உள்ள கலையரசனின் வீட்டுக்கு இரவு நேரத்தில் சிவில் உடையில் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வீட்டில் கலையரசனை தேடியுள்ளனர்.
புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் அச்சம் காரணமாக தப்பியோடியுள்ளார்.
இரவு முழுவதும் வேறு இடம் ஒன்றில் மறைந்து இருந்த கலையரசன் தனது மனைவி சித்தாராவுடன் அதிகாலை மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்திற்கு சென்று பாதுகாப்பு பெற முயற்சித்துள்ளார்.
ஆணைக்குழுவுக்கு வெளியில் இருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், கலையரசரனை கைது செய்துள்ளனர். 5 நாட்களில் கணவனை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சித்தாரவிடம் கூறியுள்ளனர். கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
லெப்டினட் கேர்ணல் நகுலன் என்ற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி கடந்த மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு இணைந்து கொண்ட இவர், சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியாக செயற்பட்டு வந்தார்.
அத்துடன் கேர்ணல் ராம் தலைமையின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதித் இராணுவ தளபதியாகவும் நகுலன் செயற்பட்டுள்ளார்.
கிழக்கில் பல ஆண்டுகள் செயற்பட்டு வந்தாலும் நகுலனின் சொந்த இடம் யாழ்ப்பாணம் நீரி்வேலி பகுதியாகும்.
போருக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட நகுலன் வாழைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு, வாழைப்பழங்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஆசிரியர் பயிற்சிகளை முடித்து கொண்ட நகுலனின் மனைவி பரந்தனில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நீர்வேலியில் உள்ள நகுலனின் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், விசாரணைகளுக்காக தம்முடன் தனியாக வருமாறு கூறி அழைத்துச் சென்றுள்ளனர். நகுலனின் தந்தையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருடன் சென்றுள்ளார்.
யாழ் நகருக்கு சென்ற பின்னர், நகுலனை சில மணிநேரங்களில் அனுப்பி வைப்பதாக கூறி பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவரது தந்தையை திருப்பி அனுப்பியுள்ளனர். எனினும் நகுலன் இதுவரை தடுத்தே வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை லெப்டினட் கேர்ணல் பிரபா என்ற கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் 2009 ஆம் ஆண்டு போர் முடியும் வரை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கான புலிகளின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார்.
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட கலைநேசன், நாவற்குடா பிரதேசத்தை சேர்ந்த கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்து, அங்கு வசித்து வந்துள்ளார்.
பனை ஓலை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த கலைநேசனும் அவரது மனைவியும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தொழிற்நுட்ப கல்லூரியின் சிற்றுண்டி சாலையையும் நடத்தி வந்தனர்.
நவற்குடாவில் உள்ள கலைநேசனின் வீட்டுக்கு கடந்த 2 ஆம் திகதி அதிகாலை சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அவரை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கலைநேசனை கல்முனையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரபாவின் மனைவி கயல்விழியிடம் கூறியுள்ளனர். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பின்னர், கணவரை விடுதலை செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும் கலைநேசன் பின்னர், கொழும்பில் உள்ள பங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டம் தென்மராட்சி மறவன்புலவு பிள்ளையார் வீதியில் உள்ள வீட்டில் கடந்த மார்ச் 29 ஆம் திகதி சிறிய ஆயுத களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலை அங்கி, நான்கு கிளைமோர் குண்டுகள், மூன்று பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 12 கிலோ கிராம் டி.என்.டி. வெடி மருந்து, இரண்டு மின் கல பொதிகள், 9 மில்லி மீற்றர் தோட்டாக்கள் என்பன குறித்து வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.
வீட்டின் உரிமையாளரான ரமேஷ் என அழைக்கப்படும் எட்வட் ஜூலியன் என்பவர் மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்தில் இருந்து வெடிப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
மன்னார் முருங்கன் பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட 32 வயதான எட்வர்ட் ஜூலியன் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார். போருக்கு பின்னர் இவர் சரணடையவோ, புனர்வாழ்வு பயிற்சிகளையோ பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
ட்ரக் வண்டி சாரதியான இவர், மீனை எடுத்துச் சென்று விற்பனை செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன்குளம் மற்றும் ஜெயபுரம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து சோதனை சாவடியில் வைத்து ரமேஷ் என்ற எட்வர்ட் ஜூலியன் கடந்த மார்ச் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இவரை கொழும்பு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், விசாரணைகளை தொடர்ந்தே ஏனையவர்களை கைது செய்தனர். எட்வர்ட் ஜூலியனின் தொலைபேசி தொடர்புகளை வைத்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவரது நண்பர்கள் பலரை குறி வைத்துள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்கள். இவர்களில் சிலர் புனர்வாழ்வு பயிற்சிகளை பெறாதவர்கள். ஏனையோர் புனர்வாழ்வு பயிற்சிகளின் பின்னர் சமூகத்தில் சாதாணரமாக வாழ்ந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் புலிகளின் நிதியுதவியுடன் இலங்கையில் புலிகள் அமைப்புக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்தே பாதுகாப்பு தரப்பினர் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
எனினும் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் சிரேஷ்ட தலைவர்களான ராம், நகுலன், பிரபா, கலையரசன் ஆகியோர் போருக்கு பின்னர் இலங்கை அரச புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கைதுகள் அனைத்தும் சிவில் உடையில் வந்த அதிகாரிகளினால் வாகனங்களில் வந்து மேற்கொள்ளப்பட்ட கைதுகள் என்பதால், மக்கள் மத்தியில் ராஜபக்ச காலத்தில் இருந்த வெள்ளை வான் கடத்தல் கலாசாரம் நல்லாட்சி அரசாங்கத்திலும் முன்னெடுக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com