யாழில் அடக்கப்படுவது வாள்வெட்டுக் குழுக்களையா? பொதுமக்களின் நடமாடும் சுதந்திரமா?

jaff1யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலங்களாக வாள்வெட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றன. இவை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊடகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன.

இவை தொடர்பில் பத்திரிகைகளிலும், இணையங்களிலும், சமூக வலைத்தளங்களும் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்கள் எழுதப்பட்டு வருகின்றன.

உண்மையில் 2009 ஆண்டு தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இப்படியான சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்து அண்மைக் காலத்தில் சடுதியாக அதிகரித்து மாபெரும் சமூக அவலமாக மாறியுள்ளது.

இதில் மூன்று முக்கிய விடயங்களை நாம் ஆராய வேண்டும்.

முதலாவது, இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதனை நாம் முதலில் தெளிவாக ஆராய வேண்டும்.

இரண்டாவது, இவற்றைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடர்பில் புத்திஜீவிகள் ஒன்று கூடி விஞ்ஞான ரீதியிலான பொறிமுறையினை உருவாக்க வேண்டும்.

மூன்றாவது, ஒரு மாணவன் 13 வருடங்கள் பாடசாலையில் கற்று ரவுடியாக வெளிவருகிறான் என்றால், எமது கல்வி முறையை மீண்டுமொருமுறை முதலில் இருந்து மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

அத்துடன் சிறிய வயதில் இருந்து தாய், தந்தையரின் அன்பான வழிகாட்டல்கள், சிறந்த ஆசான்களின் போதனைகள், அறநெறி வகுப்புக்களைப் போதிப்பதன் ஊடாக சமூகத்துக்கு பயன்படக் கூடிய விதத்தில் அவர்களை உருவாக்க வேண்டும்.

அப்படியாக நல்வழிகளைப் போதித்து இளம் தலைமுறையினரை வளர்ப்பதன் ஊடாகவே இப்படியான சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். யாழில் குற்றச்செயல்களில் மாணவர்களே அதிகளவில் ஈடுபடுகின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு பின்னால் நின்று சிலர் வழிநடத்துவதும் தெரியவந்துள்ளது.

இதன் உண்மை நிலையை ஆராய்ந்தால் போருக்கு பின்னர் ரவுடித் தனத்தில் ஈடுபட்ட ஆவாக் குழுவினருக்கும் இராணுவ உயர்மட்டங்களுக்கும் உள்ள தொடர்புகள் பல்வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தன. அதன் தொடர்ச்சியாக அண்மைக்கால சம்பவங்களுக்கும் சில பொலிஸ் அதிகாரிகள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் கூட தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

வாள்வெட்டின் பின்னே உள்ள நுண் அரசியலை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தை ஒரு பதற்ற நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை தென்னிலங்கையின் இனவாத சக்திகளுக்கு இருக்கின்றது. அவர்களின் வலையில் யாழில் உள்ள சில மாணவர்களும், இளைஞர்களும் விழுந்து விட்டார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

யுத்தகாலத்தைப் போன்று யாழ்ப்பாணத்தை ஒரு வித ஊரடங்கு நிலையில் நிலையில் வைத்திருக்கவே இந்த சக்திகள் விரும்புகின்றன. அதற்காக இப்படியான செயல்களை அரங்கேறச் செய்து மக்களின் வாயாலேயே இந்த வாள்வெட்டுக் குழுக்களில் இருந்து பாதுகாப்பு வேண்டும் என சொல்லும் நிலையினை ஏற்படுத்தி உள்ளார்கள்.

யாழில் வாள்வெட்டுக்களில் ஈடுபடும் 2 வீத இளைஞர்களுக்காக இரவு 7 மணிக்கு பிறகு யாரும் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றார்கள். இதனால், அண்மையில் இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருக்கும் தனது மனைவிக்கு உணவு வழங்கி விட்டு வீடு திரும்பிய கணவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விடியும் வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

இதன் மூலம் பொது இடத்தில் ஒன்றுகூடும் இலங்கையின் ஜனநாயக உரிமை தடுக்கப்படுகின்றது.

நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் வாள்வெட்டு பற்றித் தான் கதைப்பார்கள் என்பது என்ன ஒரு அபத்தமான செய்தி.

இரவு 6 மணி தொடக்கம் 10 மணிவரையான நேரத்தில் தான் இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் கூடி பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளை கதைப்பார்கள். அதிலிருந்து பல உண்மைகளை தெரிந்து கொள்வார்கள்.

பகல் முழுவதும் வேலை செய்து விட்டு மாலைப் பொழுதுகளில் மரத்தடியிலும், கோவில் வீதியிலும் இடம்பெறும் அரசியல், சமூக சம்பாசனைகள் தான் படிப்படியாக மக்களின் சமூக, அரசியல் விழிப்புணர்வில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும்.

குறித்த அடக்குமுறையின் காரணமாக தமிழர்களின் சிந்தனை விருத்தி, ஒரு கருத்தை வைத்து கலந்துரையாடும் திறன் இங்கு மழுங்கடிக்கப்படுகின்றது. பொதுவாக மரத்தடியில் மாலை வேளைகளில் சம்பாசனை செய்யும் இளைஞர்கள், முதியவர்களுக்கு தெரியும் அரசியல், அரசியல் படித்தவர்களுக்கு கூட தெரியாது என்பார்கள்.

பெரும்பாலும் மாலை வேளை சம்பாசனையில் இடம்பெறுவோரில் எல்லா விதமானோரும் பங்கு கொள்வார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என பலரும் இருப்பார்கள். எனவே இத்தகைய கலந்துரையாடல்கள், சம்பாசனைகள் ஊடாக புதிய சமூக அரசியல் கருத்து எழுச்சி பெறும்.

அப்படியான அறிவுபூர்வமான கலந்துரையாடல்கள், சம்பாசனைகள் உருவாவதன் ஊடாக இளைஞர்கள் மத்தியில் உருவாகும் விழிப்புணர்வைத் தடுக்கும் நோக்கில் தான் இப்படியான சமூக விரோதச் செயல்கள் யாழில் இடம்பெறுகின்றன.

சில இனவாத, இராணுவ சக்திகள் வேணும் என்றே இளைஞர்களைத் தூண்டி விட்டு, குற்றச் செயல்களை இளைஞர்கள் மத்தியில் விதைத்து விட்டு அதனை சட்டத்தின் பிரகாரம் ஒடுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்களோ என பொதுமக்களை சந்தேகம் கொள்ள வைக்கின்றது.போர்க் காலங்களில் தமிழ் மக்களை போரால் ஒடுக்கினார்கள்.

இரவு வேளைகளில் வெள்ளை வான் கடத்தல்கள், பயங்கரவாதச் சட்டம், ஊரடங்குச் சட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி அதன்மூலம் ஒடுக்கினார்கள். தற்பொழுது இளைஞர்களை தூண்டி விட்டு அதில் குளிர் காய்கின்றனர்.யாழில் ரவுடித்தனம் புரியும் முக்கால்வாசி இளைஞர்களை உள்ளே போட்டாச்சு என்று குதூகலிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறு குற்றங்கள் புரிந்து உள்ளே செல்பவர்களை யாழ் சிறைச்சாலை பெரிய பெரிய குற்றங்கள் புரியும் ஒருவனாக மாற்றிவிடும் சூழல் இருக்கின்றது.

சிறைக்குச் சென்று வந்த ஒருவரை அண்மையில் சந்தித்தபோது அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி ரகமாக இருந்தது.

 எந்தவகையான போதைப்பொருளும் சிறையில் தடங்கலின்றி வாங்கலாம்.

பீடிக் கட்டு சிறைச் சிற்றுண்டிச் சாலையில் விற்கப்படுகிறது.

யாழின் சில ஊர்களில் பிரபலமாக இருந்த ரவுடிகளின் அறிமுகம் உள்ளே கிடைக்கின்றது.

வாள்வெட்டில் உள்ளே சென்ற மாணவனும், கஞ்சா கேசில் சென்றவரும் ஒரே சிறைக்கூடத்தில் அடைக்கப்படுவதால் தான் தண்டனை அனுபவித்து வெளியே வரும் மாணவன் மிகப்பெரிய ரவுடியாகி வெளியே வருகின்றார்.

முதலில் சிறைச்சாலையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தவேண்டும்.

வாள்வெட்டு கேசில் பிடிபடுபவர்களுக்கு முறையான, கட்டமைக்கப்பட்ட புனர்வாழ்வு தான் உரிய பலனைத் தரும். சிறைக்குள் தள்ளுவதால் அவர்களின் முழு எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது.

இதனைத் தடுக்க நேர்மையான முறையில் பொலிஸ், நீதித்துறை, புத்திஜீவிகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

ஒரு சில இளைஞர்கள் செய்யும் ஈனத்தனமான செயலால், பொதுமக்களின் மிகப்பெரிய உரிமையான நடமாடும் சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.

-http://www.tamilwin.com

TAGS: