நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் வரையிலும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் குசல் பெரேராவின் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிட்டு விழா இன்று கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பல்லின மக்கள் வாழும் பொதுவான நாடாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதிகளவான விதவைப் பெண்களை கொண்ட வடக்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை நிலைநிறுத்தி காணிகளை அபகரிக்கும் செயற்பாடு ஒரு போதும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை காண்பதற்கான சூழலை ஏற்படுத்தாது.
இந்நிலையில், இராணுவத்தினர் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொண்டிருக்கும் பட்சத்தில் மீண்டும் வடக்கில் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படக்கூடும்.
எவ்வாறாயினும், அரச பயங்கரவாதத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவாகியதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் வடக்கிலுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டிருந்தால் இன்று நல்லிணக்க செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.
எனினும், இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமாக இருந்தால் வடக்கில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்கமுடியாது.
இராணுவ ஆட்சிக்குட்பட்டு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் நல்லிணக்கத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com