வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா? பதில் கொடுங்கள் தமிழ் மக்களே!

ltteஎப்போது தீரும் இந்த அவலம் என்று யோசிக்கும் அளவிற்கு இன்று முன்னாள் போராளிகளின் நிலை மிகப்பெரும் இடர்களுக்குள் அகப்பட்டிருக்கின்றது.

போராளிகள் எதிர்நோக்கும் இடர்கள் பேரவலம் தான். இன ஒடுக்முறைக்குள் உள்ளாகியிருந்த ஒரு இனத்தின் மீட்பர்களாக உருவெடுத்தவர்கள், இன்று அவலம் நிறைந்த வாழ்வு வாழ்வது வேதனையானது தான்.

ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை தாங்க முடியாதவர்கள் எதிர்கால வாழ்வைத்தொலைத்து, ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டவர்கள் இவர்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வெளிப்படையான கருத்துப்படி “ நாங்கள் ஆயுதத்தின் மீது காதலோ மோகமோ கொண்டவர்கள் அல்ல. நாங்கள் ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டுள்ளோம். வலிந்து எம்மீது வன்முறைகளும், அடக்குமுறைகளும் திணிக்கப்பட்டதாலேயே ஆயுதம் தரித்தோம். இது சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. உரிமைக்கான உரிமைப் போர்” என்றார்.

ஆயுதத்தின் மீது காதல் கொண்டோ அன்றி, வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த இளைஞர் யுவதிகளை அழைத்து மூளைச்சலவை செய்தோ அவர்களை ஆயுதம் ஏந்த வைக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களாகவே இணைந்து களமாடத் துணிந்தவர்கள்.

விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட போராளிகள் எத்தனை ஆயிரம் பட்டதாரிகள், புத்திஜீவிகள் இணைந்து கொண்டார்கள். மருத்துவத்துறையினைச் சேர்ந்த பலர் இணைந்து களமாடியிருந்தார்கள்.

ஆனால் 2009ம் உலக வல்லாதிக்க சக்திகளின் துணையோடு நடந்த கொடிய யுத்தத்திற்குப் பின்னர் போராளிகளின் வாழ்வு மரண வேதனையிலும் கொடுமையாகவே மாறியிருக்கின்றது.

போராளிகளின் சிக்கல்கள் பல உண்டு என்றாலும், அவர்கள் முக்கியமாக எதிர்கொள்ளும் பிரச்சினை யுத்தத்தின் எச்சங்களாகவே இருக்க முடியும்.

யுத்தகாலத்தில் இலங்கை இராணுவத்தினரால் வீசப்பட்ட வெடிகுண்டுகளின் சன்னங்கள் அவர்களின் உடம்பில் இப்பொழுது வரை நின்று வேதனையை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

நேற்றைய தினம் பரந்தன் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சுரேந்திரன் விக்னேஸ்வரன் என்னும் முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 14 வருடங்களாக இருந்தார் என்றும் யுத்தத்தின் போது செல் வீச்சுக்கு இலக்காகி செல் பீஸ் தலைக்குள் இருந்ததாகவும் அதனால் தலை வலியால் அவதிப்பட்டு வந்த இவர், அடிக்கடி தலையை சுவரில் இடித்துக்கொள்வார் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 06ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாக, கீழே வீழ்ந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன் கிழமை உயிரிழந்துள்ளார்.

இது தெரிந்து நடக்கும் வேதனையான சம்பவங்களில் ஒன்று மட்டுமே. ஆனால் இன்னமும் எத்தனையாயிரம் முன்னாள் போராளிகள் அனுபவிக்கும் வேதனைகளை எழுத்தில் வடிக்க எம்மிடம் வார்த்தைகள் இல்லை.

யுத்தம் முடிந்து 7ஆண்டுகளை கடக்க இருக்கின்றோம். ஆனால் அந்த யுத்தத்தில் தம் இனத்திற்காக போராடியவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை அறிந்து சிறு உதவி கூட நாம் செய்ய எத்தனிப்புச் செய்வது இல்லை என்பது தான் காலக் காடுமை.

தாயகத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளுக்காக ஆவேசம் கொள்ளும் நாம், போராடிய, வீரர்களின் நிஜ வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

முன்னாள் போராளிகள் என்னும் பெயர் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அங்கே மடியவில்லையே தவிர, போராடாமல் இருக்கவில்லை. போராட்டத்தின் உச்சத்திற்கு சென்றவர்கள் இவர்கள். ஏனைய இனத்திற்கு முன்மாதிரியாகச் செயற்பட்டவர்கள் தான் இந்த மறவர்கள்.

அப்படியிருக்கையில், நாம் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்தழித்துவிட்டார்கள். எங்கள் வீரர்களை நினைவு கூரமுடியவில்லை என்று கதறுவதிலும், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதிலும் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது.

அதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் பற்றி கதைக்கவோ, குரல் கொடுக்கவோ வேண்டாம் என்று நாம் இங்கே மறுக்கவில்லை.

வாழ்க்கையையே வாழமுடியாமல் நிஜத்தில் இருக்கும் வீரர்களை கவனிக்காத நாம், வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு விளக்கேற்றுவோம் எனில், எமது முடிவு இவர்களும் களத்தில் மடிந்திருக்க வேண்டும் ஏன் தான் தப்பித்து வந்தார்கள்? என்று கூறுவதற்கு ஒப்பானது அல்லவா?

மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும், மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலிக்க வேண்டும் என நினைத்து ஆதங்கம் கொள்ளும் ஒவ்வொருவரும், முன்னாள் போராளிகளின் வாழ்க்கை மீளக்கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதில் அக்கறை காட்ட வேண்டும்.

இலங்கை இராணுவ வீரர்கள் களத்தில் அங்கவீனர்களான பின்னர் அவர்களுக்காக அரசாங்கம் எவ்வளவோ மனிதாபிமான செயற்றிட்டங்களை ஏற்பாடு செய்து அவர்களின் மறுவாழ்விற்கு உறுதுணையாக இருக்கின்றது.

அப்படியிருக்கையில், ஈழத்தமிழர்கள் தங்கள் இயக்க விடுதலை வீரர்களின் மறுவாழ்விற்காக இதுவரை என்னென்ன செய்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுவதும் நியாயமானதே.

இவ்விடயத்தில் தமிழ் புத்திஜீவிகள் சற்று கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமான சூழல் எழுந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வாழ்க்கையை வாழ அவர்களுக்கு ஏராளம் உதவிகள் தேவைப்படுகின்றன.

இதற்கு புலத்திலும் சரி களத்திலும் சரி, அரசியல் மட்டத்திலும் சரி அதிக சிரத்தை எடுக்கப்பட வேண்டும். இதற்காக ஒன்றுபட்ட செயற்பாடுகள் அவசியம்.

செய்வது நமது கடமை. அதைவிடுத்து தேவைற்ற கருத்துப்பரிமாற்றங்களை பேசி காலத்தை வீணடிக்காதீர்கள். இவர்களையும் சற்று திரும்பிப்பாருங்கள்!…

-http://www.tamilwin.com

TAGS: