தீர்வினை வழங்கினால் அரசை எதிர்க்கமாட்டோம் – சிறிநேசன் எம்.பி

samashdiஎங்களுடைய இனப்பிரச்சினை என்கின்ற விடயம், முறையான அதிகாரப்பகிர்வு மூலமாக சமஷ்டி முறை மூலம் தீர்க்கப்படுகின்ற போது, நாம் மத்திய அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் எமது மக்களின் தேவைகளை நாங்களே கட்டியெழுப்பக்கூடிய ஒரு நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான வீதிகளை திருத்தும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீதிப் போக்குவரத்து நெஞ்சாலைகள் துறை அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அதற்கான ஐம்பது இலட்சம் ரூபாவினை அமைச்சர் ஒதுக்கீடுசெய்துள்ளார்.

இதன்கீழ் மட்டக்களப்பு நகரில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் கூழாவடி பிரதான வீதியை செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ்.சசிநந்தன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள், தொழில் நுட்பட உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

“தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி என்ற அடிப்படையில் ஆட்சி நிறுவப்பட்டிருப்பதன் ஒரு அம்சமாக கடந்த காலங்களில் ஆளும் கட்சியோடு சார்ந்து தான் சகல விதமான அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தற்போது ஒரு மாற்றமான சூழலில் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களின் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சுக்கூடாக 10 கிலோமீற்றரை அபிவிருத்தி செய்வதற்கு 6 கோடி ரூபா எனும் செயல்திட்டத்தினை எதிர்க்கட்சிகளுக்கும் வழங்கியிருக்கின்றது.

அத்துடன் குன்றும் குழியுமாக இருக்கும் பாதைகளை செப்பனிடுவதற்கு மேலதிகமாக 50 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்கின்றது. இது உண்மையில் ஒரு மாற்றமாகும்.

கடந்த காலத்தில் ஒட்டுமொத்தமான அபிவிருத்திப் பணிகளையும் ஆளும் கட்சியே செய்கின்ற நிலை காணப்பட்டது. தற்போதைய நிலையில் அமைச்சர் மேற்கொண்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

ஏனைய அமைச்சுக்களிலும் இப்படியான மாற்றம் ஏற்பட வேண்டும். இன்றும்கூட ஆளும்கட்சி சார்ந்தவர்களுக்குத் தான் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகள் அமைச்சரின் இந்த முன்மாதிரி நடவடிக்கையை ஏனைய அமைச்சுகளும் பின்பற்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமிழந்து எந்தவித தொழில் வாய்ப்புகளும் இல்லாதிருக்கின்ற மக்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

எங்களுடைய இனப்பிரச்சினை என்கின்ற விடயம் முறையான அதிகாரப்பகிர்வு மூலமாக சமஷ்டி முறை மூலம் தீர்க்கப்படுகின்ற போது நாங்கள் மத்திய அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்காது எங்களுடைய மக்களின் அடிப்படை வசதிகள் வாழ்வாதாரங்கள் தொழில் வாய்ப்புகளை நாங்களே கட்டியெழுப்பக்கூடிய ஒரு நிலை ஏற்படும்.

அந்த நிலையினை இந்த அரசாங்கம் வருட இறுதிக்குள்ளாவது செய்து முடிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

எதிர்க் கட்சிகளுக்கும் இப்படியான அபிவிருத்திப் பணிகளை அளித்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பை வழங்கியதற்காக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை கூறிக் கொள்கின்றேன்.” என இதன் போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: