இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி, படகுகளுக்காக காத்திருந்தனர்.
இங்கு நாமனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம் பிள்ளைகளை தேடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை அந்த தீவு தேசம் சிதைந்து போய் இருக்கிறது.
இம்முறை மனிதர்களுக்கிடையேயான தாக்குதலால் அல்ல. இயற்கை ஒரு பெரும் யுத்தத்தை அம்மண்ணின் மீது நிகழ்த்தி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த பெரும் மழைக்கு, ஏறத்தாழ 155 பேரை காணவில்லை என்று அரசு தரும் புள்ளி விவரங்களே சொல்கின்றன. இன்னும் ஆங்காங்கே மழை கொட்டி தீர்த்து கொண்டுதான் இருக்கின்றது.
கடும் மழைக்கு, இதுவரை 60 பேர் இறந்துள்ளனர். ஐந்து லட்சம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால், இப்போது பாதுகாப்பான இடமென்றே ஒன்று அங்கில்லை என்பது தான் பெருந்துயர். மே 15 மற்றூம் 16 ஆகிய இரண்டு தினங்களில் மட்டும், 100 மிமி பெய்த மழையால், தீவு தேசத்தின் தென் பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, “ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம்” என்றுள்ளார்.
இது எல்லாவற்றையும்விட துயர், மீட்பு பணியில் காணப்படும் தொய்வு தான். “எந்த விதமான நவீன தொழிற்நுட்பங்களும் இல்லாமல், நாங்கள் வெறும் கைகளால் குழி தோண்டி, மண் சரிவில் மாட்டிய மக்களை மீட்டு வருகிறோம்…” என்கின்றனர் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள்.
நூற்றுக்கணக்கானோர் மண் சரிவில் சிக்கி உள்ளனர். “மண் சரிவில் சிக்கியவர்கள், இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்கிற நம்பிக்கை போய்விட்டது” என்கிறார் மீட்பு பணிகளுக்கு பொறுப்பாளரான மேஜர் சுனந்தா ரணசிங்கே.
“எங்களால் இயன்ற அளவிற்கு நாங்கள் மக்களை நில சரிவிலிருந்து மீட்க முயற்சித்து வருகிறோம். சில பகுதிகளில் 30 அடி வரை குழி தோண்டி மக்களை மீட்டுள்ளோம்” என்கிறார் அவர்.
வடபகுதியில் மட்டுமல்ல, போரால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான தென்பகுதியும் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. முல்லைதீவில் மட்டும், ஒரே நாளில் 373 மிமி மழை பதிவாகி உள்ளது. இது அந்த பகுதியில் ஒரு ஆண்டில் பெய்யும் மழை அளவில் நான்கில் ஒருபகுதி என்கின்றனர் பேரிடர் மேலாண்மை மையத்தை (Disaster Management Centre) சேர்ந்தவர்கள்.
இலங்கையில் உள்ள மொத்தம் 25 மாவட்டங்களில், 9 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார் பேரிடர் மேலாண்மை மையத்தை சேர்ந்த பிரதீப்.
நிலச்சரிவு இலங்கையில் தொடர்கதையாகி வருகிறது. போருக்கு பின், அங்கு வெகு வேகமாக காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தான் அங்கு நிலச்சரிவு ஏற்படுகிறது. 2014 ஆம் அண்டு பெய்த கனமழையில் நிலச்சரிவில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டதேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
இந்தியா இரண்டு கப்பல் மற்றும் ஒரு போர் விமானம் முழுவதும் உதவி பொருட்களை நிரப்பி அனுப்பி உள்ளது. ஆனால், இது போதுமானதாக இல்லை. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, “உலக நாடுகள் சில உதவிகளை வழங்கி உள்ளன. ஆனால், இது நிச்சயம் போதாது. இந்த பெருந்துயரிலிருந்து மீள, மக்கள் மனம் உவந்து தாரளமாக நிதி அளிக்க வேண்டும்…” என்றுள்ளார்.
-http://www.tamilwin.com