ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசு சரியான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுப்பதைத் தவிர்த்துவிட்டு,
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பிலேயே கரிசனை செலுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்காரணமாக மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் நீதியைக் கோரி நிற்பவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசு நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், இலங்கை அரசு தற்போது அதனை கவனத்திற்கொள்ளாமல் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகின்றதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நீதியைக்கோரி நிற்பவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகள் விடுவிக்கப்படும் தினத்தை எதிர்ப்பார்த்துள்ளதாக மன்னிப்பு சபையால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் தமது குழுவினர் யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு சென்றபோது பலர் இன்னும் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருவதை காணமுடிந்ததாகவும் மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
-http://www.athirvu.com