இலங்கையை ஆட்டிப்படைக்கும் மேற்குலக சக்திகளால் தமிழன் அனாதை ஆகிறான்!

lanka_tamils_protestஇலங்கை அரசு சர்வதேச இனப்படுகொலை விசாரணையைத் தவிர்ப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அதைச் செயல்படுத்தி வருகிறது.

இதற்காகத்தான் ”முன்னாள் விடுதலைப்புலி கைது?” என்ற செய்தியை இலங்கை அரசு சமீப காலமாக பரப்பி வருகிறது.

அதன் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் இருக்கும் மேற்குலக சதி என்ன? அவைதான் அதிர்ச்சி தரும் செய்திகள்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தன்னைத் தானே சரி செய்துகொள்ள கொடுக்கப்படும் வாய்பாக ஐ.நா தீர்மானம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக, இலங்கை தனது சட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் குறித்தான நம்பகத்தன்மையைக் கொண்டு வரவேண்டும். தமிழர்களோடு நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பன போன்றவை.

மேலும், பரந்துபட்ட அளவில் இலங்கை அரசும் இராணுவமும் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டு இரண்டு சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கம் காண வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை முன்வைத்தது சர்வதேசம்.

இதில் தமிழர்களுக்கு உரிமைகளை பகிர்ந்தளிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப இலங்கையின் அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். என்பது போன்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி கொடுத்தது.

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடைபெறுவதை தடுப்பதற்காகவே இந்த வாக்குறுதிகளைக் கொடுத்தது. இந்த பரிந்துரைகளை செய்யச் சொல்லி மேற்குலகமே இலங்கைக்கு அறிவுரை கூறியது.

இவ்வாறு சில சீர்த்திருத்தங்களை செய்வதன் மூலம் இனப்படுகொலை மீதான விசாரணையை தவிர்த்துவிட முடியும் என இலங்கையோடு இந்தியாவும், அமெரிக்காவும் நினைக்கிறது.

சில சலுகைகளை தமிழர்களுக்கு தருவதன் மூலம் உலகத்தின் கண்ணில் இலங்கை அரசாங்கம் தன்னை திருந்திய நாடாகக் காட்ட முயற்சிக்கிறது.

இந்தத் திட்டத்தை முதலில் அமெரிக்காவும், மேற்குலகமும் முன் வைத்தது. இந்த திட்டத்திற்கு ராஜபக்ச ஒத்துழைக்கவில்லை மாறாக சீனாவின் ஒத்துழைப்பின் மூலம் தமிழின அழிப்பைத் தொடர்ந்தார்.

எனவே மேற்குலகிற்கு சார்ப்பான ஆட்சியை அமைக்க அமெரிக்கா திட்டமிட்டது. தமிழர்களை ஒடுக்கினாலும்கூட மேற்குலகின் நலனை நடைமுறைப்படுத்தும் அரசை, அமெரிக்கா விரும்பியது.

ஆனால் ராஜபக்ச சீனாவின் ஆதரவாளராக இருந்தார். சந்திரிக்கா மற்றும் ரணில் விக்கிரமசிங்க மேற்குலகின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள்.

மேற்குலகு சொன்ன சீர்திருத்தங்களை சந்திரிக்கா ரணில் கூட்டணி ஏற்று நடைமுறைபடுத்த ஒத்துழைத்தது.

இதன் அடிப்படையில் ராஜபக்சவை ஆட்சியிலிருந்து நீக்கி மேற்குலகின் புராஜெக்ட் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் படி ராஜபக்சவின் குழுவை உடைத்து, மைத்திரிபாலாவை வெளியில் எடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் வேலையை சந்திரிக்கா குமாரதுங்க தொடங்க செய்தார்.

இலங்கையில் ராஜபக்சவை ஆட்சி மாற்றம் செய்ய தமிழர்களின் உதவியும் தேவைப்பட்டதால் தமிழருக்கு நன்மை செய்வதை போன்ற பிம்பத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து இவர்கள் உருவாக்கினார்கள்.

இலங்கையில் மைத்திரிபால ஆட்சி ஏற்பட்டதை அமெரிக்காவும் மேற்குலகும் புகழ்ந்து ஐ.நாவின் மனித உரிமை கமிஷனில் பேசியதை நேரில் பார்த்தேன்.

இலங்கையில் மிகப்பெரிய மாற்றமும், சனநாயகமும் தழைத்து வளர்வதாக பேசினார்கள். உண்மை நிலை அப்படியா இருக்கிறது.

மைத்திரிபால அரசு ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், தமிழர்களுக்கு நன்மை கொடுக்கும் ஒரு நல்லிணக்க ஆணையத்தை அமைப்பதாகச் சொல்லியது.

இதன் தலைவராக சந்திரிக்கா குமாரதுங்கவை அமர்த்தினார்கள். இலங்கையில் ராஜபக்ச, ஜெயவர்த்தன போன்று தமிழர்களை மிக மோசமாக கொலை செய்தவரே இவர், செம்மணி என்னும் இடத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு 300 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

கோணேஸ்வரி என்ற பெண் பாலியல் வன்புணர்விற்கு உட்பட்டு அவரது பெண்குறியில் வெடிகுண்டு வைத்து வெடிக்கப்பட்டது.

இது போன்று பல ஆயிரம் கொலைகளைச் செய்த சந்திரிகா எப்படி நல்லிணக்கத்தை தமிழர்களிடத்தே ஏற்படுத்துவார்?

இன்னும் தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தை இலங்கை விலக்கவில்லை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிக்கவில்லை.

2009 போரின் போது கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. மேலும் பலரின் நிலை என்னவென்று தெரியவில்லை அரசியல் சாசனத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும் இல்லை.

தமிழர்களுக்கான உரிமைகள் கொடுக்கப்படவில்லை. நீதிமன்ற விசாரணைகள் நேர்மையாக நடப்பது போன்று தோற்றத்தைக்கூட இலங்கை ஏற்படுத்தவில்ல.

வெளிநாட்டு நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணை நடக்கும் என்று சொன்னது இலங்கை.ஆனால், சர்வதேச விசாரணை என்பதை மறைப்பதற்காகவே வெளிநாட்டு நீதிபதிகள் என்று சொன்னது இலங்கை. வெளிநாடு என்பது வேறு சர்வதேசம் என்பது வேறு.

இலங்கை அரசே தனக்கு ஆதரவான நாட்டில் இருந்து நீதிபதிகளை கொண்டு வந்து விசாரணை நடத்த முடியும்.

ஆனால், சர்வதேச விசாரணை எனும் முறையில் உலக நாடுகள் நீதிபதிகளை தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும்.

ஆனால் இலங்கை வெளிநாட்டு நீதிபதிகளை வைத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா முன் மொழிந்தது இதுவும் கூட குறைந்த பட்ச அளவில் நடக்கவில்லை.

இந்த குறைபாடுகளை மூடி மறைக்க இலங்கை பல பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறது. இது பல வழிகளில் நடக்கிறது.

இதில் ஒன்று விடுதலைப் புலிகள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை தொடர்ந்து பரப்பி வருவது.

அதற்கு சாட்சியாக சில போராளிகளை கைது செய்வதைப் போன்ற செய்திகளை அவ்வப்போது வெளியிடுகிறது.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்து அவ்வப்போது வெளியில் அனுப்பப்படுபவர்களா? என்று கூட தெரியாது.

ஆனால் இச்செய்தியின் மூலமாக விடுதலைப் புலிகள் தலைதூக்கி விடாமல் இருப்பதற்காகவே இலங்கை இராணுவத்தை தமிழர் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று நியாயப்படுத்த இச்செய்திகளை வெளிப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக மிக கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை நியாயப்படுத்துகிறது இலங்கை அரசு. கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யாமல் தவிர்த்தும் வருகிறது.

இதைக் கண்டித்து பலமுறை சிறைவாசிகள் போராட்டம் நடத்தியும் இலங்கை அரசு இவர்களை விடுதலை செய்யவில்லை.

சர்வதேசமும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆகவே புலிகள் மீள வருகிறார்கள் என்பதை இலங்கை அரசு தனது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துகிறது.

ஈழத்தில் மக்கள் திரண்டு நடத்தும் போராட்டங்களை இலங்கை அரசால் தடுக்க இயலவில்லை. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற இயலவில்லை.

அப்போராட்டங்களை நடந்து வருவதை மறைக்கவும் திசை திருப்பவும் பல செய்திகளை இலங்கை அரசே திட்டமிட்டு கூட்டமைத்து பரப்புகிறது.

இதே போல, இலங்கை இராணுவம் நிகழ்த்திய பாலியல் கொடுமைகள், கொலைகளை மறைக்க உளவியல் யுத்தம் தொடுத்திருக்கிறது.

தமிழர்களே தங்களுக்குள் பல்வேறு கொலை, பாலியல் வன்முறை ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றச் சமூக பிம்பத்தினை ஏற்படுத்த ஊடக பிரசாரத்தை செய்கிறது. இதற்காக ஒரு குழுவையே இயக்கி வருகிறது இலங்கை இராணுவம்.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து எவரும் கவலைப்படவோ, தட்டிக்கேட்கவோ தயாரில்லை.

தமிழர்களின் பிணங்களில் மீதும், தமிழ்ப் பெண்களின் ஆன்மாவைச் சிதைத்தும் தங்களது நலன்களை அமெரிக்காவும், இங்கிலாந்தும், சீனாவும், பாகிஸ்தானும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் இந்தியாவும் இணைந்திருப்பது தான் வேதனை.

ஒன்றுக்கொன்று பகையுணர்ச்சி கொண்ட இந்த நாடுகள் இந்தியப் பெருங்கடல் எனும் தமிழரின் பாரம்பரிய கடலை ஆக்கிரமிப்பதற்காக ஒன்றாக கைகோர்த்து தமிழர்களை அழிக்க துணை செய்கின்றன.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெளிநாட்டு சக்திகளையும் ஆங்கில படையெடுப்பையும் வீரமுடன் எதிர்த்து போரிட்ட தமிழன் இன்று அனாதையாக சிதைக்கப்படுகிறான் எனும் வலி வதைத்து கொண்டிருக்கிறது.

– Kumudam

TAGS: