ஊமையர் சபையிலே உளறுவாயன் வித்துவான்!!!

Maveerar-01“கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்” இது தமிழ் மக்கள் மத்தியில்ப புழக்கத்தில் இருந்து வரும் பழமொழி. இதனை நிரூபிக்கும் வகையில் சிலபுலம்பெயர்ந்த தமிழர்கள் நடந்து கொள்கின்றனர்.

புளிச்சல் ஏவறையுடன் உட்காந்திருந்து, இன்றைக்கு யாருக்கு துரோகிப் பட்டம் கொடுக்கலாம், யாரை யாருடைய முகவர் என கதை கட்டி விடலாம், யாருக்கு கிள்ளலாம் என்று சிந்தித்து செயலாற்றுவதே இவர்களது பொழுது போக்காக அமைந்து விட்டது.

ஆபத்தான சூழ்நிலைக்குள் இருப்பவர்கள் இவர்களது குற்றச்சாட்டுக்களுக்கு, வதந்திகளுக்குப் பதிலளிக்க முடியாது. அப்படிப் பதிலளிக்க முனைந்தால் அடுத்தக்கட்ட விசாரணை, சிறை போன்றவற்றை எதிர் கொள்ள நேரிடும் என்பதே இவர்களது பலம்.

இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான கோபு ஐயா (எஸ் .எம் . ஜி /எஸ் .எம்.கோபாலரத்தினம் ) “உனக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் இருக்கிறதா? அப்படியானால் அதை அச்சில் கொண்டுவர முயற்சிக்காதே. செய்தியானது நூறு சத வீதம் உண்மை என நம்பினால் மட்டுமே மக்கள் பார்வைக்கு கொண்டு செல்” என வலியுறுத்துவார், இவர்களோ தமது ஊகங்களையும், கற்பனைகளையும் கேள்விப்படும் வதந்திகளையும் உலகுக்குத் தெரிவிக்க முயற்சிக்கின்றனர்.

இதில் புனிதமான மாவீரர்கள் விடயம் கூடத்தப்பவில்லை, அதையும் கூட just a gossips என்றே கருதுகின்றனர். மாவீரர்கள் சம்பந்தப்பட்ட ஆக்கங்கள் முதலில் மு.நித்தியானந்தனால் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வெளிவர ஆரம்பித்தனர்.

பின்னர் `களத்தில்` பத்திரிகையில் கேணல் .கிட்டு தனது பாணியில் வெளியிட்டார். தொடர்ந்து ஈழ முரசில் 1986 – 1987 ல் ஒரு போராளியின் நாட்குறிப்பு என்ற பெயரில் ஒரு போராளி பலரது அனுபவங்களையும் கேட்டு எழுத்து வடிவத்தில் அதனைக் கொண்டுவந்தார்.

இந்தியப் படையினருடனான யுத்தத்தின் முடிவில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்களையும், புகைப்படத்துடன் வெளியிட தலைவர் தீர்மானித்தார். பிரபல ஊடகவியலாளரும், எழுத்தாளரும் சிறந்த வடிவமைப்பாளருமான ஒருவரை அழைத்து இந்தியாவில் இதனை அச்சிட்டு கொண்டுவருமாறு வேண்டினார்.

நயினாதீவுக்கு கூடக்கடலில் பயணித்தறியாத அந்த ஊடகவியலாளர் கடல் வழியாக இந்தியாவுக்கு பயணமானார்.

தலைவர் எதிர் பார்த்தவாறு லெப் . சங்கர் முதல் அதுவரை வீரச்சாவெய்தியவர்களின் விபரங்கள் அழகாக அச்சிடப்பட்டன. ஆனாலும் இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. ஒருவழக்கறிஞர் நாட்குறிப்பு, ஈழ நாதத்தில் மாவீரர்கள் விபரங்களை தந்துதவவும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு பின் கிடைத்த விபரங்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே இந்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மாவீரர் பட்டியல் என்பது எப்போதுமே முழுமையானதல்ல 27/02/1986 அன்று தாவடியில்தும்புச் தொழிச்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் வீரச்சா வெய்தியவர் லூக்காஸ் – நாவலப்பிட்டி எனக் குறிப்பிட்டிருக்கும், தாய் ,தந்தை, பிறந்த திகதி , முகவரி, யார் மூலம் இயக்கத்தில் இணைந்தார். என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது.

உரும்பிராய் மயானத்தில் கொள்ளி வைத்தவருக்கும் தெரியாது. 1991 ல் உறுப்பினர் படிவம், இலக்கத் தகடு என்ற விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்ட பின்னரே நிலைமை ஓரளவு சீரமைந்தது. இதை விட ஏற்கனவே மாவீரர் எனகுறிப்பிடப்பட்ட மாவீரர்களின் பெயர்களின் சில பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.

இதில் பிராந்திய தளபதியாக விளங்கிய ஒருவரது பெயரும் அடக்கம். சில இடங்களில் படையினரால் கொல்லப்பட்டவர்களை மாவீரர்கள் என கருதி பெற்றோர் தகவல் அனுப்பி இருந்தனர். காரைநகர், கல்முனை போன்ற இடங்களில் இருவரது பெயர்கள் இவ்வாறு தவறுதலாக இணைக்கப்பட்டிருந்தன.

இயக்கத்திற்கென அழைத்துக் கொண்டு வருகையில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டோர், முகாம்களில் வைத்து இயக்கப்பெயர் அறிவிக்கும் முன்னரே குண்டு வெடிப்பில் வீரச்சாவடைந்தனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போராட்டத்திற்கென கொண்டு செல்லப்பட்டு சில மணிநேரத்துக்குள்ளாகவே வான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் (இச் சம்பவங்கள் இரணைப்பாலை உட்பட பல இடங்களில் நடந்தன) இவ்வாறானவர்கள் சொந்தப் பெயருடனே மாவீரர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவர்கள்.

மாவீரர் பணிமனை பொன் . தியாகம் ஐயா தலைமையில்அமைக்கப்பட்ட பின் ஈழ நாதத்தில் சு .ப .தமிழ்ச்செல்வன் கஸ்ரோ , மலரவன்,உள்ளிட்ட பல போராளிகளால் எழுதி வெளியிடப்பட்ட “விழுதுகள் ` விடுதலைப்புலிகள் பத்திரிகையில் வெளியாகின .

“போராளியின் குருதிச் சுவடுகள்” மற்றும் சுதந்திரப் பறவைகளில் வெளிவந்த மாவீரர் பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுதி ஆகியன மாவீரர் நாளை முன்னிட்டு வெளிவந்தன.

சில கால கட்டங்களில் மாவீரர்களின் பெயர்கள் , வீரச்சாவு நாள், சம்பவம் முதலானவிடயங்களில் ஏற்பட்ட தவறுகளை சீரமைக்கும் பணியில் பொன் .தியாகம் ஐயா எழுத்து மூலமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அரசியல்துறை மூலமாக பிரதேசப்பொறுப்பாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இதேவேளை இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஊடகவியலாளர் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மிகுந்த சிரமத்துடன் கொண்டுவரப்பட்ட அந்த மாவீரர் குறிப்பேட்டை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் மாவீரர் பணிமனை ஆரம்பிக்க முன்னரே இருந்த விபரங்களின் படிதான் இக் குறிப்பேடு தொடர்பான பணிகள் தொடங்கியதால் அவர் மீதும் தவறு இல்லை.

எனவே இதற்கு பொன் . தியாகம் ஐயாவோ. வேறேவரோ பொறுப்பு அல்ல. எதோ ஒரு புள்ளியில் இருந்துதான் பணி ஆரம்பிக்கப்பட வேண்டும். தவறியிருந்தால் திருத்தவே ஈழநாதமும், தமிழீழ மாவீரர் பணிமனையும் முயன்றன. இன்னொரு முக்கியமான விடயம் 14/02/1987அன்று கைதடியில் நடந்த குண்டுவெடிப்பில் சில போராளிகள் வீரச்சாவெய்தினர்.

சில பொது மக்களும் கொல்லப்பட்டனர். 1991ஆம் ஆண்டு வெளிவந்த சில மாவீரர்கள் தொடர்பான விளம்பரங்களில் இதே சம்பவத்தில் வீரச்சவெய்திய ஏனைய மாவீரர்களோ உயிழந்த பொதுமக்களோ நினைவுகூரப்படவில்ல, எனவே நினைவு கூருகிறோம் என்ற பெயரில் நாளாந்தம் ஒரு விளம்பரம்வெளியானது.

கடந்த வருடங்களில் அதே நாளில் வீரச்சாவடைந்த படை மற்றும்பெரும்பான்மைக் காடையரின் தாக்குதலின் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவுகூரப்பட்டனர். ஆனையிறவுத் தாக்குதல் போன்றவற்றில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் பலர்வீரச்சாவெய்தினர். மற்றும் பத்திரிகைத்தாள்கள் தட்டுப்பாடு போன்றவற்றால் இந்த விளம்பரத்தை தொடர்ந்து வெளியிடமுடியவில்லை.

இந்த விளம்பரங்கள் வெளிவந்த நாட்களில் ஒருவர் ஈழ நாதத்திற்கு வந்து பிரதம ஆசிரியர் பொ. ஜெயராஜை சந்தித்தார். பேராசிரியரான இவர் பின் நாளில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராகவும் விளங்கியவர்.” உலகெங்கும் இன அழிப்பில் கொல்லப்பட்ட ஒவ்வொரு யூதரின் பெயரும ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எல்லா யூதருமே ஐக்கியத்துடன் இப்பணியில் ஈடு பட்ட தால்இம் முயற்சி சாத்தியமானது. உங்களை நினைவு கூருகிறோம் பகுதி இப்பணியைத் தொடங்கியுள்ளமை நல்ல முயற்சி ” எனப் பாராட்டினார்.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட முழுத் தமிழரின் விபரங்கள் இன்னும்ஆவணப்படுத்தப்படவில்லை மாவீரர்களின் நிலைமையும் அவ்வாறே. வீணான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஊமையர் சபையிலே உளறுவாயன் வித்துவான் போல் செயல்படுகிறவர்கள் இனிமேலாவது பயனுள்ள பணிகளில் ஈடுபடுவதே ஈழத் தமிழினத்துக்கு ஆற்றும் சிறுதொண்டாகும்.

-http://www.tamilwin.com

TAGS: