இலங்கை கடினமான நீதிப்பொறிமுறை தொடர்பான பயணத்தை ஆரம்பித்துள்ளது: ஐ.நா விசேட பிரதிநிதி

ununகடந்த 13ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபை 32வது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில், ஈழத் தமிழர்கள் தொடர்பில் பேசப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அங்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நிகழ்ச்சிநிரல் காணப்படவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் இலங்கை சென்றிருந்த, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்துக்கான ஐ . நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்ரோ அவர்கள் நேற்றைய தினம் உரையாற்றுகையில்,

தன்னுடைய இலங்கை விஜயம் சிறப்பாக அமைந்ததாகவும், தனது விஜயத்தில் சித்திரவதை மற்றும் கொடூரமான அல்லது மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் தண்டனைத் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜுஹான் , மென்டிஸ் இணைந்துகொண்டதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தம்மை ஸ்ரீலங்காவிற்கு அழைத்தமைக்காகவும், ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவும் ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை சீர்திருத்தங்களை செய்வது குறித்த மாற்றங்களைச் செய்வது தொடர்பிலான ஆர்வம் குறைந்து விடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடினமான எனினும் அவசியமான இடைநிலை நீதிப்பொறிமுறை தொடர்பிலான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் தான் ஸ்ரீலங்காவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலான விரிவான அறிக்கையை அடுத்த வருட அமர்வில் சமர்ப்பிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனியை தளமாகக் கொண்டியங்கும் Society for Threatened Peoples International (STPI) அமைப்பினால் இன்றைய தினம் 3:30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலந்தாய்வில் சனல் 4 கெலம் மைக்ரே உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள் எனவும் அதில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: