“உச்சிதனை முகர்ந்தால்” – சிறப்புக் கண்ணோட்டம்

கவிதை பேசும் விழிகள் முழுக்க கனவுகளோடு மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் பட்டாம்பூச்சி போல் சுற்றித் திரிந்த புனிதவதி என்ற 13 வயது ஈழத்துச் சிறுமியின் வாழ்க்கை எப்படி சிதைந்து போகிறது என்ற உண்மைக் கதையை உருக்கமாகச் சொல்கிறது “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படம்.

இனவெறி சிங்களத்தினால் சிதைத்துச் சீரழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவிக் தமிழ்க் குழந்தைகளின் வரலாற்று ஆவணம் “உச்சிதனை முகர்ந்தால்”.

தாய்த் தமிழகத்திலிருந்து 26-வது மைலில் என்ன நடந்தது? என்பதை அதிர்ச்சியோடு சித்தரிக்கின்ற நேரடி சாட்சியமாக உலகத் தமிழ் மக்களைச் சந்திக்கிறாள், 13 வயது மட்டக்களப்பு பள்ளி மாணவி புனிதவதி.

“கள்ளங்கபடமில்லாத அந்தச் சிட்டுக்குருவியின் சிறகுகள் 2009 மார்ச் முதல் சிறுகச் சிறுக உதிர்ந்து போவதைச் சித்தரிக்கும் கண்ணீர்க் கவிதை, உச்சிதனை முகர்ந்தால். இந்தப் படத்தைப் பார்க்கும் எவரையும் அந்தப் புனித நதியின் பயணம் இளகவைக்கும்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.

சத்யராஜ், நாசர், சீமான், சங்கீதா, இலட்சுமி இராமகிருஷ்ணன், லாவண்யா, ஈழத்து மைக்கேல் ஜாக்சன், பிரேம்கோபால் என்று நீளும் நட்சத்திரக் கூட்டத்துக்கு இடையில், புனிதவதியாக நடித்திருக்கும் சிறுமி நீநிகா, துருவ நட்சத்திரம் போன்று மின்னுகிறாள்.

இவர்களோடு இன்னொரு கதாபாத்திரமாக வரும் அமுதன் என்கிற நாய், ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வு கூட தமிழனுக்கு இல்லாது போய்விட்டதோ? என்கிற தன்னிரக்கத்தைத் தூண்டி விடுகிறது. படத்தில் வருகிற அத்தனை கதாபாத்திரங்களோடும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறது, அந்த ஐந்தறிவு அற்புதம், அமுதன்.

இந்தப் படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது, காசி ஆனந்தனின் கவி வரிகளும் டி. இமானின் இணையற்ற இசையும்.

“உச்சிதனை முகர்ந்தால்…” என்ற பாடலில் இடம்பெறும் – “பனிச்சங்கேணி நண்டு வாங்கிவந்து கறியாக்கிக் கடிக்கனும், பதுங்கு குழிக்குள்ளும் நிலவொளியில் நான் புத்தகம் படிக்கணும்…” என்ற காசி ஆனந்தனின் வரிகள் ஒரு கவிதையைப் போல காட்சியாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பி. கண்ணன் மற்றும் அழகிய மணவாளனின் ஒளிப்பதிவு, பி. லெனின் மற்றும் மாருதியின் படத்தொகுப்பு, தமிழருவி மணியனின் வசனங்கள், காசி ஆனந்தன் மற்றும் கதிர்மொழியின் பாடல்கள் என்று ஒவ்வொரு அம்சமும் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளன.

தணிக்கைக் குழு இந்தத் திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. தமிழ் திரைப்பட வரிசையில் மோதும் “உச்சிதனை முகர்ந்தால்” படத்தை நாம் உச்சி முகர்ந்து உவகையுடன் வரவேற்கவேண்டியது மிக மிக அவசியம்.

நல்லபடங்கள் வருவதில்லை, அப்படியே வந்தாலும் தமிழர் அவலத்தைச் சித்தரிப்பதில்லை என்பது நமது நீண்ட நாள் ஆதங்கம். அந்த ஆதங்கத்தைத் தீர்க்கும் வகையில் வெளிவந்துள்ளது உச்சிதனை முகர்ந்தால்.

இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தரைவிறக்கம் (Download) செய்ய இங்கே அழுத்தவும்

படத்தைப் பற்றிய குறிப்பு…

13 வயது ஈழத்துச் சிறுமி சிங்கள காடையர்களால் கற்பழிக்கபடுகிறாள். அதன் பின்னர் அவள் தமிழ்நாட்டுக்கு வரவழைக்கப்படுகிறாள். அங்கு ஒரு இயக்கத்திற்கு ஆதரவு தரும் ஒருவர் வீட்டில் தங்க வைக்கப்படுகிறாள். அவர் முழுநேர இயக்கத்திற்காக தனது மனைவியையும் சேர்த்து கொண்டு பாடுபடுகிற ஒருவர்.

ஈழத்திலிருந்து வந்த அந்த 13 வயது பெண்ணின் வயிற்றில் வளரும் குழுந்தை ஒரு சிங்களவனுடையது அதை அழித்து விடுங்கள் என்கிறாள் அவளின் தாய். ஆனால் தங்க வைத்தவர் எவ்வுயிருக்கும் தீங்கு விளைவிக்க கூடாது என்று சொல்லி அக்குழந்தை கருவில் இருக்கும் போதிலிருந்து பார்த்து கொள்கிறார்.

13 வயது இளம்பெண் படும் பாடும் அவள் தமிழீழத்தில் பட்ட வேதனையும் சொல்லி படம் நகர்கிறது. அதிர்ச்சி… தாய்க்கும் சேய்க்கும் எய்ட்ஸ்! படத்தின் மீதியை திரையரங்கில் காணுங்கள்..

சத்யராஜ், சீமான், சங்கீதா, நாசர் ஆகியோர் படத்தில் மிக யதார்த்தாமாக நடித்து உள்ளனர். 13 வயது குழந்தையாக வரும் சின்ன பெண்ணின் நடிப்பு மிரட்டல்… பாடல்கள் சுமார். பிண்ணனி இசை அருமை. இடை இடையில் வசனம் தணிக்கையாளர்களால் கட் கட் கட் (அதுவும் சத்யராஜ், நாசர் பேச்சு) ஆனாலும் உணர்வாளர்களுக்குப் புரிய முடிகிறது… வசனம் நச் நச்… (நாமமெல்லாம் தமிழனா? என்று என்னத் தோன்றுகிறது).

படத்தில் ஒரு கருப்பு நாயின் நடிப்பு மனிதர்களையே மிஞ்சிவிடுகிறது… பிரமாதம்… (நாய்க்கு இருக்கும் ஈரம் தமிழனுக்கு இல்லையே என்று உணர்த்துகிறது).

“உச்சிதனை முகர்ந்தால்” படம் – இந்தியாவுக்கு ஒரு சவுக்கு அடி!!!

– தமிழ்நாட்டிலிருந்து சட்டப்புலி