தமிழினி – புலிகளை அறிந்தவர்களுக்கு புதுப்பெயர் அல்ல. மகளிர் படைப் பிரிவினின் மகத்தான போராளியாக முதலிலும், அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இறுதியிலும் இருந்தவர்.
இறுதிக் கட்டப் போரின் இறுதியில் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்தவர்.
புற்றுநோய் பாதிப்பால் தனது இறுதிப் பயணத்தை 43 வயதிலேயே அடைந்தவர்.
மக்களின் மகிழ்ச்சியே தனது சொந்த சுகம் என வாழ்ந்தவர்.
இறுதியில், ஜெயக்குமரனைத் திருமணம் செய்து இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவாக வாழ்ந்தவர்.
அப்படிப்பட்ட தமிழினியின் தன் வரலாறு கோபமும், சோகமும் அப்பிய சொற்களால் சேர்த்து எழுதப்பட்ட ஈழ வரலாற்றின் ஒரு துளி.
குமரபுரம் முருகன் கோயிலில் பாவாடை தாவணியில் நடந்து போன சிவகாமி, ‘இராசாத்தி மனசிலே’ என்ற பாடல் ஒலித்ததும் தன்னைப் பார்த்துத்தான் பாடுகிறார்களோ என்று கூச்சப்பட்டுப் போனதும் –
இயக்கத்தில் இருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தன.
எனக்குத் தரப்பட்டிருந்த கடமைகளுக்கு அப்பால் தேவையற்ற உணர்ச்சிகள் என்னை ஆட்கொள்ளாத வண்ணம் எனக்கு நானே சில வரையறைகளை ஏற்படுத்தி இருந்தேன் என்று தமிழினியாய் கம்பீரமாகச் சொல்வதற்கும் – இடைப்பட்ட 30 ஆண்டுகள்தான் இந்தப் புத்தகம்.
நீங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக இருந்தால் உங்களுக்குப் பெருமை ஏற்படுத்தும் நிகழ்வுகள் இதில் ஏராளம் உண்டு.
நீங்கள் புலிகளின் எதிர்ப்பாளர் என்றால், உங்கள் எதிர்ப்புக்குப் பயன்படும் ஆதாரங்களும் இதில் உண்டு.
இந்த இரண்டையும் சம விகிதத்தில் சொல்லும் அருகதை தமிழினிக்கு மட்டும்தான் உண்டு. அதை நேர்மையுடன் செய்துள்ளார்.
சமூகப் பண்பாட்டைத் துல்லியமாக கடைப்பிடித்த இயக்கம், இராணுவ சாகசப் பண்பாட்டில் மூழ்கிப் போனதை மட்டுமே தமிழினி கடுமையாக விமர்சிக்கிறார்.
புலிகளின் தோல்வி, இனத்தின் வீழ்ச்சியை விட தமிழினி சொற்களில் சுடுவது, ஒரு பெண்ணாய் வாழ்வதன் துன்பம். போராடப் போன பெண், போராட்டத்தின் தோல்விக்குப் பிறகு நடத்தியாக வேண்டிய வாழ்க்கைப் போராட்டம் குறித்து தமிழினி சொல்லும் ஒவ்வொரு சொல்லும் கொல்லும்.
இப்படி முடிக்கிறார் தமிழினி.
பெண்கள் போராடப் போனது தவறல்ல… அவர்கள் உயிருடன் மீண்டு வந்ததுதான் தவறானது.இதுதான் முன்னாள் போராளிப் பெண்கள் சந்திக்கும் சமூகப் போர்க்களம்.
– Vikatan