இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவுள்ள ஐ.நா.?

zeid_zeidஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் இதனூடாக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

அதாவதுஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கே இந்த கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் 29ம்திகதி புதன்கிழமை ஜெனிவாவில்உரையாற்றவுள்ள வெளிவிவகாரஅமைச்சர் மங்கள சமரவீர வடக்கில் காணி விடுவிப்பு இராணுவம் குறைக்கப்படுதல் சர்வதேச நீதிபதிகள் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள்தொடர்பில் முழுமையாக விளக்கம் ஒன்றை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக உள்ளக விசாரணை பொறிமுறையில்சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் எடுத்துக்கூறவுள்ளார்.

மேலும் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தும் அமைச்சர் சமரவீர ஜெனிவாவில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்ட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையை வெளியிட்டதும் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன்போது மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளன.

இதேவேளை இந்தக் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது ஜெனிவா பிரேரணையை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தும் என கூறப்படுகின்றது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமைவாக அரசாங்கமானது உள்ளக விசாரணை பொறமுறையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இநதப் பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்ற நிலையில் அரசாங்கமும் இதனை முழுயைமாக அமுல்படுத்த தயார் என கூறிவருகின்றது.

எனவே அந்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் வெளிவிவவாகர அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளார்.

அதுமட்டுமன்றி பாராளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக தான் எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லை என கூறி வருகிறார். எனவே இது தொடர்பில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்கும் என நம்பப்படுகின்றது.

கடந்த 13ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32வது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசேன் இலங்கையானாது நீதி வழங்கும் செயற்பாடு தொடர்பான பொறிமுறையின் உபாய மார்க்கத்தை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹசேன், சர்வதேச நீதிபதிகளை கொண்டு வருவதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாடானது நம்பிக்கை தருவதாக அமைய வேண்டுமெனவும் செயிட் அல் ஹூசேன் கூறியிருந்தார்.

-http://www.tamilwin.com

TAGS: