தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையை உணர்ந்து அரசாங்கத்தின் மீதுநம்பிக்கை வைத்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படை வாதத்திற்கு அரசு ஒருபோதும் அடிபணியாது.
மிதவாத கொள்கையுடையவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் எப்போதும் தயார் என்று சபை முதல்வரும், உயர்கல்விமற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தரமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பும் தமிழ் மக்களும் ஆதரவு வழங்கி வெற்ற பெறச் செய்தார்கள்.
அதேபோன்று ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு ஆதரவு வழங்கினார்கள்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இந் நாட்டு மக்கள் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஆணை வழங்கினார்கள்.
எனவே இனப்பிரச்சினைக்கு வெ ளிப்படைத்தன்மையா தீர்வை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலாகும்.
நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் உள்ளன. அதற்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். அதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.
இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைவருக்கும் சமத்துவம் என்ற அடிப்படையில் தீர்வை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
எனவேதான் அரசாங்கத்தின் முன்னகர்வுகளின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதன் எதிர்க்கட்சி தலைவரும் இரா.சம்பந்தன் அரசுக்கு ஆதரவை வழங்குகின்றனர்.
சம்பந்தனும் கூட்டமைப்பும் இன்று உண்மையை புரிந்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்லாட்சியுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
சர்வதேசம் இன்று இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்காகஅரசாங்கம் படிப்படியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆரம்பித்துள்ளது.
அத்தோடு ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவிலும் கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இன்று அனைத்தும் எமது நாட்டுக்கு சாதகமாக அமைந்துள்ளன.
சிங்கள பௌத்தர்களுக்கு முன்னுரிமை வழங்குவதைப் போன்று தமிழ், முஸ்லிம் உட்பட அனைவருக்கும் சம அந்தஸ்து வழங்குவதே அரசின் நோக்கமாகும்.
எனவே 1950 களிலிருந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை தட்டிக்கழித்ததன் காரணமாகவே 30 வருடகால யுத்தம் நாட்டில் தலையெடுத்தது. அதேபோன்று மஹிந்த ராஜபக்சவின் கடந்த கால ஆட்சியில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டு மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு “காட்டு தர்பாரே ” இடம்பெற்றது.
ஆனால் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் தலைமையிலான நல்லாட்சியில் நாட்டில் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்தில் தனிமையாக்கப்பட்ட இலங்கை இன்று சர்வதேசத்தின் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்து இருப்பது அரசின் மிதவாதப் போக்கிற்கும் தேசிய நல்லிணக்கத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.
அதேவேளை வடக்கில் படிப்படியாக இராணுவ முகாம்கள் நீக்கப்படும். மக்களின் சிவில் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். இன்றைய ஆட்சியில் தமிழ் மக்களின் சுதந்திரமான நடமாட்டமும் ஜனநாயகமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டு அவர்களை சொந்த மண்ணில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு பூர்த்தி செய்யும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றார்.
-http://www.tamilwin.com