லிந்துலை தோட்ட மக்களின் அவலக்குரல் யாருக்கும் கேட்காதோ!

pic01லிந்துலை வலஹா தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் 33 வீடுகளை கொண்ட லயன் பகுதிகளில் வாழும் 150 இற்கு மேற்பட்ட மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகமான குடும்பங்கள் வீடு வசதிகள் இல்லாமல் இவர்களால் அமைக்கப்பட்ட தற்காலிகமான வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வீடுகளில் அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் சிறிய இடத்தில் 05 தொடக்கம் 08 பேர் வரை வசிக்கின்ற போதிலும் அங்கு காணப்படும் சில வீடுகள் வெடிப்புற்ற நிலையில் காணப்படுகின்றது.

மேலும் குடி நீர் வசதிகள் இருக்கின்ற போதிலும் முறையான நீர் குழாய்கள் பொருத்தப்படவில்லை. அத்தோடு மலசல கூட வசதிகள் இல்லை. வடிகால்கள் செப்பனிடப்படாமல் உடைந்த நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாதை சீர்கேட்டின் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் இருப்பதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் வைத்தியசாலை செல்வதாகவிருந்தால் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லிந்துலை ஆதார வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். இதன் போது இவர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைமை உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தோட்டத்தில் இரண்டு சிறுவர் நிலையங்கள் உள்ளது. இந்த குடியிருப்புகள் அதிகமான தூரங்களில் காணப்படுவதால் சிறுவர்களின் நலன் கருதி இரண்டு சிறுவர் நிலையங்கள் இயங்கி வந்த போதிலும் கடந்த வாரம் தோட்ட அதிகாரி பகுதியில் உள்ள சிறுவர் நிலையத்தினை மூடியதாகவும், இதனால் தங்களின் குழந்தைகளை சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் காலைவேளையில் இதனால் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் ஒரு பகுதிக்கு மாத்திரம் மேற்கொள்ளப்படுவதாகவும் தாங்கள் வாழும் பிரதேசத்திற்கு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் மலையக அரசியல் தலைவர்கள் பாரபட்சம் காட்டுவதாக லயன் பகுதியில் வாழும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: