இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியா நேரடியாக தலையிடாது!

india-sri-lankaஇலங்கை வியத்தில் இந்தியா நேரடியாக தலையிடாது என புதுடெல்லியில் உள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்கள், 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதன் போது இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்க்கொள்ளப்பட்ட சமரசம் மூலமும் அதிகளவான இழப்புகளை இந்தியா சந்தித்துள்ளது.

அந்த அனுபவமும், இலங்கை தொடர்பான முப்பது ஆண்டுகால அனுபவமும் எமக்கு அதிகமாகவே உள்ளது.

தமிழ் மக்களை பாதுகாக்கவே நாம் செயற்பட்டோம். எனினும் இந்த செயற்பாட்டால் வடக்கு, கிழக்கில் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய படையினர் இறந்தனர்.

இந்த கசப்பான அனுபவம் எமக்கு இன்றும் உள்ளது. இலங்கைக்கு நாம் ஆதரவை வழங்கவும் ஆலோசனைகளை வழங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

ஆரம்பத்தில் இருந்து நாம் எம்மாலான அனைத்து உதவிகளை வழங்கி வந்தோம். 13வது திருத்தத்தை நாம் முன்வைத்த போதும், அதில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என நாம் தெரிவித்தோம்.

அப்போதைய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டாலும் இதுவரையில் 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

நாம் இந்த விவகாரத்தில் எம்மாலான முயற்சிகளை செய்தாலும், இறுதியான தீர்வை இலங்கை அரசாங்கமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதில் எம்மால் நேரடியாக தலையிட முடியாது. இலங்கையின், நீண்டகால முரண்பாடுகளை தீர்க்க வேண்டுமாயின் அதில் எமது நேரடியான தலையீடுகள் எதையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என நாம் நம்புகிறோம்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நேரடியான தலையீடுகள் எவையும் இருக்கப் போவதில்லை.

மேலும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இலங்கை தமிழர் தரப்பு தெரிவித்த போதிலும் எம்மால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சமஷ்டி தீர்வு ஒன்றை முன்னர் முன்வைத்தார்.

எனினும், தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அப்போது அதை எதிர்த்தது. சந்திரிகா குமாரதுங்க பல தடவைகள் சமஷ்டி கதைகளை கூறியே தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

ஆனால் இன்று சமஷ்டி என்பது ஒரு மோசமான வார்த்தையாக இலங்கையில், மாற்றம்பெற்று விட்டது. கடந்த அரசாங்கம் இந்த விவகாரத்தை மாற்றிவிட்டது.

எனவே, இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிடப் போவதில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

– Puthinappalakai

TAGS: